Monday, May 20, 2024
Home » எகிப்துடனான உதவிகள் வரும் ரபா எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல்

எகிப்துடனான உதவிகள் வரும் ரபா எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல்

ஹமாஸ் இணங்கிய போர் நிறுத்தத்திலும் இழுபறி

by mahesh
May 8, 2024 6:00 am 0 comment

காசாவின் தெற்கு நகரான ரபா மீது இரவு முழுவதும் சரமாரித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள எகிப்து மற்றும் காசாவுக்கு இடையிலான ரபா எல்லை கடவையை நேற்று (07) கைப்பற்றியதோடு இஸ்ரேலிய டாங்கிகள் ரபாவுக்குள் மேலும் முன்னேறி வருகின்றன.

காசா போர் நேற்றுடன் 8 ஆவது மாதத்தை எட்டியதோடு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் போராடி வரும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றுக்கு இணங்குவதாக பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் கடந்த திங்களன்று அறிவித்தபோதும், அந்தப் போர் நிறுத்த விதிகள் தமது கோரிக்கையை பூர்த்தி செய்வதாக இல்லை என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் பொதுமக்கள் நிரம்பி வழியும் ரபா தொடர்பில் சர்வதேச அளவில் கவலை அதிகரித்திருக்கும் சூழலில், அங்கு பல இடங்கள் மற்றும் வீடுகள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

நேற்று அதிகாலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ரபாவில் 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. குறிப்பாக அங்குள்ள வீடுகளை இலக்கு வைத்தே இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டு மேலும் 96 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த இந்தப் போரில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,789 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 78,204 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதோடு அவர்கள் கூடாரங்கள் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டிருக்கும் நிலையில் பலரும் அங்கிருந்து வெளியேற முயன்று வருகின்றபோதும், காசாவின் பெரும்பகுதி இஸ்ரேலின் தாக்குதல்களில் ஏற்கனவே இடிபாடுகளாக மாறியுள்ளன. இதனால் செல்வதற்கு பாதுகாப்பான இடங்கள் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

ரபாவில் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றில் காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டது.

பிரசல்ஸில் நேற்று பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான தலைவர் ஜோசப் பொரல், ‘ரபா மீதான தாக்குதல் பொதுமக்களுக்கு உயிராபத்துக் கொண்டது’ என்று எச்சரித்தார்.

‘அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அனைவரும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று (இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்) நெதன்யாகுவை கேட்டுக்கொண்டபோதும், சர்வதேச சமூகத்தின் அனைத்துக் கோரிக்கைகளையும் மீறி ரபா தாக்குதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை’ என்று பொரல் குறிப்பிட்டுள்ளார்.

ரபா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் இஸ்ரேல் பல வாரங்களாக எச்சரித்து வந்தது. அங்கு ஆயிரக்கணக்காக ஹமாஸ் போராளிகள் நிலைகொண்டிருப்பதாகவும் பல டஜன் பணயக்கைதிகள் இருக்கக் கூடும் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டது. ரபாவை கைப்பற்றாது ஹமாஸுக்கு எதிரான வெற்றி சாத்தியமில்லை என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

ரபா எல்லைக் கடவை மூடல்

இந்நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைகொண்டிருப்பதால் காசாவுக்கு உதவிகள் வருவதற்கான பிரதான வழியாக இருக்கும் ரபா எல்லைக் கடலை மூடப்பட்டிருப்பதாக காசா எல்லை நிர்வாகத்தை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளிட்டுள்ளது.

படைகள் அங்கு நுழைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவ வானொலி முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

ரபா மற்றும் இஸ்ரேல் கட்டுப்பாட்டு கெரம் ஷலோம் எல்லை கடவையில் காசாவுக்கான உதவிகள் முற்றாக நிறுத்தப்பட்டிருப்பதாக எகிப்தில் உள்ள செம்பிறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான திட்டம் ஒன்று வகுக்கப்படும் வரை ரபா படை நடவடிக்கையை ஆரம்பிக்கக் கூடாது என்று அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வந்தன.

‘ரபா எல்லைக் கடவை மூடப்பட்டதை அடுத்து காசா குடிமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மரண தண்டனையை விதித்துள்ளனர்’ என்று காசா எல்லைக் கடவை நிர்வாகத்திற்காக பேசவல்ல ஹிஷாம் எத்வான் தெரிவித்தார்.

ரபா எல்லையை இஸ்ரேல் கட்டுப்படுத்துவது குறித்து பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. ‘கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, எல்லையை கடப்பதும், போதிய உதவி பொருட்கள் வராததும் ஆகும்’ என்று அந்த ஐ.நா. நிறுவனத்தின் பேச்சாளர் லுயிஸ் வட்ரிட்ஜ் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காசாவின் ரபா நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை மற்றும் ரபா எல்லைக் கடவையில் பலஸ்தீன பக்கத்தை இஸ்ரேல் கைப்பற்றியதை எகிப்து வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது. ரபா மீதான தாக்குதல் போர் நிறுத்த முயற்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கும் பகுதிகளில் உள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. அந்த மக்களை 20 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் ‘நீடிக்கப்பட்ட மனிதாபிமான வலயம்’ என்று அழைக்கும் பகுதிக்கு செல்வதற்கு இஸ்ரேல் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

சில பலஸ்தீன குடும்பங்கள் மீண்டும் ஒருமுறை கழுதை வண்டிகள் மற்றும் ட்ரக் வண்டிகளில் தமது குழந்தைகள் மற்றும் உடைமைகளை ஏற்றியபடி மீண்டும் ஒருமுறை வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

சிலர் சேறும் சகதியுமான வீதிகள் வழியே நடைபாதையாகவே வேளியேற ஆரம்பித்துள்ளனர்.

ஒக்டோபரில் போர் வெடித்தது தொடக்கம் வெளியேறிச் செல்வது இது நான்காவது முறை என்று அப்துல்லா அல் நஜர் என்ற பலஸ்தீனர் தெரிவித்துள்ளார். ‘எங்கே செல்வது என்று இறைவனுக்குத் தான் தெரியும். இன்னும் அது பற்றி நாம் தீர்மானிக்கவில்லை’ என்றார்.

கெய்ரோவில் போர் நிறுத்த பேச்சு

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் பொருட்டு, தமது தூதுக்குழு நேற்று கெய்ரோ பயணித்ததாக மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் குறிப்பிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், போர் நிறுத்தம் ஒன்றுக்கான முன்மொழிவை ஏற்பதாக தமது அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியோ கட்டார் மற்றும் எகிப்திடம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த முன்மொழிவு இஸ்ரேலிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் ஆனால் உடன்பாடு ஒன்றை எட்டும் முயற்சியாக பேச்சுவார்த்தையாளர்களுடனான சந்திப்புக்கு இஸ்ரேல் தூதுக்குழு ஒன்றை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளது.

மறுபுறம் ரபாவில் தொடர்ந்து படை நடவடிக்கையை முன்னெடுக்க நெதயாகுவின் போர் கால அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அந்த அலுவலகம் கூறியது.

இதில் ஹமாஸ் ஏற்றுக்கொண்டிருக்கும் முன்மொழிவு எகிப்தினால் வழங்கப்பட்ட பலவீனமான ஒன்று என்றும் அதில் இஸ்ரேல் ஏற்காத கூறுகள் உள்ளடங்கி இருப்பதாகவும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பு மூன்று கட்டங்களைக் கொண்ட போர் நிறுத்தம் ஒன்றுக்கே இணங்கி உள்ளது. ஒவ்வொன்று 42 நாட்களைக் கொண்டதான இந்த போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதோடு இரண்டாவது கட்டத்தில் எஞ்சிய பணயக்கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேல் காசாவில் இருந்து முழுமையாக வெளியேறவுள்ளது. மூன்றாவது கட்டத்தில் காசாவில் மூன்று தொடக்கம் ஐந்து ஆண்டுகள் கொண்ட மீள்கட்டமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பில் பேசுவதற்கு ஹமாஸ் பிரதிநிதிகள் இன்றைக்குள் கெய்ரோ செல்லவிருந்ததாக பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட பலஸ்தீனர் தரப்பை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எட்டப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் கடந்த நவம்பரில் பாதி எண்ணிக்கையான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட ஒரு வாரம் போர் நிறுத்தத்திற்கு பின்னரான முதலாவது போர் நிறுத்தமாக அமையும்.

ஆனால் அது தொடக்கம் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்று இன்றி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் அமைப்பு மறுத்து வருவதோடு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்துவதாக இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT