Monday, June 17, 2024
Home » 24 மணி நேர வரி விதிப்பு நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது

24 மணி நேர வரி விதிப்பு நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது

- பதிலாக மாற்று வழிகள் பல இருப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
May 25, 2024 8:52 pm 0 comment

இந்நாட்டின் பிரச்சினைகளுக்கு 24 மணி நேரமும், தினசரியும், நொடிக்கு நொடியும், வரி விதிப்பது தீர்வாக அமையாது. பொருளாதார வளர்ச்சிக்கான ஏற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்த பொருளாதார வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் வங்குரோத்தான நாட்டில் தற்போது நட்புவட்டார முதலாளித்துவம் செயல்பட்டு வருகிறது. இலஞ்சம், ஊழல், கொமிஸ் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும்

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 199 ஆவது கட்டமாக ரூ. 1,177,000 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (25) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் நாட்டின் வருமானத்திற்கும் கூட வரி விதிக்கப்பட்டு வருகிறது. பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புக்கு மட்டுமே தற்போது வரி விதிக்காதுள்ளனர். இவ்வாறான வரிகளை விதிப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் பல இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. இதனால் தான் அவர்கள் வரிக்கு மேல் வரி விதித்து வருகின்றனர். பொருளாதாரத்தை சுருக்கும் வேலைத்திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர். இத்தகைய சுருங்கிய பொருளாதார கொள்கை முன்னெடுக்கப்பட்டு வருவதால் வறையறுக்கப்பட்ட வருமானத்தையே ஈட்டி வருகின்றனர். இது போதாமையினால் நாட்டின் வருமானத்தை ஈடுகட்ட இஷ்டம் போல வரிவிதித்து வருகின்றனர்.

இந்நிகழ்வின்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இன்று நாட்டில் இடம்பெற்று வரும் திருட்டு, ஊழல், மோசடி, சுரண்டல்களுக்கு புறம்பாக இந்த பிரபஞ்சம் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதனால் இதற்கு அனுசரணை வழங்க பெருமளவிலான நன்கொடையாளர்கள் தயாராக உள்ளனர். இங்கு 10%, 20% கொமிஸ் கோரப்படுவதில்லை. வெளிப்படத்தன்மையோடு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், சாதி, மதம், வர்க்கம், கட்சி வேறுபாடுகள் இன்றி, பெரும்பான்மையினர் இத்திட்டத்தை பாராட்டினாலும், சிறு தரப்பினர், வாய்ச் சொல் தலைவர்கள் இதனை விமர்சித்து வருகின்றனர். விமர்சிக்கும் தரப்பினர் தமது கூட்டங்களுக்கு செலவழிக்கும் கோடிக்கணக்கான பணத்தை பாடசாலைகளுக்கு வழங்கினால் இது மேலும் பயனுள்ளதாக அமையும். ஆனால் அவர்கள் இவ்வாறான பயனுள்ள செயல்பாடுகளை முன்னெடுப்பதை விடுத்து இலவச கல்வியை மேலும் பின்னோக்கி கொண்டு செல்லும் விதமாக நடந்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT