Saturday, April 27, 2024
Home » அல் குர்ஆனை ஒதுவோம்

அல் குர்ஆனை ஒதுவோம்

by Gayan Abeykoon
March 29, 2024 8:27 am 0 comment

உலகப்பொது மறையாம் அல் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பெற்றது. இம்மாதத்தின் சிறப்பு குறித்து அல் குர்ஆன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

‘ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)’. (2:185)

இவ்வசனத்தின் மூலம் ரமழான் மாத நோன்பின் மதிப்பையும், அதன் சட்ட திட்டங்களையும், அல் குர்ஆனின் மகத்துவத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

இது அல் குர்ஆன் அருளப்பட்ட ஆரம்பமான மாதம் என்பதால் இம்மாதத்தில் நாம் இயன்றவரை அல் குர்ஆனை ஒத வேண்டும். குறிப்பாக அதனை முழுமையாக ஓதி முடிக்க முயற்சிக்க வேண்டும். அல் குர்ஆன் முப்பது பாகங்களைக் கொண்டது. அதனால் தினமும் நாம் தவறாமல் நாள் ஒன்றுக்கு ஒருபகுதி என்று ஓதினால் ரமழானின் முப்பது நாட்களிலும் அதன் முப்பது பகுதிகளையும் மிக இலகுவாக ஓதி முடித்துவிடலாம். அத்தோடு அல் குர்ஆனை விளங்கவும் முயற்சி செய்யவும் தவறலாகாது. அதன் ஊடாக அல் குர்ஆனின் தூதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அது மிகவும் இன்றியமையாததாகும்.

மேலும் இம்மாதத்தில் நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு குர்ஆனியச் சொற்களுக்கும் ஒன்றுக்கு எழுபது என்றபடி நன்மைகள் வழங்கப்படுகின்றன. அதனால் நாம் அல் குர்ஆனை ஒரு முறை முழுமையாக ஓதி முடித்தால் அதனை எழுபது முறை ஓதி முடித்ததற்குச் சமமாக அமையும். அதேநேரம் மற்றொரு வசனத்தில் அல் குர்ஆன், ‘ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது. இதன் மூலம் நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆவீர்கள். (2:183) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணத்தை இவ்வசனம் எடுத்தியம்புகிறது. மனித வாழ்வுக்கு இறையச்சம் மிகவும் அவசியமானது.

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் அமைய நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபடும் போது இறையச்சத்தை அடைந்து கொள்ளலாம்.

அல்லாஹ்விற்காக நோன்பு நோற்கும் ஒருவர், தன் வீட்டில் அல்லது வீட்டுக்கு வெளியில் தனித்திருக்கும் போது, அவர் நினைத்தால் எதையும் சாப்பிடலாம். ஆனால் அவர் அவ்வாறு சாப்பிடுவதுமில்லை, பருகுவதுமில்லை. ஏனெனில் அல்லாஹ் எம்மைப் பார்க்கிறான் என்ற இறைபயமே அதற்கான காரணமாகும். இதற்கு ரமழான் நோன்பு மூலகாரணமாக அமைகிறது.

ஆகவே அல்லாஹ்வை அஞ்சி வாழ எதுவெல்லாம் உதவுகிறதோ அதுவெல்லாம் இம்மனித குலத்திற்கு அவசியமானது. அதில் ரமழான் நோன்பு முதலிடம் பெறுகிறது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதனால் தான் அல் குர்ஆன், ‘இறையச்சம் உள்ளவர்களுக்குத் தான் இக்குர்ஆன் நேர்வழிகாட்டும்’ (2:2) என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஆகவே அல் குர்ஆனை ஒதுவதிலும், விளங்குவதிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வோம். அதன் ஊடாக அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெற்றுக்கொள்ளலாம்.

பிந்த் இஸ்மாயீல்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT