Monday, June 17, 2024
Home » கிளிநொச்சியில் 1,700 முழு உரிமை காணி உறுதிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் 1,700 முழு உரிமை காணி உறுதிகள் வழங்கி வைப்பு

- நாட்டை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்யும் விவசாயிகளின் நில உரிமையை உறுதி செய்ய முடிந்திருப்பது அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றி

by Rizwan Segu Mohideen
May 25, 2024 3:19 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருதிட்டத்தின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கலற்றவகையில் பூரண காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி இன்று (25) முற்பகல் இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய 1700 முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டதுடன், அடையாள ரீதியாக சில உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரிசியில் தன்னிறைவு அடையவதற்குப் பக்காற்றி வரும் வன்னி மாவட்ட மக்களுக்கு இந்தக் காணி உரிமையை வழங்க முடிந்தமை அரசாங்கம் பெற்ற தனித்துவமான வெற்றியாகும்.

கிளிநொச்சியில் பெண்கள் சுகாதார பராமரிப்பு விசேட நிலையம்

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் நவீன விவசாயத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாயிகளின் காணி உரிமையை உறுதிப்படுத்துவது இந்த வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுக்க உதவும் எனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

நான் மேடைக்கு வர முன்னர் மேடையில் அற்புதமான நடனமொன்று அரங்கேற்றப்பட்டது.

விவசாயிகளின் பெருமையை அவர்கள் அந்த நடனத்தில் எடுத்திக் காட்டியிருந்தார்கள். கிளிநொச்சி பிள்ளைகளிடம் இருக்கும் விசேட திறமையைக் கண்டோம். அவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். கிளிநொச்சி நகரம் துரிதமாக வளர்ந்து வருகிறது. மாகாண சபைகளின் கலாச்சார பிரிவுகளுடன் கலந்துரையாடி இவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று கலந்துரையாடவுள்ளேன்.

“உருமய ” வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட மக்களுக்கு காணி உறுதி

நேற்று யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் சிறந்த பாடல்களை செவிமடுத்தேன். நீண்டகாணி காலத்தின் பின்னர் இவ்வாறு சிறந்த பாடல்களைக் கேட்டேன். தென் இந்தியாவில் இருந்து இசைக்குழுவொன்றை அழைத்துவந்து யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்துமாறு இளைஞர் சேவை மன்றத்திடம் கோரிக்கை விடுத்தேன். அதில் நீங்களும் கலந்து மகிழ முடியும்.

தற்போது மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்க இங்கு கூடியுள்ளோம். இந்த உறுதிகளை வழங்க முன்னர் மாகாண ஆளுநர்களின் அனுமதியைப் பெற்றுக்கொண்டோம்.

வெள்ளையர்கள் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் இந்த காணிகள் வழங்கப்படுகின்றன.

வெள்ளையர்கள் இந்தக் காணிகளைப் பாதுகாத்தனர். நீங்களும் இந்தக் காணிகளைப் பாதுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு பாராளுமன்ற குழுக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளேன். உண்மையில் இந்த காணி உரிமைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும். எமது விவசாயிகள் அரிசியல் தன்னிறைவு அடைந்த நாட்டை உருவாக்கியுள்ளார்கள்.

2003ஆம் ஆண்டு நான் பிரதமாக இருந்தபோது அரிசியில் தன்னிறைவு அடைந்தோம். அதற்கு முன்னர் இந்த நிலைமை இருக்கவில்லை. அப்போது வன்னிப் பிரதேசம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் உரம் அனுப்புவது குறித்து ஆராய்ந்தோம். உரத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடும் என்ற அச்சம் இருந்தது. இதுகுறித்து உயர் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.

யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் வன்னிப் பிரதேசத்திற்கு உரத்தை வழங்கினோம். 2003ஆம் ஆண்டு அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றது. அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததில் வன்னி, அநுராதபுரம், பொலன்னறுவ மாவட்டங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

தற்போது சிலருக்கு காணி உரிமை கிடைத்துள்ளது. விவசாயக் காணி உரிமை கிடைக்கிறது. நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதனைப் பயன்படுத்தி, போட்டித் தன்மைமிக்க விவசாயத்துறையை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இதன்மூலம் விவசாயத்துறை வளர்ச்சி பெறும். உலக சனத் தொகையும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் அதிகரித்து வரும் சனத் தொகைக்கு எங்களுக்கு உணவளிக்க முடியும். தற்போது நாம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டத்தில் வன்னிக்கு மிகப் பெரிய வகிபாகம் இருக்கிறது.

உங்களின் காணிகளை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். போரினால் காணிகளை இழந்தவர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். தற்போது கிடைக்கும் காணிகளை இழந்துவிடக் கூடாது. நீங்கள் இந்தக் காணிகளில் விவசாயம் செய்து. வீடுகளைக் கட்டி அவற்றை உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்குகள். இந்த பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதனை நீங்கள் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நாடு தழுவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், ஜனாதிபதி முதல் கட்டமாக தம்புள்ளையில் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்கியிருந்தார். இரண்டாம் கட்டமாக, யாழ்ப்பாணத்திலும், மூன்றாம் கட்டமாக கிளிநொச்சியிலும் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் உள்ள ஏனைய மக்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமையும் காணி உறுதிப் பத்திரங்களை மக்களுக்கு ஜனாதிபதி வழங்கவுள்ளார். கிளிநொச்சியில் ஜூன் மாத இறுதிக்குள் 1000 பேருக்கு காணி உறுதிகளை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி இருக்கிறார்.

ஆனால், காணி ஆணைக்குழுவில் உள்ள ஆளணிப் பற்றாக்குறை காரணமாக இதனை உரிய முறையல் முன்னெடுக்க முடியாமல் இருக்கிறது. 532 பேருக்கு இன்று காணி உறுதி வழங்கப்படுகிறது. 1000 பேருக்குரிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தும் 532 காணி உறுதிப் பத்திரங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஏனையவர்களுக்கு உங்களுக்கான பிரதேச செயலகங்கள் ஊடாக காணி உறுதிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் ஆவணம் வழங்கப்படும். யுத்த காலத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் படிப்படையாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய காணிகளையும் விடுப்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மக்களின் ஏராளமான காணிகள் இருக்கின்றன. 1985ஆம் ஆண்டு இருந்த வரைபடத்தில் இருந்த காணிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய காணிகளை மக்களுக்கு வழங்குமாறு வனவள, வனஜீவராசிகள் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்குத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எஞ்சியுள்ள காணிகளும் விடுவிக்கப்படும். காணி உறுதிகளை வழங்கும்போது அரசாங்க அதிகாரிகளுக்கும், அரச சேவையில் உள்ளவர்களுக்கும் காணி உறுதிகளை வழங்குவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி வருகிறேன்.

அரசாங்கத்தின் இந்தப் பணிகள் சில நேரம் தாமதமாகலாம். ஆனால் நிச்சயமாக தீர்வுகளை நோக்கிப் பயணிக்க முடியும். மாவட்டத்தில் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கின்றன.

மீள்குடியேற்றம் காணி பிரச்சினைகள் இருக்கின்றன. அடுத்ததாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். வட மாகாணத்திற்கு 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே, வட மாகாணத்தில் பிரதேச செயலகங்களில் பதிவு செய்துகொள்ள முடியும். சுமார் 40 – 4 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் உங்களுக்கு கிடைக்கும்.

அரச அதிகாரிகளும் இந்த விண்ணப்பங்களை முன்வைக்க முடியும். வீடு இல்லாதவர்களுக்கு இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும்.

வடக்கு கிழக்கு மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து மீண்டு வருகிறோம்.

தற்போது வடக்கில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஜனாதிபதி தந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், ஜனாதிபதியின் முயற்சிகளினால் இதில் இருந்து மீண்டு வருகிறோம். எமது வளங்களைப் பாதிக்காத இந்த முதலீடுகளை, எமது மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்த முடியும். ஏற்கனவே குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக பேசி வருகிறோம். இதனைத் தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறன. தற்போது கைவிடப்டபட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை குறித்து எனக்கு முன்னர் உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டுக்கு முன்னர் முன்னர் இருந்த நிலைமை வேறு. அதன் பின்னர் இருக்கும் நிலை வேறு. ஜனாதிபதி மீது நம்பிக்கை இருப்பதாக இதற்கு முன்னர் உரையாற்றிய அனைவரும் தெரிவித்திருந்தனர். ஜனாதிபதியின் வேலைத் திட்டத்துடன் பயணிக்கும் பட்சத்தில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்,

காணிப் பிரச்சினைகளுக்காகவே மக்கள் அதிகமாக அரசாங்க அலுவலகங்களுக்கு வருகின்றனர்.

காணி பிரச்சினைகளுக்காகவே அதிகமான கடிதங்களை எழுதுகின்றனர். தற்பொது உங்களின் காணிப் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி நேரடியாக வந்து தந்துள்ளார். இன்று அந்தக் காணிகளை உங்களுக்கே உரித்தாகிறது. இனிமேல் அரச அலுவலங்களுக்குச் செல்லத் தேவையில்லை. இந்த மாவட்டத்தில் 45 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி உரிமைகளை வழங்க வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். காணி இல்லாத ஆயிரம் குடும்பங்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் காணிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இளைஞர்களுக்கு விவசாயம் செய்வதற்காக காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். உங்களின் முன்னோர்கள் காணிகளைப் பெறுவதற்காக போராடியிருப்பார்கள். தற்போது இந்தப் பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்துவைத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் நேற்று 1200 காணி உறுதிகள் வழங்கப்பட்டன. இன்று கிளிநொச்சியிலும், நாளை முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

பூநகரி பகுதியில் 500 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

குளங்கள், கால்வாய்கள், அணைக்கட்டுகள் திருத்தப்பட்டு, பயிர்ச் செய்கையை ஊக்கவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 4.5 மில்லியன் ரூபா பெறுமதியில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இந்த வீடுகளை நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 280 மில்லியன் ரூபா இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வட மாகாணத்தில் ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். குடிநீர், சுகாதாரம், கல்வி, காணி உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு வழங்கி வருகிறார். இதற்கு நன்றியுடையவர்களாக வடக்கு மக்கள் இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

பாராளுமனற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,

நீண்டகாலமாக காணி உரிமை இல்லாமல் இருந்த மக்களுக்கு அந்த காணி உரிமைகளை மக்களுக்கே வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை முன்னெடுத்த ஜனாதிபதிக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த காணி உரிமை உங்களுக்கு கொடுக்கும்போது. எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி, உங்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படுகிறது. இதுவரை இவ்வாறு நிகழவில்லை. இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. இந்தக் காணிக்கான முழு அதிகாரம் உங்களுக்கு கிடைக்கும்போது, அதனை ஈடுவைத்து அதனை இழக்க நேரிடலாம். அதனை நீங்கள் விற்கக்கூடும். பல்தேசிய கம்பனிகள் வந்து இந்தக் காணிகளை வாங்கக் கூடும்.

நாட்டுப் பற்றுள்ள, மண் பற்றுள்ள நீங்கள், உங்கள் காணிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்தக் காணி உரிமையைப் போன்று அதிகாரப் பகிர்வு குறித்தும் குறிப்பிட வேண்டும். அதிகாரப் பகிர்வு என்று கோரிக்கை நீண்டகாலமாக மக்களின் அரசியல் அபிலாசையாக இருக்கிறது. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டது. அரசியலமைப்பில் இருந்தும் அமுல்படுத்தப்படவில்லை.

காணி அதிகாரம் முழுமையாக மாகாண சபைகளின் ஊடாக அமுல்படுத்தப்பட வேண்டும். அரச காணிகளைக் கொடுக்கப் போதும் மாகாண சபைகளில் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு அமையே வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் நீதிமன்றத்தின் மற்றுமொரு தீர்ப்பில், கொடுக்கப்பட்ட அதிகாரம் பறித்தெடுக்கப்பட்டு மத்திய அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டது.

இன்று ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும், காணி அதிகாரம் கொடுக்கும் இந்த உறுதி வழங்கும் இந்த முயற்சிக்கும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதேவேளை, மாகாணத்திற்கு உள்ள காணி அதிகாரத்தையும் முழுமையாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்.
பாராளுமனற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

இந்த மண்ணில் பிறந்த மக்களுக்கு அந்த காணி உரிமை கிடைக்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தோம். போர் காலத்தில் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகிறோம். ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் இந்தக் காணிகளை விடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இந்தப் பணிகளில் ஜனாதிபதி சில இடங்களில் இடையூறுகளைச் சந்தித்துள்ளார். எனினும், மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் ஜனாதிபதி இந்த பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

வடக்கில் உள்ள ஏனைய பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வு கண்டு வருகிறார். அரசியல் கைதிகள் விடுக்கப்பட்டுள்ளனர். இன்னமும் 12 அரசியல் கைதிகள் மாத்திரமே இருக்கிறார்கள்.

அவர்களையும் விடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய போராடி வருகிறார்கள். இதற்கும் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ஆர்வமாக இருக்கிறார்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் நிச்சயமாக தீர்க்கப்பட வேண்டும். இதற்காக ஜனாதிபதி

உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வடக்கு மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகள் கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்,

“உறுமய” திட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுகிறது. ஜனாதிபதியின் 45 வருட சேவையை 5 நிமிடங்களில் சுருக்கிச் சொல்ல முடியாது. வட. மாகாணத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ்ந்தனர் என அறிவோம். அதனால் அடுத்த மாதங்களில் பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்களை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கூறுவது சிறந்த விடயமாகும்.

அதனால் நாடளாவிய ரீதியிலிருக்கும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பு பெறுவர். மொழிப் பிரச்சினையால் அதிகாரிகளிடம் பெண்களின் பிரச்சினைகளை விளக்கமாக கூற முடியாத நிலை இருந்தது. அச்சமின்றி பெண்கள் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய நிலையை ஜனாதிபதி உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி சொல்கிறேன். தமிழ் மக்களின் காணி விடுவிப்பு பிரச்சிணைக்கு ஜனாதிபதி தீர்வை வலியுறுத்தினார். இன்று அதேபோல் காணி உறுதிகளையும் வழங்குகிறார். அதனால் தான் அவர் சரவதேச ரீதியாக மதிக்கப்படுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT