Monday, May 20, 2024
Home » இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் வெடிகுண்டு விநியோகம் நிறுத்தம்

இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் வெடிகுண்டு விநியோகம் நிறுத்தம்

by Gayan Abeykoon
May 9, 2024 11:32 am 0 comment

காசாவின் ரபா மீதான படை நடவடிக்கைக்கு பயன்படுத்தக் கூடும் என்ற கவலை காரணமாக இஸ்ரேலுக்கான வெடிகுண்டு விநியோகம் ஒன்றை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

ரபா மீதான முக்கிய தரைவழி தாக்குதல் ஒன்று குறித்த அமெரிக்காவின் கவலைக்கு இஸ்ரேல் ‘முழுமையாக பதிலளிக்காத’ நிலையில் 907 கிலோ குண்டுகள் மற்றும் 226 கிலோ குண்டுகளை வழங்குவதையே அமெரிக்கா நிறுத்தி இருப்பதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை இஸ்ரேல் எவ்வாறு நடத்துகிறது என்பதை பொறுத்தே காசா மீதான அமெரிக்காவின் கொள்கை அமைந்திருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஏப்ரலில் எச்சரிக்கை விடுத்த நிலையில் ஆயுதங்கள் நிறுத்தப்பட்டிருப்பது இது முதல் முறையாகும்.

அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வரும் ரபா மீதான தரைப் படை நடவடிக்கை ஒன்றை இஸ்ரேல் நெருங்கி இருக்கும் நிலையிலேயே அமெரிக்க நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

‘இதற்கான மாற்று வழி தொடர்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றபோதும் எமது கவலை தொடர்பில் முழுமையான பதில் கிடைக்கவில்லை’ என்று அந்த அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஆயுதக் களஞ்சியத்தில் இருக்கும் 907 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகள் குறிப்பாக சனநெரிசல் மிக்க காசாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாகும். அதிக வெடிபொருட்களால் பாரிய பள்ளங்கள் ஏற்படும் என்பதோடு அதன் பாகங்கள் விழுந்த இடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான அடி தூரம் வரை செல்லக் கூடியதாக இருக்கும்.

இந்த குண்டுகளால் காசாவில் 500க்கும் அதிகமான பள்ளங்கள் தோன்றி இருப்பது தொடர்பில் போரின் ஆரம்பத்தில் செய்மதி ஆதாரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT