Saturday, April 27, 2024
Home » யோசுவாவின் படைப்புக்களில் பாத்திரங்கள் விரிக்கும் புதிய பாதை – பாகம் 02
கதைகளே விதைகளாக

யோசுவாவின் படைப்புக்களில் பாத்திரங்கள் விரிக்கும் புதிய பாதை – பாகம் 02

by Gayan Abeykoon
March 29, 2024 8:25 am 0 comment

இலங்கை இன்று எதிர்நோக்கியிருக்கும் பல்வேறு சவால்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான சவாலே பிரதானமானது. இந்த பொருளாதார பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் நாள்தோரும் சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் இந்த கருத்துக்கள் யாருக்கு சொல்லப்படுகிறது என்ற கேள்வியை கருத்துரைப்போரை கேட்போமானால் அவர்களின் பதில் நிச்சயமாக அனைவருக்கும் என்றே இருக்கும்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக தாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்தே ஆகவேண்டும். ஆனால் அவை நடைபெறுகிறதா இல்லையா என்பது எனது கேள்வியல்ல, நமது நாட்டிலுள்ள, பொருளாதார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் அடிப்பட்ட மக்கள் வரை செல்கிறதா என்ற கேள்வியே எழுகின்றது.

அந்த வகையில் யோசுவாவின் அனைத்து படைப்புக்களுமே ‘கலை கலைக்காவே’ என்ற கருத்தியலை தாண்டி, இலக்கியம் சமூக மாற்றத்திற்கான அடிப்படை களம் என்பதாகவே இருக்கிறது. யோசுவாவின் நாவல்கள் சிறு கதைகள் கவிதைகள் அனைத்துமே சமகால பிரச்சினைகளை சொல்லும் படைப்புக்கள் மட்டுமல்ல அப்படியானால் அது ஒரு சாதாரன இலக்கியம் என்றாகிவிடும். அது அதனையும் தாண்டி தீர்வுகளை மிக நுணுக்கமாக ஆக்கபூர்வமானதாக யதார்த்தமானதாக முன்வைக்கிறது. அந்த வகையில் இந்த பகுதியில் யோசுவாவின் மிகச்சிறந்த ஒர் நாவல் படைப்பான ‘பாப்பாத்தி’ நூல் படைக்கப்பட்டிருக்கும். பாப்பாத்தி என்ற ஒர் இளம்பெண் இலங்கையின் பொருளாதார சவால்களுக்கான தீர்வுகளை முன்வைத்திருக்கும் கருத்துக்களை வாசிக்கும் போது யோசுவாவின் பாத்திர படைப்பின் வகை பாங்கும், அதன் வடிவமும் இலங்கை சமூகத்தில் ஆயிரம் ஆயிரம் பாப்பாத்திகளை சிறகு விரிக்க தூண்டும் ஒரு பாத்திரமாக இருக்கின்றது என்றே கூறவேண்டும்.

புலம்பெயர்ந்த தேசத்தில் குடியேறிய ஒரு இலங்கை தம்பதிகளுக்கு பிறக்கும் ரேனு என்ற பெண் தனது பல்கலை கல்வியில் வறுமையின் காரணிகள் (Course of Poverty) குறித்து ஓர் ஆய்வு செய்வதற்கு முற்படுவதும் அந்த ஆய்வின் ஒரு கட்டத்தில் வறுமை ஆய்வு செய்து எழுதப்பட முடியாது அது வாழ்வதற்கூடாகவே எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டப்படியால் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் ஒரு சாதாரண குடும்பத்தில் வாழத்தொடங்குவதும், அங்கு ஏற்கனவே வாழ்ந்து மரணித்துபோன ஒர் இளம் பெண் பாப்பாத்தியின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு தன் பேரை பாப்பாத்தியாக மாற்றிக்கொண்டு கிளிநொச்சியின் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்திற்கும் இலங்கையின் உற்பத்தி பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பை அவள் வழங்கியதையும் இக் கதை சொல்கிறது.

2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் யோசுவாவால் எழுதப்பட்ட இந்த நாவல் 2021ம் ஆண்டில் இலங்கையில் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகளை அப்போதே முன்வைக்கும் ஒர் பாத்திரமாக பாப்பாத்தியை யோசுவா நிறுத்தியுள்ளார்.

 

சரி யார் இந்த பாப்பாத்தி?

பாப்பாத்தி ஒரு பல்கலைக்கழக மாணவி, வறுமை பற்றிய அறிதலுக்காக வறுமையைப் பற்றிய ஒர் புதிய புரிதலை சமூகத்திற்குள் முன்வைத்தவள், இலங்கையின் உற்பத்தி பொருளாதாரத்தில் ஏற்றுமதி சார் உற்பத்திகளுக்கான புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தியவள், இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கான மிக முக்கியமான அடித்தளம் இன நல்லிணக்கமும் இலங்கையர் என்ற பொது அடையாளத்துடன் அனைத்து சமூகங்களும் எவ்விதமான அடக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இன்றி வாழும் சூழ்நிலையை உருவாக்குதலே தீர்வு என்று கூறியவள் அதன்படி வாழ்கிறாள் இப்படி பல விடயங்களை கூறிக்கொண்டே போகலாம் பாப்பாத்தி பாத்திர படைப்பு குறித்து கவிஞர் கருணாகரன் கூறியதை இங்கு பதிவிட விரும்புகின்றேன்.

‘பாப்பாத்தியில் உள்ள மனிதர்களைப்போன்ற உழைப்பாளிகளை நானும் அறிவேன். ஆனால், துரதிருஷ்டவசமாக இவர்களுடைய தொகை குறைவு. இதைக் கூட்டுவதே நம்முன்னாலுள்ள சவாலும் பணியுமாகும். இன்று பலரும் உழைப்பைக் கைவிட்டு நிவாரணத்தையும் உதவிகளையும் எதிர்பார்த்தே வாழ்க்கையை ஓட்டுகின்றனர. ‘பாப்பாத்தி’யில் இவர்களுக்கு இடமுமில்லை. மதிப்புமில்லை. இங்கிலாந்தின் சிரோப்ஸ்செயார் நகரில் உள்ள ஹபர் அடாம் பல்கலைக்கழகத்தில் பயிலும் ரேனு என்ற மாணவி ‘இலங்கையில் வறுமையும் தமிழரும்’ என்ற தலைப்பில் பேசுவதிலிருந்து தொடங்கும் கதையில், ரேணு தன்னுடைய ஆய்வுப்பணிக்காக வன்னிக்கு வந்த போது சந்திக்க நேர்ந்த, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் சுரேஸ் என்ற இளைஞரைத் திருமணம் செய்வது வரையில் நிகழ்கிறது. இதற்குள் பிரித்தானியச் சுழலில் கட்டமைந்துள்ள பன்மைத்துவ வாழ்க்கை, புலம்பெயர் தமிழ் மக்களின் மனநிலை, அவர்களுடைய எதிர்பார்ப்புகள், இலங்கையில் தமிழ், சிங்களச் சமூகங்களிலிருந்து புதிய மாற்றங்களைக் குறித்துச் சிந்திக்கும் மனிதர்கள், மலையகத்திலிருந்து வன்னிக்குப் பெயர்ந்து வாழும் மக்கள் ஏனையோருடன் எப்படிப் போராட்டத்திற்கும் போருக்கும் முகம் கொடுத்து வாழ்கின்றனர் என இன்றைய உலக ஒழுங்கில் பன்முக வாழ்க்கை எப்படியெல்லாம் கட்டமைந்துள்ளது என்று உணர்த்தப்படுகிறது.

இது முக்கியமானது. யாரும் இன்று தனித்து தனியொரு சமூகமாக வாழ முடியாது என்பது மறுக்க முடியாத யதார்த்தம். இதைப் புரிந்து கொண்டு நம்மை ஒழுங்குபடுத்த வேண்டும். இங்கே ரேணுவின் திருமணம் இதற்கு ஒரு சிறு சாட்சியம். மேலும் இங்கிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழ்கின்ற இளைய தலைமுறையினரின் எண்ணத்துக்கு மாறாக இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பெண் இலங்கைக்கு வந்து வாழ விரும்புவது இன்னொரு கவனப்புள்ளியாகும். இதில் இலங்கையின் இனத்துவ சீரழிவு, புதிய இன நல்லுறவுக்கான உரையாடல்கள், பொருளாதாரக் கட்டமைப்புக்குரிய முயற்சிகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கி, சமகாலத்துக்கான உரையாடலை உருவாக்கியுள்ளார் யோசுவா என்று கவிஞர் கருணாகரன் கூறுகின்றார்.

யோசுவாவின் பாத்திர படைப்புக்களில் பாப்பாத்தி மிகச் சிறந்த ஒர் இலட்சயவாதியாகவும் இலங்கை தேசத்தில் அனைவராலும் ரசிக்கப்படவும் வாழப்படவும் வேண்டிய ஒருவளாகவும் இருப்பதற்கான ஒரே காரணம் ஒரு கற்பனை பாத்திரம் யாதார்த்த நிலையை தாண்டாமல் இயல்பான வாழ்க்கை முறையால் தனது இலட்சியவாதத்தை நிருபிக்கும் முறைமைதான் என்றே கூறலாம்.

அதற்காக மூன்ற உதாரணங்களை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது ரேணுகா என்ற பாப்பாத்தி முதல் முதல் இலங்கை வரும்போது இலங்கையின் வடக்கு பிரதான வீதிகளில் சிறுவர்களால் நாவல் பழங்கள் விற்கப்படுகின்றது. வழமையாக செப்ரெம்பர், ஒக்டோபர் மாதங்களில் இலங்கையின் வடபகுதியில் இயற்கையாக கிடைக்கும் நாவல் பழம் எவ்விதாமான நஞ்சூட்டலும் இன்றி மிக ஊட்டசத்து நிறைந்த பழமாக மிக குறைந்த விலையில் வீதிகளில் விற்கப்படுகிறது. அப்படி விற்கப்படும் நாவல் பழங்களை வாங்கி சுவைக்கும் பலர் நாவல் பழத்தின் சுவையையும் மறந்து அதை விற்கும் சிறுவர் சிறுமியின் வாழ்க்கை சோகங்களை குறித்தே அதிகம் உரையாடிச்செல்வது வழக்கம். வறுமை நிலையால் பாவம் இந்த துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றே கூறுவார்கள். குறிப்பாக அப்படிப்பட்ட சிறுவர்கள் குறித்து கவிதைகள் கதைகள் கூட எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் முதல் முறையாக யோசுவாவின் பாத்திரமான ‘பாப்பாத்தி’ நாவல் பழம் விற்கும் ஒரு சிறுவனின் வாழ்க்கை கதையை தனது கலாநிதி பட்டத்திற்கான அதுவும் குறிப்பாக பொருளாதார கலாநிதி பட்டத்திற்கான மையப்பொருளாக எடுக்கிறாள்.

ராகவன் என்ற அந்த சிறுவன் தன் மாற்றுத்திறனாளி தந்தையின் வருமானம் போதுமானதாக இல்லாத படியால் தனது தங்கையின் கல்விக்கும் தனது கல்விக்கும் செலவு செய்வதற்கான பணத்தை சனி , ஞாயிறு தினங்களில் நாவல் பழம் விற்கும் பணத்தில்இருந்து பெற்று செலவு செய்வதாக கூறும் அந்த சிறுவன், தான் மாதம் 8000 ரூபா வரை உழைப்பதாக கூறுகின்றான்.

அச்சிறுவன் ஏ9 வீதியில் பயணிக்கும் வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்த நாட்டின் இயற்கை வளத்தை சந்தை பொருளாக்கும் வணிகத்தை தனது ஆய்வுக்கான களமாக எடுக்கின்றாள், பாப்பாத்தி உண்மையில் யோசுவா பாப்பாத்தியை எவ்வளவு உயர்ந்த தளத்தில் படைத்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடலாம். அதாவது நாவல் பழத்தை அந்த சிறுவனிடம் வாங்கிய பின் அவனிடம் உரையாடிவிட்டு அவன் கதைகளை அனைத்தையும் கேட்டுவிட்டு அவன் பாதத்தை தொட்டு பாப்பாத்தி வணங்குகின்றாள். இது யோசுவா பாப்பாத்தியை இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான விதையாக விதைக்கும் இடமாகவே நான் பார்க்கின்றேன்.

இரண்டாவது உதாரணம் இங்கிலாந்தில் கலாநிதிப்பட்டத்தை பொருளாதார துரையில் பெற்றுக்கொண்ட பாப்பாத்தி வன்னியில் யுத்தத்தால் கால்களை இழந்த சுரேஸ் என்ற ஒர் இளைஞனை காதலித்து திருமணம் செய்யும் பாப்பாத்தி தன் வாழ்க்கையின் புதிய பரிமாணத்தின் அழகை இவ்விதம் விபரிக்கிறாள். சுரேஸ் நீ தான் இந்த மண்ணுக்குள் கிடந்த மாணிக்க கல் நீ இல்லாத வாழ்க்கை இத்தனை அழகாக மாறியிருக்காது, இங்கிலாந்தின் ஒரு மூலையில் குளிருக்கும் பனிக்குமிடையில் பயணிக்கும் ஒரு வேகமான ரயிலை விட என் வாழ்க்கை பீட்சாவோடும் சான்வீச்சோடும் ஒடியிருக்கும் என்று கூறுகின்றாள்.

இன்றைய இலங்கையில் இளைஞர் யுவதிகளின் கனவாக இருப்பது எப்படியாவது வெளிநாட்டுக்கு சென்று விட வேண்டும் என்பதுதான். அதில் உண்மையும் இருக்கிறது நாடு வெறுமையாக மாறுகின்றபோது இதில் இருந்து தப்புவதை தவிர வேறு வழியில்லை என்றே கூறவேண்டும். ஆனால் யோசுவாவின் பாப்பாத்தி இந்த மண்ணின் வளங்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லும் புதிய உத்திகளுக்கான களத்தை விரிக்கின்றாள் அதற்காக இலங்கையையே தனது வாழ்வுக்கு மிக பொருத்தமான இடமாக தேர்ந்தெடுக்கிறாள்.

மூன்றாவதாக பாப்பாத்தி சமூக பொருளாதார நிபுணராக தன்னை தக்கவைக்கும் பிரமாண்டத்தை யோசுவா படைத்திருக்கிறார் அதாவது இதுவரை ஒருவரும் தொட்டுப் பார்க்காத ஒரு வளமாக இருக்கும் இலங்கையின் நாட்டு கீரைகளை சர்வதேச சந்தைக்கான விலை பொருளாக மாற்றுவதற்கான உத்திகளை பாப்பாத்தி செய்கிறாள், அதற்காக கிராமம் தோரும் ‘கீரை பெண்கள்’ என்ற இயக்கத்தை தொடங்குகின்றாள்.

உண்மையில் பாப்பாத்தி நாவல் இக்காலகட்டத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய ஓர் நூல்…. இன்னுமொறு யோசுவாவின் பாத்திரத்துடன் அடுத்த இதழில் சந்திக்கும் வரை…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT