Home » பயங்கரம் உணரப்படாதுள்ள செயல்!

பயங்கரம் உணரப்படாதுள்ள செயல்!

by Gayan Abeykoon
April 19, 2024 10:34 am 0 comment

இன்றைய நவீன யுகத்தில் தகவல் தொடர்பு சாதனங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பான வதந்திகள்தான் அதிகம் பரப்படுகிறது. ஆனால் அல் குர்ஆனினதும் நபி (ஸல்) அவர்களதும் அறிவுரை வதந்திகளை நம்பாமலும் பரப்பாமலும் வாழ்வதாகும்.

இது தொடர்பில் அல் குர்ஆன், ‘முஃமின்களே…! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம்’ (49:12) என்று குறிப்பிட்டுள்ளது.

இறைவன் இங்கே மூன்று விதமான அம்சங்களை பட்டியல் இட்டிருக்கிறான். அவை ஊகம், துருவித்துருவி ஆராய்தல், புறம் பேசுதல் ஆகியனவாகும். இவற்றின் மூலம் நன்மைகளை விடவும் பாவமே மிகைத்து நிற்கும். இம்மூன்றுமே ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடையவையாகும்.

ஊகம் என்பது உறுதிப்படுத்தாத வதந்தியாகும். வதந்தியை துருவித்துருவி ஆராயும்போது பிறர் மீது புறம் பேசக்கூடிய நிலைக்கு தள்ளிவிடும். வதந்தியால் பரவக்கூடிய செய்தியால் நன்மையை விட தீங்குகளே அதிகம். அதனால் வதந்தியை பாவங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டு அதிலிருந்து முஸ்லிம்கள் முற்றாக விலகி நிற்க வேண்டும் என இஸ்லாம் குறிப்பிட்டிருக்கிறது.

‘முஃமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்’                                        (அல் குர்ஆன் 49:6)

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஸக்காத் நிதியை வசூலிப்பதற்கு வலீத் பின் உக்பா (ரழி) அவர்களை பனீமுஸ்தலிக் எனும் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவருக்கும் அந்த கோத்திரத்தாருக்கும் இஸ்லாத்திற்கு வரும் முன் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்தபின் அந்த பகை மறைந்து போனது. வலீத் பின் உக்பா (ரழி) அவர்கள் வருகை தரும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் படையை திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள். இதை கண்ட வலீத் பின் உக்பா (ரழி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட இவர்கள் ஒன்று குழுமியிருக்கிறார்கள் என மனதில் நினைத்துக்கொண்டு, வந்த வழியை நோக்கி நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி விட்டார்கள்.

அத்தோடு அந்த கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில், ‘அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், ஸக்காத் நிதியை தர மறுக்கிறார்கள், என்னை கொலை செய்யவும் தயாராகி விட்டார்கள்’ என்றெல்லாம் கூறிவிட்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இக்கூற்றுக்களைக் கேள்விப்பட்டதும் அவற்றை நம்பவில்லை. நடந்தது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை ஆராய்வதற்காக காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி வைத்து, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள்.

அந்த ஊரின் எல்லை அருகே படை வந்ததும், காலித் (ரழி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள். அந்த நேரம் மஃரிப் தொழுகை நேரமாகும். ஒற்றர்கள் சென்றபோது அந்த கோத்திரத்தார் தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதை கண்டார்கள்.

இதனை அறிந்து கொண்ட காலித் (ரழி) அவர்கள் அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஸக்காத் நிதியை வசூலித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துக்கூறினார்கள். அந்த சமயம்தான் மேற்கூறப்பட்ட அல் குர்ஆன் (49:6) இறைவசனம் இறங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘நிதானம் இறைவனின் செயல். அவசரம் ஷைத்தானின் செயல்’ என்றார்கள்.

மேற்கூறப்பட்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் அவசரப்படாமல் நிதானமாக சமயோசிதமாக நடந்து கொண்டதினால் ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது. அந்த நபித் தோழரின் வதந்தியை நம்பி, நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டிருந்தால் ஒரு சமூகத்தாருக்கு அநீதி இழைத்தவர்களாக ஆகியிருப்பார்கள்.

அதனால் கண்டதை எல்லாம் பேசுவது வதந்தியின் ஆரம்ப நிலையாக அமைந்து விடுகிறது. நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு. வதந்தியால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் அதனை பரப்பியவர் மீதே சாரும்.

‘எதைப் பற்றி உமக்கு (த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம். நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவையாவுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்’

(அல் குர்ஆன் 17:36)

‘தான் கேட்பதையெல்லாம் ஒருவன் பரப்புரை செய்வது அவன் பொய்யன் என்பதற்கு இதுவே போதுமானது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).

‘தான் கேட்பதையெல்லாம் பரப்புரை செய்பவன் பரிபூரண முஸ்லிமாக முடியாது. மேலும் அவன் ஒரு போதும் தலைமைத்துவத்திற்கு தகுதியும் பெற முடியாது’

(ஆதாரம்: பைஹகீ)

ஒரு தடவை உமர் (ரலி) அவர்கள் கூறும்போது ‘உங்களையும், குழப்பத்தையும் நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனெனில், வாளால் ஏற்படும் அதே பாதிப்பு நாவினாலும் ஏற்படலாம்’ என்றார்கள்.

ஆகவே எந்தவொரு தகவலையும் செய்தியையும் தீர விசாரித்தறியாமல் பலவிதமான பாதிப்புக்களுக்கும் வழிவகுக்கும். வதந்தியால் பலரின் வாழ்க்கை பாழாகி போயிருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் தகவல் பரப்பும் சாதனங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பான வதந்திகள்தான் அதிகம் பரப்புரை செய்யப்படுகிறது. இதனால் கலவரம் கூட ஏற்படுகிறது. வதந்திகளை நம்பாமலும் பரப்பாமலும் வாழ்வதே அண்ணலாரின் அறிவுரையாகும்.

அப்துல்லாஹ்….

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT