Monday, May 20, 2024
Home » அகில இலங்கை தமிழ் மொழித் தினம் – 2024; புதிய விதிமுறைகளுடன் இம்முறை போட்டிகள்

அகில இலங்கை தமிழ் மொழித் தினம் – 2024; புதிய விதிமுறைகளுடன் இம்முறை போட்டிகள்

by Gayan Abeykoon
May 9, 2024 4:48 pm 0 comment

ல்வியமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவின் தமிழ்மொழி அலகினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டிகள் இம்முறை புதிய விதிமுறைகளையும் இணைத்துக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளன.

நோன்புகால விடுமுறை, முன்னோடிப் பரீட்சைகளின் கால குறிக்கீடு, சாதாரணதரப் பரீட்சையின் ஆரம்பம் முதலியவற்றைக் கருத்திற் கொண்டு பாடசாலை மட்ட மற்றும் கோட்ட மட்டப் போட்டிகளை விரைவாக முன்னெடுக்குமாறு மாகாண தமிழ்மொழி பிரிவினூடாக வலயக் கல்வி தமிழ்மொழித் தினப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டிகளுக்கான வலய மட்டத்தை ஜுன் 15 ஆம் திகதிக்கு முன்னரும், மாவட்ட மட்டத்தை ஜுலை 15 இற்கு முன்னரும் நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் எழுத்தாக்கம் தவிர்ந்த மாகாணப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் 2024.07.25 இற்கு முன்னர் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், மாகாணப் போட்டிகள் யாவும் 2024.08.10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில் கிழக்கு மாகாணத்தால் நடத்தப்படவுள்ள மாவட்ட மற்றும் மாகாண நிலை ஒருங்கிணைந்த எழுத்தாக்கப் போட்டிகள் 2024.06.29 அன்று மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளன.

கல்வியமைச்சினால் 2019 தொடக்கம் 2023 ஆம் ஆண்டுகள் வரை வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளுக்கான பிரதான சுற்று நிருபம் (35/2018) 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கல்வியமைச்சின் தமிழ் மொழி அலகினால் ‘தமிழ் மொழித் தினம்-2024’ என்ற சுற்றுநிருப இணைப்பொன்று வெளியாகியுள்ளது.

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள 50 போட்டிகளில் 25 போட்டிகளுக்கு ஒரு பாடசாலை பங்குபற்ற முடியும். ஆரம்பப் பாடசாலைகள் தவிர்ந்த சகல பாடசாலைகளும் போட்டி இலக்கம் 15 அதாவது தமிழறிவு வினாவிடை எழுத்துப் போட்டியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

பேச்சு,பாவோதல், இலக்கிய விமர்சனம், இசையும் அசையும், இசை_- தனி, இசை_ -குழு, நடனம்_ -தனி, நடனம்_ -குழு -1, திறந்த போட்டிகளான நாட்டிய நாடகம், இலக்கிய நாடகம், வில்லுப்பாட்டு, முஸ்லிம் நிகழ்ச்சி என்பவற்றுக்கான விபரங்கள் புதிய இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

நாட்டுக் கூத்துக்கலையினை வளர்த்தெடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண தமிழ்மொழிப் பிரிவினால் இப்போட்டி குறித்த மாகாணத்திற்கு மாத்திரம் நடத்தப்படுகின்றமை விஷேட அம்சமாகும். கூத்து, முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கான எழுத்துப் பிரதிகள் பாடசாலை அதிபரினால் உறுதி செய்யப்பட்டு போட்டியின் போது நடுவர்களிடம் வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டிய நாடகத்தில் எடுத்துக் கொள்ளப்படும் இலக்கிய பகுதிகளின் பாடல்வரிகளை அப்படியே பயன்படுத்த முடியாது. முக்கியத்துவம் கருதி சிலவற்றை பயன்படுத்தலாம். நாட்டிய நாடகத்திற்கான பக்கவாத்தியங்கள் பாடசாலை மாணவர் அல்லது ஆசிரியரால் பயன்படுத்தப்பட வேண்டும். வேறு பாடசாலை மாணவர், ஆசிரியர்களையும் பயன்படுத்தலாம். வெளியார்களைப் பயன்படுத்த முடியாது. அதேவேளை பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நடுவர்களாக பயன்படுத்த முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு அதாவது தற்போது க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் திறந்த போட்டிகளில் மாத்திரமே பங்குபற்ற முடியும் என விஷேட அறிவுறுத்தல் தலைப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய மட்டப் போட்டிகளை ஒக்டோபர் 12,13,19.20 ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

மாணவர் திறமைகளை இனங்கண்டு, அதனை அரங்கேற்றி அழகுபார்க்கும் இவ்வாறான போட்டிகளில் திறமையான தெரிவுகள் இடம்பெற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போதே இப் போட்டிகள் அதன் இலக்குகளை அடைய முடியும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

ஜெஸ்மி எம்.மூஸா 

(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)  

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT