Monday, May 20, 2024
Home » கண்டி விவேகானந்தாவில் பரிசளிப்புடனான புத்தாண்டு விசேட கலாசார நிகழ்வுகள்

கண்டி விவேகானந்தாவில் பரிசளிப்புடனான புத்தாண்டு விசேட கலாசார நிகழ்வுகள்

by Gayan Abeykoon
May 9, 2024 1:02 pm 0 comment

ண்டி விவேகானந்தா  கல்லூரியின் பரிசளிப்பு விழா மற்றும் 2024 ஆம் ஆண்டின் சித்திரைப் புத்தாண்டு விசேட கலாசார நிகழ்வுகள்  பாடசாலை மண்டபத்தில்  அதிபர்  எஸ். சிவஞானசுந்தரம்  தலைமையில் சிறப்பாக  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் பி. விக்கினேஸ்வரன் மற்றும் கௌரவ அதிதிகளாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் துரை மதியுகராஜா , கண்டி  கல்வி வலயத்தின்  தமிழ் பிரிவுப் பணிப்பாளர்  எஸ் தமிழ்ச் செல்வன் மற்றும் திருமதி பெரேரா ஆகியோர் கலந்து  சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக மலையக கலை கலாசார இரத்தின தீப சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் ,கண்டி சிட்டி டெக்ஸ் உரிமையாளர்  எம். சுந்தரமூர்த்தி, மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமன், மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் பொருளாளர் சந்ததி ரவதனா ரட்ணராஜ குருக்கள், தேவி நகைக் கடை உரிமையாளர் திருமதி  பத்மாவதி  சந்திரமூர்த்தி  ,கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்  தேசபந்து எம். தீபன் ஆகியோர் பங்கேற்றனர். இப்பிரமுகர்கள் அனைவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கண்டியைப் பொறுத்தவரையில் தமிழ் வர்த்தக சமூகத்தில் மிக முக்கியமாக மலையக கலை கலாசார இரத்தின தீப சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வன்  அண்மைக் காலமாக  பாடசாலைகளுக்கு உதவி செய்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.  அவை மட்டுமல்ல தமிழ் இலக்கியத் துறைக்கு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளார். கல்வித் துறை சார்ந்த புத்தக வெளியீடுகள், மலையக கலை இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் போன்ற தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பெரியதொரு பங்களிப்பைச் செய்து வருகிறார் என்பது முக்கிய விடயமாகும்.

பாடசாலை அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் தனதுரையில்;

எமது இந்து சமய கலாசார பாரம்பரியங்கள் மாணவர்கள் மத்தியில் அழிந்து கொண்டு செல்வதன் காரணமாகவும், கலாசாரப் பாரம்பரியங்களை  இன்று மாணவர்கள் கடைப்பிடிப்பதில்லை என்றதொரு பாரிய குற்றச் சாட்டு நிலவுகிறது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். மாணவர்கள் புதிதாக நவீன கால  உலகத்திற்கு ஏற்ப முயற்சிக்கின்றார்களே தவிர பழைய பாரம்பரிய கலாசார அம்சங்களை கடைப்பிடித்து வாழ்வதற்கு  மாணவர்கள் முயற்சிப்பது குறைவு.  வீடுகளிலும் அவ்வாறுதான் இருக்கிறது.

எனவே கலாசாரப் பாரம்பரியங்கள்  பற்றி மாணவர் மத்தியில் விழிப்புணர்வூட்டுவதற்காகவும்  இவ்வாறு புத்தாண்டு நிகழ்வுகள்  கொண்டாடப்பட வேண்டும்.  ஏனைய சமூகத்தினர்களை  எவ்வாறு வரவேற்பது, புத்தாண்டு நிகழ்வுகளில் என்னென்ன? எவ்வாறான விளையாட்டுக்கள் இருக்கின்றன.  கடவுளை எவ்வாறு வணங்க  வேண்டும். அதற்குரிய பாரம்பரிய முறைகளை நாங்கள் சொல்லிக் கொடுப்பதற்காகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகளில் மாணவர்கள் தங்களுடைய செயற்பாட்டின் ஊடாகவே அனைத்தையும்  செய்து காட்டினார்கள். ஏனைய சமூகங்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளுதல்  போன்ற  வகையிலான விடயங்களை மாணவர்கள் செய்து காட்டினார்கள். இதற்கு மாணவர்களுடைய வருகையும் பெற்றோர்களுடைய வருகையும் பங்களிப்பும் நூறு விகிதமாக இருந்தது. இது வரவேற்கக் கூடிய விசயம்.

எதிர்வரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய சிங்களப் பாடசாலைகளை இணைத்துக் கொண்டு மேலும் சிறப்பாகச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள  நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதேவேளை, இந்நிகழ்வில் பெரியார்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமைக்கான காரணம் குறிப்பாக அதிதிகளை வரவேற்று கௌரவிப்பது என்பது  எதிர்காலத்தில் எங்களுடைய மாணவர்களும்,  இங்கு வருகை தந்துள்ள அதிதிகள் கௌரவிக்கப்படுவதைப் போல சிறிய காலத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களை அழைத்து மாணவர்களையும் முன்னிறுத்தி இம்மாணவர்களும் இத்துறைகளில் ஆர்வத்தை வளர்க்க  வேண்டும் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டியுள்ளோம்.  இதற்காக ஞானதீப விருது என்ற பெயரில் பல பெரியார்களை வரவழைத்து கௌரவித்து வருகின்றோம். இந்த விருது வழங்குவதன் நோக்கம்  எதிர்காலங்களில் இந்த வர்த்தகப் பிரமுகர்களுடைய   செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவும் அவர்கள் தங்களுடைய உதவிகளை  ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதன் மூலம்   கல்வித் துறையை பரந்த மட்டத்தில் மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எமது முக்கிய நோக்கம்.

இப்பாடசாலையைப் பொறுப்பேற்று  ஆறு மாதம் காலம் ஆகின்றது. அதற்குள் ஒரு செயற்கை நுண்ணறிவு கற்கை வகுப்பை ஆரம்பித்துள்ளோம். அது குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டதாகும்.  மாணவர்களுக்கு வெளியே இருந்து வளவாளர்களைக் கொண்டு வந்து  கல்வித் துறையை உயர்த்துவதற்காக பல்வேறுபட்ட செயற்பாடுகளை  செய்துள்ளோம்.  குறிப்பாக மாணவர்களை ஊக்குவித்தல் ஊடாக சிறந்த கல்வி அறிவைப் பெறுவதற்கு ஊக்குவித்தல் செயற்பாடுகளை தொடரேச்சியாக செய்து வருகின்றோம்.

இப்பிரதேச மாணவர்களின் வெளிச் சூழல் சற்று மோசமாகத்தான் இருக்கிறது. மாணவர்கள் பாடசாலைக்குள் நுழைந்தவுடன் தங்களை இயல்பாக்கம் ஆக்கிக் கொள்வார்கள். என்றாலும் கூட இந்த மாணவர்கள் தற்காலத்தில் கொரோனா தொற்றுக் காலத்திற்குப் பிறகு இந்தப் பொருளாதார வீழ்ச்சியின்  காரணமாகவும் மாணவர்களுடைய வரவு ரொம்பக் குறைவாக இருக்கிறது. இந்த மாணவர்களுடைய வரவை  கூட்டிக் கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

பெற்றோர்கள் மத்தியில் கல்வியின் பால் உள்ள விழிப்புணர்வு அல்லது கல்வியின் மீது செலுத்துகின்ற கவனத்தை குறைத்துக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக அன்றைய நாளை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியும் என்ற காரணத்தினால் பிள்ளைகளைப் பார்க்கக் கூடிய சூழல் அவர்களிடத்தில் இல்லை. முழுமையாக ஆசிரியர்களே அவ்வளவு பொறுப்புக்களையும் சுமக்க கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி  கல்வி வலயத்தின்  தமிழ் பிரிவுப் பணிப்பாளர்  எஸ் தமிழ்ச் செல்வன் உரையாற்றும் போது;

கண்டி மாநகரில் உள்ள பாடசாலைகளில்  வேகமக வளர்ந்து வரும் பாடசாலைகளில்  கண்டி விவேகானந்தா பாடசாலை காணப்படுகிறது.  புதிதாக வருகை தந்துள்ள அதிபர் கல்வி அபிவிருத்தியில்  அக்கறை கொண்டு செயற்படுகின்றார்.  இதுவரை வந்த பெறுபேறுகளில் இனிவரும் பெறுபேறுகள் மிகவும் அதிகமான வளர்ச்சி விகிதத்தைக் காட்டும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

இப்பாடசாலையைப் பொறுத்தவரையில்  பெரிய இடவசதியோ வேறு பெரியளவிலான பௌதீக வளங்களும் இல்லை.  ஆனாலும் அனைத்துப் பெரிய பாடசாலைகளில் நடைபெறும்  அனைத்துச் செயற்பாடுகளையும் இந்தப் பாடசாலை  முறையாக காலத்திற்கு காலம் கடந்த காலத்தில் இருந்த அதிபர்மார்களும் சரி இப்போதுள்ள அதிபரும் சரி  செய்து கொண்டு இருக்கிறார்கள்.  குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் விளையாட்டுப் போட்டியாக இருக்கட்டும், பாடசாலை மட்டத்தில் நடைபெறும் கலைவிழாக்களாக இருக்கட்டும் அல்லது வேறு பரிசளிப்பு விழாக்களாக இருக்கட்டும் தத்தமது பாடசாலையின் பெற்றோர்களுடைய நிலைக்கு ஏற்ப செய்து கொண்டு செல்கின்றனர்.  அதற்கு  மிக முக்கியமான காரணம் இருப்பது சமூகம் ஆகும்.  குறிப்பாக பாடசாலைச் சமூகம் என்பதை விட  வர்த்தக சமூகம், வர்த்தப் பிரமுகர்கள் இந்தப் பாடசாலையின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பாண்ட் வாத்தியம் தேவையை ஏற்றுக் கொண்டு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி  இந்தச் செல்வந்தர்கள் நலன்விரும்பிகள் விவேகானந்தாப் பாடசாலையாக இருக்கட்டும் கண்டி நகரிலுள்ள பாடசாலையாக இருக்கட்டும் அதற்கு முன்வந்து இயங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.  ஆரம்ப காலத்தில் இந்தப் பாடசாலைக்கும் வர்த்தக சமூகத்திற்கும்  தொடர்பு மிக மிகக் குறைவாக இருந்தது. அது ஒரு வேறு வழியாகவும்  அரச பாடசாலை ஒரு வழியாகவும்  இருந்தது.  அந்த நிலைமை இன்று மாறி  அரச பாடசாலையாக இருந்தால் கூட  தங்கள் பரம்பரைக்குரிய பாடசாலை என்ற வகையில் நகர்ப்புற வர்த்தகப் பிறமுகர்களும்,  நலன் விரும்பிகளும்,  பாடசாலைக்கு உதவி புரிவதில் பெரிய  மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

அவற்றுக்கும் மேலாக இன்று நடைபெறும் விழாவான கொரோனா காலத்தில் ஐந்தாம் ஆண்டுப் பரீட்சையிலும் மற்றும்  க. பொ. த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை  பாராட்டு நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் எந்தவொரு பாடசாலையும் முறையாக  செயற்பட வில்லை.  ஆனால் அந்தக் காலத்தை எல்லோரும் கைவிட்டுச் சென்று அடுத்தடுத்து புதிய அத்தியாயத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.  ஆனால் இந்தப் பாடசாலையில் அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்  இரு வருடத்திற்குரிய மாணவர்களுக்குரிய பரிசளிப்பையும் இந்த மேடையில் செய்கின்றனர்.  அதற்கு எமக்கு முக்கியமாக இருப்பவர் எனது நகர வர்த்தகப் பிரமுகர்கள்.  இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் நன்றி பாராட்டுதல் வேண்டும்.  ஆகவே இந்தப் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் கௌரவிப்பை நடத்துவதன் ஊடாக  ஏனைய மாணவர்கள் முன் மாதிரியாகத் திகழ்வர்.

அதே போன்று  இன்னும் ஒரு மிக முக்கியமான நிகழ்வு இப்பாடசாலையில் இடம்பெறுகிறது.  அதுதான் புது வருட விழாவாகும்.

புது வருடம் என்பது தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடைபெறுகின்ற ஒரு விழாவாகும். இது அனைவரும் பின்பற்றுகின்ற விழா.  அதனை மிக அழகாக வகுப்பு ரீதியாக  ஒழுங்கு செய்யப்பட்டு இன்றைய முழு நாளும்  அதற்காக ஒதுக்கப்பட்டு  ஒவ்வொரு வகுப்புக்களிலும் புது வருட விழாக்களை எப்படி  சிங்கள மக்களும் இந்து மக்களும்  தங்கள் கலாசாரத்திற்கு ஏற்றமாதிரி  வேற்றுமையில் ஒற்றுமை காணக் கூடிய வகையில்  செய்து கொண்டிருக்கின்றார்கள்.  அந்த அமைப்பில் சிங்கள கலாசாரத்தைம் தமிழ் கலாசாரத்தையும்  ஒரு வகுப்பறையில் உருவாக்கக் கூடிய சூழ்நிலையில்  இன்றைய நிகழ்வு நடைபெறுகின்றது.  ஒரு வித்தியாசமான நோக்கில் ஒரு நாளில் இரு நிகழ்வுகளை இப்பாடசாலை அதிபர் ஏற்பாடு செய்துள்ளார்.  இதற்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும்,  பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் முழுமையான ஒத்துழைப்பை  வழங்குவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.  இந்தப் பாடசாலையில் இன்னுமொரு முக்கியமான விடயம்.  சமூகத்துடன் இணைந்து வேலை செய்வது

அதேவேளையில், இந்நிகழ்வில் வர்த்தகப் பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டமை பாராட்டத்தக்க விடயம் ஆகும்.  இந்தப் பாடசாலையின் அபிவிருத்திற்கும்  தமிழ் வளர்ச்சிக்கும் உதவி புரிந்த முன்னாள் மத்திய மாகாண சபை முதல்வர் துரை மதியுகராஜா இந்தப் பாடசாலையின் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தார்.  அவர் கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து  மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ் பரமேஸ்வரன் கௌரவிக்கப்பட்டார். சிட்டி டெக்ஸ் உரிமையாளர் கௌரவிக்கப்பட்டார். சமூகப் பணியாளர் தேசமானிய சந்திரவதனா ரட்ணராஜா குருக்கள், தேவி நகைக் கடையின் உரிமையாளரின் துணைவியார், கலாசார தொடர்புடைய சிங்களப் பெண்மணி ஒருவரும் வருகை தந்திருந்தார்.

இப்பாடசாலையில் நடைபெறும் மற்றுமொரு விடயம் இந்தப் பாடசாலைக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவ்வப் போது கௌரவிப்பைச் செய்து அனுப்பி வைக்கின்றார்கள். இதில் மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. .இராமன் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT