Home » புனித சூசையப்பர் திருவிழா
மே தினத்தில் சிறப்பிக்கப்படும் தொழிலாளரின் பாதுகாவலர்

புனித சூசையப்பர் திருவிழா

by sachintha
April 30, 2024 10:15 am 0 comment

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பு அல்லது சூசையப்பரை தொழிலாளர்களின் பாதுகாவலர் என நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.

தன்னுடைய தொழிலால் அடையாளம் காணப்படுகின்ற மிகக் குறைவான விவிலியக் கதைமாந்தர்களில் இவர் முதன்மையானவர். தொழிலாளர்களின் உரிமைக்கான தினமான மே தினத்தில் கத்தோலிக்கத் திருச்சபை புனித சூசையப்பரின் திருவிழாவை சிறப்பிக்கின்றது.

நாம் அனைவரும் தொழிலாளர்களே. தொழில் அல்லது உழைப்பே நம் அடையாளமாக இருக்கிறது. தொழில் வழியாகவே நாம் கடவுளின் கரம் பிடிக்கிறோம்.

வாழ்வின் உறுதியற்ற நிலைகளை அப்படியே ஏற்றுக்கொண்டார் புனித யோசேப்பு. இதுவே நாம் அவரிடம் கற்க வேண்டிய சிறந்த பாடமாக உள்ளது.

தனக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மரியாள் கருத்தாங்கி நிற்கிறார்.தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மனைவி கருத்தாங்கி நிற்கும் மகன் மெசியாவாக இருக்கிறார். ஆனால், சத்திரத்தில் அவருக்கு இடமில்லை.பிறந்த குழந்தையை எகிப்துக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய கட்டாயம்.மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சொந்த மண்ணுக்கு வர வேண்டிய நிலை.

இப்படியாக, வாழ்க்கை தனக்கு அடுத்தடுத்த உறுதியற்ற நிலையைத் தந்தாலும் எந்தவொரு முணுமுணுப்பும் முறையீடுமின்றி வாழ்வின் யதார்த்தங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்த புனிதராக அவரைக் குறிப்பிட முடியும்.

‘கடவுளே பார்த்துக்கொள்ளட்டும்’ என அவர் ஓய்ந்திருக்கவில்லை.’நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்றும் எதையும் அவர் தள்ளிப்போடவில்லை.

பல நேரங்களில் நாம் அனைத்திலும் உறுதியான தன்மையை எதிர்பார்க்கின்றோம். நான் நினைப்பது போல, நினைத்த நேரத்தில் அனைத்தும் நடக்க வேண்டும் எனவும், நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் நான் எதிர்பார்ப்பது போல இருக்க வேண்டும் எனவும் நாம் நினைக்கின்றோம். இத்தகைய நிலையில் வாழ்க்கையின் இனிமையே அதன் உறுதியற்ற நிலையில்தான் இருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம்.

இந்த நிலையை நாம் அடைய மூன்று விடயங்களைக் களைய வேண்டும்:

மறுதலிப்பு : என் வாழ்வில் எனக்கு இது நடக்கவில்லை’ என்று நடந்த ஒன்றை நடக்காத ஒன்று போல நினைத்துக்கொள்வது மறுதலித்தல். இந்த நிலையில் நாம் யதார்த்த நிலையிலிருந்து தப்பி ஓடுகின்றோம்.

பலிக்கடா மனநிலை:’நான் இப்படித்தான். எனக்கு இப்படித்தான் நடக்கும். என்னை எல்லோரும் பயன்படுத்துவார்கள். மற்றவர்களால்தான் நான் இப்படி இருக்கிறேன்’ என்று நம் வாழ்வியல் யதார்த்தங்களுக்கு மற்றவர்களை நோக்கி விரலைச் சுட்டும்போது நாம் பலிக்கடா மனநிலை கொண்டிருக்கின்றோம்.

உரிமம் கோரல்: ‘நான் நல்லவனாக இருப்பதால் என்னை அனைவரும் நல்ல முறையில் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பது, நான் வெஜிடேரியன் என்பதற்காக என்னை மாடு முட்டக் கூடாது என்று நினைப்பதற்குச் சமமாகும்.’ நான் இப்படி நடக்கிறேன். ஆகவே எனக்கு இப்படித்தான் நடக்க வேண்டும் என்று உரிமை கொண்டாடும்போது நாம் ஏமாந்துவிடுவதோடு, சோர்ந்தும் விடுகிறோம்.

புனித யோசேப்பை நாம் தொழிலாளர்களின் பாதுகாவலர் எனக் கொண்டாடுகின்ற வேளையில், துன்புறும் நம் அன்பிற்கினியவர்களை புனித யோசேப்பின் பரிந்துரையில் வைப்போம். உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அனைத்துத் தொழிலாளர்களுக்கு நம் உதவிக்கரம் நீட்டுவோம். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வேண்டிய மானுட நிர்ப்பந்தம் ஓர் இனிய அனுபவமே

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT