Thursday, May 9, 2024
Home » புனித பிரான்சிஸ் அசீசியார்
இயேசுவின் திருக்காயங்களைக்கொண்ட

புனித பிரான்சிஸ் அசீசியார்

by damith
October 10, 2023 11:42 am 0 comment

பிரான்சிஸ் அசீசியாரின் திருவிழாவை கத்தோலிக்கத் திருச்சபை கடந்த 4ஆம் திகதி சிறப்பித்தது. அவருடைய இயற் பெயர் ஜோவானி டி பியத்ரோ டி பெர்னார்தோனே.

1181 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பெரூசியா மாகாணத்தில் அசிசி என்ற பட்டணத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் பெரிய செல்வந்தர்கள். இவருடைய தந்தை பெர்னார்தோனே பட்டு ஆடைகள் விற்பனை செய்து வந்த ஒரு பெரிய வணிகர், சீமான். சிறு வயதில் இருந்தே ஜோவானி செல்வச் செழிப்பில் வாழ்ந்தார்.

தந்தை பெர்னார்தோனே தன் மகன் ஜோவானியுடைய நடையுடை பாவனைகளைக் கண்டு தன் மகனை “பிரான்சிஸ்கோ” என்று அழைத்தார். அதன் பொருள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். பிரஞ்சுக்காரர் என்பதா கும்.

பிரான்சிஸ்கோ இளம் வயதில் அங்கிருந்து ஒருமுறை பெரும் நகராம் ரோமாபுரிக்குச் சென்றார். செல்வமும் சிறப்பும் வாய்ந்த ரோம் நகரில் கூட பட்டினியால் வாடும் ஏழைகள் பிச்சை எடுப்பதைக் கண்டார். அவர்களுடைய நிலையும் துன்பமும் இவருடைய உள்ளத்தைத் தொட்டது.

இயேசுவின் வார்த்தைகளான

“அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.” (லூக்கா 6:20)

என்ற வார்த்தை அவரது உள்ளத்தை உறுத்தியது. அவருடைய கற்பனைகளைக் கிளறியது.

இயேசு அவர் உள்ளத்தில் பேசுவதை உணர்ந்தார். அணிந்திருந்த பட்டாடைகளைக் களைந்து விட்டு ஏழைகளில் ஒருவராக பிச்சை எடுக்க ஆரம்பித்தார். வீடு திரும்பிய பின்பு விலை உயர்ந்த ஆடைகளை எடுத்து ஏழைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்.

இதைப் பார்த்த அவருடைய தந்தைக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன் மகன் தனக்கு விரோதமாக செயற்பட்டதைக் கண்டித்தார். ஆனால் இளம் ஜோவானியின் மனம் தன்னையே வெறுமையாக்கிக் கொண்ட இயேசுவின் மீதும் ஏழைகள் மீதும் சென்றது.

ஒருநாள் ஜோவானி வீட்டில் இருந்த உடைகளை எடுத்து ஏழைகளுக்குக் கொடுப்பதைக் கண்ட அவருடைய தந்தை பெர்னாந்தோனே மிகுந்த கோபத்துடன் தன் மகனை இழுத்துக் கொண்டு அசிசி நகரில் வாழ்ந்த ஆயரின் முன்கொண்டு நிறுத்தினார். “இவன் என் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து மற்றவர்களுக்குக் கொடுத்து குடும்பத்தை பாழாக்குகிறான்” என்று தன் மகனைப் பற்றி குறை கூறினார், குறையைக் கேட்ட ஆயர் இளைஞனுக்கு ஒழுக்கமாய் இருக்க ஆலோசனை சொல்ல ஆரம்பித்தார்.

உடனே ஜோவானி தான் அணிந்திருந்த உடையை முற்றும் கழற்றி தன் தந்தையின் பாதத்தில் போட்டுவிட்டு நிர்வாணமாய் நின்றார். இனிமேல் உங்கள் உடைகள் எனக்கு அவசியம் இல்லை என்று முழு நிர்வாணமாய் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தார். இதைக் கண்ட ஆயர், தான் மேலே போட்டிருந்த போர்வையைக் கழற்றிக் கொடுத்து ஜோவானி தன் மானத்தை மறைத்துக் கொள்ள உதவினார்.

கடவுள் பணிக்குத் தம்மை அர்ப்பணித்து, இயேசுவை முழுமையாகப் பின்பற்றத் துணிந்துவிட்ட பிரான்சிசு தம் நகராகிய அசிசியின் மலைப்பகுதிகளில் நடந்து, இறைவனின் புகழைப் பாடிச் சென்றார். ஒருநாள் வழிப்பறித் திருடர்கள் சிலர் அவரை நிறுத்தி, “நீ யார்?” என்று கேட்டதற்கு பிரான்சிசு பதில்மொழியாக, “நான் மாபெரும் அரசரின் தூதுவன்” என்றுரைத்தார். அவர்கள் அவரை இகழ்ச்சியோடு நோக்கி, அவரிடமிருந்ததைப் பிடுங்கிக்கொண்டு, அவரை அருகிலிருந்த குழியில் தள்ளிவிட்டுச் சென்றனர். அரைநிர்வாணமாகக் குளிரில் வாடிய பிரான்சிசு அண்மையிலிருந்த ஒரு துறவியர் இல்லத்தை அடைந்து, அங்கு கொஞ்சநாள் அடுக்களை வேலை செய்தார். அங்கிருந்து கூபியோ (Gubbio) என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய நண்பர்கள் சிலர் அவர்மீது இரங்கி, அவருக்கு ஒரு மேலாடை, கச்சை, ஊன்றுகோல் ஆகியவற்றைக் கொடுத்தனர்.

பின்னர் பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பினார். தெருவெல்லாம் நடந்துசென்று, மக்களிடம் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவதற்குக் கற்கள் தருமாறு வேண்டினார். கிடைத்த கற்களைச் சுமந்து, கோவிலுக்குக் கொண்டுபோய், தம் கைகளாலேயே அதைச் செப்பனிட்டார். அதுபோலவே, கைவிடப்பட்ட நிலையில் கிடந்த வேறு இரண்டு கோவில்களையும் அவர் செப்பனிட்டார்.

சிலுவையில் தொங்கிய இயேசுவைப் போல் ஜோவானி இயேசுவையே அணிந்து கொண்டு தமது தந்தையையும் தாயையும் செல்வம் நிறைந்த வீட்டையும் துறந்துவிட்டு வெளியே நடந்தார். அன்று முதல் இயேசுவிக்காகவே வாழ்ந்த அவர் திருச்சபையில் ஒரு புரட்சிகரமான தத்துவத்தைக் கற்றுக்கொடுத்தார்.

பிரான்சிஸ்கு சபை என்னும் கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவினார்.

1224ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் பிரான்சிஸ் மூன்று சகோதரர்களோடு டைபர் ஆற்றுக்கும் ஆர்ணோ ஆற்றுக்கும் இடையிலான ஒரு மலைப்பகுதியில் லா வேர்னா

(La Verna அல்லது Alverna) என்னும் இடத்துக்குச் சென்றார். அங்கு புனித மிக்கேல் விழாவுக்கு (செப்டம்பர் 29) முன்னால் நாற்பது நாட்கள் உபவாசம் இருக்கும்படி அப்பயணத்தை மேற்க்கொண்டார்.

லா வேர்னாவில் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, செப்டம்பர் 14ஆம் நாள் அளவில் (திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள்) ஒரு காட்சியை கண்டார். துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர் துறந்த இயேசுவின் கைகளும் கால்களும் ஆணிகளால் துளைக்கப்பட்டு, விலா ஈட்டியால் குத்திக் கிழிக்கப்பட்டதால்

இயேசுவுக்கு ஐந்து காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரான்சிஸ் சிலுவையில் உயிர்துறந்த இயேசுவை முழுமையாகப் பின்பற்றிச் செல்ல விரும்பினார். எனவே இயேசுவின் துன்பங்களில் தாமும் பங்கேற்க வேண்டும் என்று உளமார விரும்பி இறைவேண்டுதல் செய்தார்.

அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. அவரது உள்ளங்கைகளிலும்உள்ளங்கால்களிலும், விலாவிலும் இயேசுவின் காயங்கள் போன்ற காயங்கள் தோன்றின என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் ரத்தம் வழியும்போது மற்றவர் அறியாதடி அவர் துணியால் மறைத்துக்கொள்வாராம்.

அப்போது பிரான்சிசின் கூடவே இருந்த சகோதரர் லியோ அந்நிகழ்ச்சி குறித்துத் தெளிவான, சுருக்கமான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். அக்குறிப்பு எழுதப்பட்டுள்ள தோல் ஏட்டின் (parchment) பின்புறத்தில் பிரான்சிஸ் தம் கையால் எழுதியது உள்ளது. சகோதரர் லியோ எழுதிய குறிப்பு:

“ஆண்டவரின் கரம் பிரான்ஸிசின் மேல் வைக்கப்பட்டது. ஒரு தேவ தூதர் காட்சியில் தோன்றி பிரான்ஸிசிடம் பேசினார். அப்போது பிரான்சிசின் உடல்மீது இயேசுவின் திருக்காயங்களை தேவ தூதர் பதித்தார். அதன் பின் பிரான்சிஸ் இத்தோல் ஏட்டின் மறுபுறத்தில் இறைபுகழைத் தம் சொந்தக் கையால் எழுதினார். தம்மீது கடவுள் பொழிந்த எல்லா நன்மைகளுக்கும் அவர் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்.”

தாம் இறப்பதற்கு முந்தின நாள் மாலை நேரம் பிரான்சிஸ் தம் சகோதரர்களிடம் அப்பம் கொண்டுவரச் சொன்னார். அவரோடு கூட இருந்த சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பத்திலிருந்து ஒரு சிறு துண்டைப் பிட்டுக் கொடுத்தார். இயேசு, தாம் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தற்கு முந்தின நாள் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து, அவர்களோடு அப்பத்தைப் பகிர்ந்துகொண்டது போலவே பிரான்சிசும் செய்ய விரும்பினார். அப்பத்தைப் பகிர்ந்துகொண்டதும் பிரான்சிஸ் தம் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் இறுதி ஆசி வழங்கினார். “உலகில் நான் செய்ய வேண்டிய பணி முடிந்தது. நீங்கள் ஆற்ற வேண்டிய பணி யாதென்று உங்களுக்கு இயேசு கிறிஸ்து கற்பிப்பாராக” என்று கூறினார்.

எல்லா நேரத்திலும் சுவிஷேசத்தை பிரசங்கம் செய்யுங்கள், தேவைப்படும்போது வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எல். எஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT