Monday, May 20, 2024
Home » ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு: சிறந்த குழுவுடன் இணைந்தே முன்னெடுப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு: சிறந்த குழுவுடன் இணைந்தே முன்னெடுப்பு

6,000 ஊழியரின் தொழிலை பாதுகாக்க இதுவே வழி

by Gayan Abeykoon
May 9, 2024 12:06 pm 0 comment

மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியுமென, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை மட்டுமன்றி உலகில் செல்வந்த நாடுகளில் கூட, விமான சேவைகள் நட்டத்திலேயே இயங்குவதாக  சுட்டிக்காட்டிய அமைச்சர், சில நாடுகள் அந்த நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் நிதி வழங்குவதாகவும் இலங்கையால் அவ்வாறு செய்ய முடியாது என்றும்  தெரிவித்தார்.

விமான சேவை ஊழியர்கள் 470 பேர், ஒரே தடவையில் தமது பதவியை இராஜினாமா செய்ததாலேயே 791 பேரை புதிதாக இணைக்க   நேர்ந்ததென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி எம்பி ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்குப்  பிரதமரின் சார்பில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்  இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

கடந்த வருடத்திலேயே அதிகமான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக ஹேஷா விதானகே எம்பி தமது கேள்வியில் சுட்டிக்காட்டினார்.

பெரும் தொகையானோர் தமது பதவியை இராஜினாமா செய்யும்போது அந்த வெற்றிடத்துக்காக ஆட்சேர்ப்பு செய்வது தவறா? என, நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

உலகில் எம்மை விட செல்வந்த நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளிலும் விமான சேவைகள் நட்டத்திலேயே இயங்குகின்றன. இந்திய எயார் லைன்சுக்கு என்ன நடந்தது? அதுவும் நட்டத்திலேயே இயங்குகிறது. சுவிஸ் எயார் தற்போது சேவையில் உள்ளதா? அதுவும் கிடையாது.

எமிரேட்ஸ் போன்ற விமான சேவைக்கு அந்த நாடுகள் 02 அல்லது 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன. இலங்கை போன்ற நாடுகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. அதனால் எமது நாடு போன்ற சிறு அளவிலான விமான சேவைகளை நடத்தும் நிறுவனங்கள் பிரச்சினைகளை எதிர் நோக்கியே ஆக வேண்டும்.

விமானம் கொள்வனவு செய்வதற்கும் எம்மிடம் நிதி கிடையாது.  இதற்காக முதலீடு செய்யும் நிலையிலுமில்லை. குத்தகை அடிப்படையிலேயே விமானங்களை பெற்றுக் கொள்கிறோம். ஒரு விமானம் கூட எமக்கு சொந்தமானதாக இல்லை. அனைத்து விமானங்களும் லீசிங் முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுக்கு லீசிங் வழங்கிய பின்னர் எத்தகைய நிதியும் எமக்கு மிஞ்சாது.

அண்மைக் காலங்களில்  விமான சேவை தொடர்பில் பல தொழிற்சங்க நெருக்கடிகளையும் எதிர்நோக்க நேர்ந்தது.  இதுவும் நட்டத்திற்கு காரணமாகிறது.  இதனால்தான்,  மறுசீரமைப்பு அவசியமாக உள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT