Tuesday, May 21, 2024
Home » மே மாதாவின் வணக்க மாதம்

மே மாதாவின் வணக்க மாதம்

by sachintha
April 30, 2024 6:09 am 0 comment

மேன்மைமிகு மே மாதத்தில் அன்னையின் அடைக்கலத்தை மனமுவந்து தேடுவோம்

ஒவ்வொரு வருடமும் மே மாதம் வணக்க மாதமாகவும் மாதாவின் சிறப்பு மாதமாகவும் நினைவு கூரப்படுகின்றது. நமக்கொரு தாய் இருக்கின்றார். நம்மை என்றும் பாதுகாக்கின்றார் என அன்னைக்கு புகழ் பாடும் மாதமிது. அந்த வகையில் மே மாதம் மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்.

“அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே” என கபிரியேல் வான தூதர் மரியாளைப் புகழ்கின்றார். (லூக் 1:28) இறைவன் வாசம் செய்ய தேர்ந்து கொண்ட திருக்கோயில் நம் தாய் மரியாள்.

பெண்ணினத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பேரரசி நம் பிரியமுள்ள அன்னை அவளை அன்றாடம் அன்புடன் நினைத்து நெஞ்சாரப் புகழ்வது நம் எல்லோரதும் கடமையாகும்.

சிறப்பாக நம் அன்னையை புகழவும் வாழ்த்தவும் மே மாதத்தை கத்தோலிக்க திருச்சபை நமக்கு வழங்கியுள்ளது.

மே மாதம் முழுவதும் தினமும் ஆலயத்தில் அல்லது நம் வீடுகளில் ஒன்றுகூடி செபமாலை மன்றாட்டுகளை அர்ச்சனைப் பூக்களாக்கி குடும்பங்களாக குழுக்களாக கூடி செபமாலை தியானிப்பது வழக்கமாகும்.

மரியாள் மணமாகாமலே தாயாக வேண்டுமென்பது இறைவன் வகுத்த நியதி அவள் மறுப்பேதும் கூறவில்லை. சட்டம் பேசவில்லை. “இதோ ஆண்டவருடைய அடிமை உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று இறை சித்தத்திற்குப் பணிந்தவள்.

மாதா பரிசுத்த ஆவியின் அருட்பொழிவை முழுமையாகப் பெற்று ஆண்டவர் இயேசுவை தன் உதரத்தில் தாங்கி நமக்கு ஆலயமாய் திகழ்கின்றார். இயேசுவின் பிரசன்னமும் பரிசுத்த ஆவியின் நிறைவும் தேவ அன்பை அவரிடம் ஊற்றுகின்றது.

கடவுள் அன்பாய் இருக்கின்றார். எனவே இறைவனின் பிரசன்னத்தை முழுமையாகப் பெற்ற அவள் மனித நேயம் நிறைந்தவளாய் தியாக அன்பை சுமந்தவளாய் மக்களை தேடி நன்மை செய்பவளாய் விளங்குகிறாள்.

முதிர் வயதில் தன் உறவினரான எலிசபெத் கருத்தாங்கி இருப்பதை அறிந்து நூற்றுக்கும் மேற்பட்ட மைல்கள் தூரம் பயணம் செய்து எலிசபெத்தை வாழ்த்தவும் உதவி செய்யவும் அவரைத் தேடி மாதா வருகின்றார்.

மாதாவைக் கண்டவுடன் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எலிசபெத் உரத்த குரலில் “என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் பேறு பெற்றது என்படி என வியந்து தன் மகிழ்வை பகிர்ந்து கொள்கின்றார்.

கடவுளே அவள் வயிற்றில் வந்து பிறக்கின்றார் வான தூதர்கள் வாழ்த்துப்பா இசைக்கின்றார்கள். இடையர்களும் ஞானிகளும் போற்றிப் புகழ்கின்றனர். இதையெல்லாம் கண்ட மரியாள் ஆனந்தக் கூத்தாடவில்லை. அகம்பாவம் கொள்ளவில்லை, ஊரைக் கூட்டி உற்சாக விருந்து வைக்கவில்லை. மாறாக இந்நிகழ்ச்சிகளை உள்ளத்தில் இருத்தி சிந்திக்கின்றாள். (லூக் 2:19)

இயேசு சித்திரவதைகள் அனுபவித்தது, சிலுவை மரணத்திற்கு தீர்ப்பிடப்பட்டது எல்லாமே அவளுக்குத் தெரியவந்தது.

காட்டிக்கொடுத்தவனை தீர்ப்பு எழுதியவன் காலமெல்லாம் கூடவே சுற்றியலைந்தும் கடைசி நேரத்தில் காணாமல் போனவர்கள் எவரையுமே அவள் நிந்திக்கவில்லை. எல்லாவற்றையும் தன் ஈர நெஞ்சுக்குள்ளே பூட்டி வைக்கிறாள்.

எதையும் தாங்கும் இதயத்துடன் சிலுவை பாரத்தை இதயத்தில் சுமந்தபடி கூட்டத்தோடு பின் தொடருகிறாள். தொலைவில் நின்றபடியே மகனின் உயிர்ப் பலியைக் கண்டு துடிக்கிறாள்.

இந்த அமைதிக்கு இடர்களையும் இன்னல்களையும் மனதில் சுமந்த பொறுமைக்கு விலைமதிப்பில்லாத பரிசு இறுதியில் கிடைக்கிறது.

நீ எனக்கு மட்டும் தாயல்ல, இந்த உலகத்துக்கே இனி நீதான் அம்மா என்று இறைவனே உரிமை சாசனம் எழுதுகிறார். எல்லாவற்றையுமே மனதுக்குள் இருத்தி தியானித்த மரியாளைப்பற்றி நாமும் ஆர அமர சிந்தித்தோமானால் அவளது தெய்வீகப் பெருமைகள் ஒவ்வொன்றாய் எமக்குப் புலப்படும்.

மரியன்னையை அறியும் ஞானத்திற்காக நாம் எங்கும் தேடியலைய வேண்டாம். இருக்கிற இடத்திலேயே நேரம் ஒதுக்கி சிந்திப்போம். அதற்காகத்தான் திருச்சபை மே மாதத்தை ஒதுக்கி தியானிக்கப் பணிக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT