Wednesday, May 8, 2024
Home » ஆபிரிக்க நாடுகளில் சீனாவின் “இருண்ட கடன்”

ஆபிரிக்க நாடுகளில் சீனாவின் “இருண்ட கடன்”

by Rizwan Segu Mohideen
March 30, 2024 7:36 pm 0 comment

உலகளாவிய ரீதியில்  பல நாடுகளின் உள்கட்டமைப்பு  மேம்பாட்டுத் திட்டங்களில் சீனா முதலீடு செய்து வருகிறது. இந்த திட்டத்திற்கு ஒரு பட்டி ஒரு பாதை முன்முயற்சித் திட்டம் என்று சீனா பெயரிட்டுள்ளது. ஆங்கிலத்தில் Belt and Road Initiative – BRI என்று இத்திட்டம் அழைக்கப்படுகிறது.

உலகின் பல வறிய நாடுகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்த சீன முதலீடுகளை “கடன் பொறி ராஜதந்திரம்” என்றும் “சீனாவின் இருண்ட கடன்கள்” என்றும் பல நாடுகளால் அழைக்கப்படுகின்றன.  இந்த சீனக் கடனில் மூழ்கிய பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றன.  குறிப்பாக பல ஆப்பிரிக்க நாடுகள் இந்த சீனக் கடனுக்கு பகரமாக தனது நாட்டின் இறைமையை சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன அரசின்  அறிக்கைகளின் படி, ஒரு பட்டி ஒரு பாதை என்ற இந்த BRI திட்டத்தின்  கீழ் 68 நாடுகள் கடன்களை பெற்றுக் கொண்டுள்ளன.

கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தில்14 நாடுகளும், மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை உட்பட 13 நாடுகளும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிராந்தியத்தில் 17 நாடுகளும் மற்றும் ஐரோப்பிய மற்றும் யூரேசிய பிராந்தியத்தில் 24 நாடுகளும் இந்தக் கடன் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த அறுபத்தெட்டு நாடுகளின் வருடாந்த பொருளாதார உற்பத்தி சுமார்  25 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த “இருண்ட கடன்கள்” காரணமாக, இந்த 68 நாடுகளில் 23 நாடுகள் அதிக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த 23 நாடுகள் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கடன் பட்ட  நாடுகளாக கம்போடியா, மங்கோலியா மற்றும் லாவோஸ் இருக்கின்றன.

இலங்கை, பாகிஸ்தான், மாலைதீவு, பூட்டான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த  நாடுகளாகும்.

எகிப்து, ஈராக், ஜோர்டான், லெபனான், கென்யா, எத்தியோப்பியா ஆகியவை மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளாகும்.

ஐரோப்பா மற்றும் யூரேசிய பிராந்தியத்தின் நாடுகளாக அல்பேனியா, ஆர்மீனியா, பெலாரஸ், பொஸ்னியா, ஹெர்சகோவினா, மொண்டினீக்ரோ மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளாகும். மேலே குறிப்பிட்ட அத்தனை நாடுகளும் சீனக் கடனில் சிக்கிய நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன.

சீனா தனது முதலீடுகளின் மூலம்,  வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு  தனது பொருளாதார ரீதியிலான ஆதரவை வழங்குவதாக  வாதங்களை முன்வைத்து வருகிறது. என்ற போதிலும், பல நாட்டு தலைவர்களும், பொருளாதார வல்லுநர்களும்  சீனாவின் இந்த வாதத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர்.

சீனா தனது கடன் கொள்கையின் மூலம் வளரும் நாடுகளின் மீது பொருளாதார அழுத்தங்களைப் பிரயோகித்து அந்நாடுகளின் மூலோபாய பெறுமதிமிக்க இடங்களை கபளீகரம் செய்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சீனா தனது  புவிசார் அரசியல் செல்வாக்கை தனது எல்லைக்கு அப்பால் நிலைநிறுத்துவதற்கு இந்தக் கடன்களை பயன்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகளில் உள்ள வளங்களை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே இந்தக்  கடன்கள் வழங்கப்படுகின்றன என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

மேலும், பல வளரும் நாடுகளில் உள்ள சிவில் சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள்  சீனக் கடனுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர். சீன முதலீடுகள் இடம்பெறும் நாடுகளிலுள்ள ஆட்சியாளர்கள் ஊழல்களில் ஊறித்திளைத்தவர்கள் என பல குற்றச் சாட்டுகள் எழுகின்றன.

சீனாவின் மீது வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும்  சீனா ஒருபோதும் செவிசாய்ப்பதில்லை. மாறாக, மேலும் மேலும் கடன்களை வழங்கி  நாடுகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதாகக் காட்டிக் கொண்டு தனது புவியரசியல் நிகழ்ச்சி நிரலில்  தன்னை நிலை நிறுத்தும் நடவடிக்கையிலேயே அது உறுதியாக இருக்கிறது. நாடுகளின் மேம்பாட்டுக்காகவும்,  வளர்ச்சிக்காகவும் உதவுவதில் மேற்கத்திய மற்றும் சீன அணுகுமுறைகளுக்கு இடையே பெரிய வித்தியாசமும் இடைவெளியும் இருக்கின்றன.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சீனாவிடமிருந்து அதிக கடன்களை வாங்கி பொருளாதார சரிவின் விளிம்பில் ஆபிரிக்க நாடுகள்  தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

ஆபிரிக்கக் கண்டம் முழுவதும்  73 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடனை கொடுத்திருக்கும் சீனா, ஆபிரிக்க நாடுகளுக்கு மிகப்பெரிய  கடன் வழங்குபவராகத் திகழ்கிறது. அங்கோலா  சீனாவிடமிருந்து  மிகப்பெரிய  கடனை  வாங்கியிருக்கிறது. ஸாம்பியா  சீனாவில் இருந்து அதிக கடன் பெற்று, தனது நாட்டில் அரங்கங்கள் முதல் ரயில் பாதைகள் வரை அதிக உள்கட்டமைப்பு திட்டங்களை கட்டமைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் 22 ஆபிரிக்க நாடுகள் கடன் சுமைகளால் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதிக கடன் சுமை  நாட்டின் குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான  திறனை முடக்கி விடும். ஏனெனில் மக்களிடமிருந்து பலாத்காரமாக அறவிடப்படும் அதிக வரி வருவாயில், அந்த நாடுகள் கடன்களை அடைக்கவே முயற்சி செய்கின்றன.

ஆபிரிக்க நாடுகள் தனது வருவாய்க்கு அதிகமாக  சீனாவுக்குக் கடன் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.  ஆபிரிக்க நாடுகளில், அங்கோலா  25 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், எத்தியோப்பியா  7.4 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் , கென்யா  7.4 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், மற்றும் கொங்கோ குடியரசு  7.3 பில்லியன் அமெரிக்க டொலர்களையும்  சீனாவுக்கு  கடனாக செலுத்த வேண்டியுள்ளன.

கென்யா தனது தேசிய வருவாயில் அரைவாசிக்கு மேல் தொகையை கடனை மீள செலுத்துவதற்காக  செலவழிக்கிறது. கென்யாவின் கடன் 2022 ம் ஆண்டு மூன்றில் ஒரு பங்காக இருந்தது. 2023ம் ஆண்டில் சீனாவின்  எக்ஸிம் வங்கிக்கு (Exim Bank)  மட்டும் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேல் கடன் செலுத்த வேண்டியிருந்தது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியில் இணைந்த முதல் ஆப்பிரிக்க நாடுகளில் கென்யாவும் ஒன்றாகும். கென்யா சீனாவிடமிருந்து “ஸ்டாண்டர்ட் கோஜ் இரயில்வேயை” (Standard Gauge Railway) நிர்மாணிக்கவும், நைவாஷாவில் ஒரு உள்நாட்டு துறைமுகத்தை நிறுவவும், மொம்பாசாவில் உள்ள முக்கிய சர்வதேச துறைமுகத்தை மேம்படுத்தவும் நிதியுதவி பெற்றது.

இருப்பினும், 2013 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலத்தில், கென்யாவின் கடன்  16 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து  71 பில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த கடனில் கணிசமான பகுதி சீனாவுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

தற்போது, கென்யாவின் மொத்தக் கடன், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன் உட்பட, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தோராயமாக 70% ஆகும். கென்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது, இந்த உயர்ந்த  கடன் பளு கென்யாவின் நிதி நிலைத்தன்மையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

கென்யாவின் தற்போதைய  36 பில்லியன் வெளிநாட்டுக் கடனில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 12 பில்லியன், சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான அபிவிருத்தி வங்கி மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கி ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு வங்கிகளும் IMF அல்லது உலக வங்கி போன்ற பன்னாட்டு கடன் வழங்குநர்களின் வட்டி விகிதங்களை விட இரு மடங்கு வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கும் வணிக கடன் வழங்குனர்களாக செயல்படுகின்றன.

ஆபிரிக்காவின் கடன் நெருக்கடி என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் விரிவான கவனம் தேவைப்படும் ஒரு சிக்கலான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. ஆபிரிக்கா முழுவதும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் சீனக் கடன்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தாலும், இந்தக் கடன்களின் விதிமுறைகளும் வெளிப்படைத்தன்மைகள் குறித்து நியாயமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அது மட்டுமல்லாமல், சீனக் கடன்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் இணை ஒப்பந்தங்களும் கவலைகளை எழுப்பியுள்ளன. இயற்கை வளங்களையோ அல்லது அரச சொத்துக்களையோ சீனக் கடனுக்கான பிணையமாக ஆப்பிரிக்க நாடுகள் வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிகழ்வுகளும் நிகழ்ந்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.  இது கடன் பட்ட ஒரு நாட்டின் இறையாண்மை பற்றியும், அந்நாட்டின் வளங்கள் மீதான கட்டுப்பாடுகள் பற்றியும், அந்நாட்டின் எதிர்காலம் பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

– ஆதி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT