Thursday, May 9, 2024
Home » நியாயமான தீர்வை ஜனாதிபதி வழங்குவார் என நம்பிக்கை
தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு

நியாயமான தீர்வை ஜனாதிபதி வழங்குவார் என நம்பிக்கை

இல்லையேல் பதவிகளை துறக்கவும் தயார்

by gayan
April 27, 2024 1:21 pm 0 comment

பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான சம்பள உயர்வை மே மாதம் முதலாம் திகதி அரசாங்கம் அறிவிக்கத் தவறினால் தாம் அனைத்து

பதவிகளையும் துறக்கத் தயாராகவுள்ளதாக வடிவேல் சுரேஷ் எம்.பி. தெரிவித்தார். சம்பளம் அதிகரிக்கப்படா விட்டால் மக்களுடன் வீதியில் இறங்கி போராடி உரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி நியாயமான தீர்வை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தினர் பேச்சுவார்த்தையை மீண்டும் புறக்கணித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு இடம்பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இம்முறை மூன்று வருடங்கள் கடந்தும் அது இடம்பெறவில்லை.

எவ்வாறாயினும் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடனும் தொழில் அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதற்கிணங்க தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான சம்பள உயர்வை அரசாங்கம் சட்ட ரீதியாக அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

மே முதலாம் திகதி சம்பள உயர்வுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பாராளுமன்ற பதவி உள்ளிட்ட பட்டம் பதவிகள் எமக்குத் தேவையில்லை. அனைத்தையும் கை விட்டு எமது மக்களுடன் வீதியிலிறங்கி சம்பள உயர்வுக்காக போராடி அதனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

ஒரு இலட்சத்து 43ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே நாம் கேட்கின்றோம். அதனால் ஜனாதிபதி மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக அந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.

சம்பள உயர்வை வர்த்தமானியில் வெளியிட்டு சட்டபூர்வமாக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தொழிலாளர்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT