Thursday, May 9, 2024
Home » படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல்

படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல்

எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு

by gayan
April 27, 2024 10:06 am 0 comment

தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தனது நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் ரபா மீதான படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சும் எகிப்து புதிய போர் நிறுத்த முயற்சியாக உயர் பட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான படையெடுப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வலுத்திருந்தபோதும் அங்கு தரைவழி நடவடிக்கைக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

இதற்கான சமிக்ஞையாகவே அங்கு தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ரபா நகர கடற்கரையில் வேலை செய்துகொண்டிருந்த மீனவர் ஒருவர், இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

காசா கடற்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வரும் இஸ்ரேலினால் அங்குள்ள மீனவர்கள் தொடர்ந்து தொந்தரவுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ‘நட்சரிட் இடைவழியில்’ செயற்படும் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் கடந்த வியாழனன்று (25) மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக போர் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா மீதான படை நடவடிக்கைக்கு இஸ்ரேலிய படையினர் வெளிப்படையாக தயாராகி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ரபா படையெடுப்பு தொடர்பில் சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இஸ்ரேல் இரு மேலதிக படைப்பிரிவுகளை அழைத்திருப்பதோடு, ரபாவுக்கு அருகில் கான் யூனிஸ் நகரில் பாரிய அளவில் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பது செய்மதி படங்கள் காட்டுகின்றன.

ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்கும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 133 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ரபா மீதான படை நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

எனினும் காசா விளிம்பில் உள்ள ரபா நகர் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக இருப்பதோடு அங்கிருந்து அவர்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டபோதும் அது நடைமுறை சாத்தியமற்றது என்று ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் வடக்கில் காசா நகரில் உள்ள அல் ஷபா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து ஒரு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் காசா நகரில் இயங்கும் கடைசி மருத்துவமனையான அல் அஹ்லி அரபு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவையும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கும் எகிப்து, உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

இழுபறி நீடிக்கும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் புதிய முயற்சியாக எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸ் கமால் தலைமையிலான குழு ஒன்றே இஸ்ரேல் விரைந்துள்ளது.

இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய கணிசமான எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிப்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவிருப்பதாக எகிப்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படை வாபஸ் பெறும் தமது நிபந்தனையில் இருந்து பின்வாங்கப்போதில்லை என்று ஹமாஸ் கூறி வருவதோடு அந்த நிபந்தனைகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஹமாஸ் முழுமையாக தோற்கடிக்கப்படுவது மற்றும் அதன்பின் காசாவில் பாதுகாப்பு நிலைப்படுத்தப்படும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறுகிறது.

ரபாவையொட்டி இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எகிப்துடனான காசா எல்லையில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்படுவதற்கு அதிருப்தியை வெளியிடவும் இஸ்ரேல் சென்றிருக்கு எகிப்து தூதுக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

ரபாவில் உள்ள பலஸ்தீனர்கள் எல்லை கடந்து எகிப்துக்குள் வர அனுமதிக்கப்போதில்லை என்று எகிப்து ஏற்கனவே உறுதியாக குறிப்பிட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்துடன் கட்டார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் ரபா மீதான படையெடுப்பு இந்த பேச்சுவார்த்தையை முறிக்கும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘ரபாவில் இஸ்ரேல் எதிர்பார்த்ததை அடையாது’ என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான காசி ஹமாத் தெரிவித்தார். ஏழு மாத போரில் ஹமாஸை ஒழிப்பது அல்லது பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகிய எந்த இலக்கையும் இஸ்ரேல் அடையவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காசா போர் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு இடையில் மோதலை தூண்டி இருக்கும் சூழலில் அது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமகன் ஒருவன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

கபர் சுபா மலைப் பகுதியில் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி மேற்கொண்ட சிக்கலான அதிரடி தாக்குதலில் இரு இஸ்ரேலிய வாகனங்களை அழித்ததாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது.

இது தொடர்பில் இஸ்ரேல் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

தெற்கு லெபனானில் ஷெபா கிராமத்தைச் சூழ ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாக அது குறிப்பிட்டது. இதில் பல வீடுகளும் சேதமடைந்திருப்பதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா மோதல்களில் லெபனானில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 252 ஹிஸ்புல்லா போராளிகளும் அடங்குவதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இந்தக் காலப்பகுதியில் 11 இஸ்ரேலிய படையினர் மற்றும் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT