Thursday, May 9, 2024
Home » இஸ்ரேலின் பயங்கர தாக்குதலிடையே காசாவில் பட்டினி பாதிப்பும் அதிகரிப்பு

இஸ்ரேலின் பயங்கர தாக்குதலிடையே காசாவில் பட்டினி பாதிப்பும் அதிகரிப்பு

மேலும் ஒரு மருத்துவமனை சுற்றிவளைப்பு

by mahesh
December 13, 2023 6:00 am 0 comment

இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் தெற்கு காசா மீது கடந்த திங்கள் இரவு மற்றும் நேற்று (12) காலையில் சரமாரி தாக்குதல்களை நடத்தியதோடு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் கடுமையான மோதல் காரணமாக உதவி விநியோகங்கள் பெரும்பாலும் ஸ்தம்பித்த சூழலில் காசா மக்களிடையே பட்டினி அதிகரித்திருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

எகிப்தின் எல்லையை ஒட்டிய தெற்கு காசா நகரான ரபாவில் வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவில் அவசர உதவிப் பணியாளர்கள் இடிபாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தேடி வந்தனர்.

காசா மக்களுக்கு பாதுகாப்புக்காக ரபா பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவு தீவிரமடைந்திருந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“குண்டு வீச்சுகளால் எம்மால் இரவில் உறங்க முடியவில்லை. காலையில் குழந்தைகளுக்கு உணவு தேடி வீதியில் சுற்றியபோது எந்த உணவும் இருக்கவில்லை” என்று 40 வயதான ஆறு குழந்தைகளின் தந்தை அபூ கலீல் ரபாவில் இருந்து ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியில் விபரித்திருந்தார்.

“என்னால் ரொட்டியை பெற முடியவில்லை. விலைமகள் அதிகரித்துள்ளன. அரிசி, உப்பு மற்றும் அவரைகளின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

இது பட்டினி இருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது” என்று கூறிய அவர், “இஸ்ரேல் எம்மை குண்டு போட்டும் பட்டினியில் வைத்தும் இரு முறை கொல்கிறது” என்றார்.

தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸின் மையப் பகுதியை இலக்கு வைத்து ஷெல் குண்டு தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா அல் சின்வாரின் வீடு இருக்கும் வீதியில் நேற்று இஸ்ரேலிய டாங்கிகள் இயங்கியதாக ஒருவர் குறிப்பிட்டார். கான் யூனிஸில் இரவு நடந்த தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை (08) வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது தொடக்கம் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மக்களிடை பட்டினி பாதிப்பு மோசமடைந்திருப்பதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. காசா மக்கள் தொகையில் பாதிப் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவுக்கான உதவி விநியோகங்கள் ரபா பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் எஞ்சிய பகுதிகளுக்கான உதவிகள் கடந்த சில நாட்களாக பெரும்பாலும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஐ.நா மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பது மற்றும் பிரதான வீதிகள் வழியாக பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதே உதவிகள் தடைப்படுவதற்குக் காரணமாகும்.

அதேபோன்று போதிய எரிபொருள் இன்மை, தொடர்பாடல்கள் முடக்கப்பட்டுள்ளது மற்றும் தாக்குதல் அதிகரித்திருப்பதால் எகிப்துடனான ரபா எல்லைக் கடவைக்கு ஓட்டுநர்களால் பயணிக்க முடியாத நிலை ஆகிய காசாவில் டிரக் வண்டிகளின் பற்றாக்குறையும் உதவிகள் தடைப்படக் காரணமாகியுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனைக்கு இஸ்ரேலிய படைகள் நேற்று (12) ஊடுருவியதை அடுத்து மருத்துவ பணியாளர்கள் உட்பட அங்குள்ள ஆண்களை மருத்துவமனை முற்றவெளியில் சுற்றிவளைத்ததாக காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக கடும் மோதல் நீடித்து வந்த ஜபலியா பகுதிக்கு அருகில் இருக்கும் இந்த மருத்துவமனையில் சுமார் 3,000 பேர் வரை அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா மருத்துவமனைகளில் மூன்றில் ஒன்று அல்லது அதற்குக் குறைவாக 11 மருத்துவமனைகள் மாத்திரமே பகுதி அளவில் இயங்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“வெறும் 66 நாட்களுக்குள் சுகாதார அமைப்பு 36 மருத்துவமனைகளில் இருந்து 11 பகுதி அளவு இயங்கும் மருத்துவமனைகளாக குறைந்துள்ளன.

இதில் ஒன்று வடக்கிலும் 10 கிழக்கிலும் இயங்குகின்றன” என்று ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரிக் பீபர்கோன் காசாவில் இருந்து ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

பைடனின் அர்ப்பணிப்பு உறுதி

காசா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 18,205 ஆக அதிகரித்திருப்பதோடு சுமார் 50,000 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

காசாவில் தரைவழி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் பலஸ்தீன போராளிகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்த மோதல்களில் கடந்த திங்கட்கிழமை மேலும் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் மூவர் படுகாயம் அடைந்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. எனினும் இவ்வாறு கொல்லப்பட்ட வீரர்களில் 20 பேர் தமது துருப்புகளுக்கு இடையிலான தவறுதலான துப்பாக்கிச் சூடுகள் அல்லது விபத்துகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று வெளியிட்ட புதிய தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வான் தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள் மற்றும் துப்பாச்சூடுகள் ஆகிய சொந்தத் தாக்குதல்களில் 13 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இராணுவ வாகனங்கள் சொந்த வீரர்கள் மீது மோதிய சம்பவங்களில் மேலும் இரு வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருவதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த திங்கட்கிழமை யூதர்களின் பண்டிகை நாளான கன்னுகாவை வெள்ளை மாளிகையில் கொண்டாடினார். அதன்போது இஸ்ரேல் மீதான தனது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்று வலியுறுத்தினார். “இஸ்ரேல் இல்லை என்றால் உலகில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று கதை ஒன்று உள்ளது” என்று பைடன் குறிப்பிட்டார்.

இதேவேளை போருக்குப் பின்னர் காசா பகுதி இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பேசியபோதே நெதன்யாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அந்தப் பகுதி இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். போருக்குப் பின், சிவில் நிர்வாகம் ஒன்று காசாவில் செயற்படும் என்பதோடு வளைகுடா நாடுகளின் தலைமையின் கீழ் அந்தப் பகுதி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும். நாம் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டோம்” என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

இதன்போது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆட்சியில் இருக்கும் பலஸ்தீன அதிகாரசபையுடனான போருக்கான சாத்தியத்தை நெதன்யாகு மறுக்கவில்லை.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான ஜெனினில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஆளில்லா வான் தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்தக் காலப்பிரிவில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் இந்தப் பகுதிகளில் 270 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அதுவே இந்த ஆண்டில் 487 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

இந்தப் போர் பிராந்தியத்திலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. யெமன் கடற்கரைக்கு அப்பால் இஸ்ரேலை நோக்கி பயணித்த நோர்வே கொடியுடனான இரசாயன கப்பல் ஒன்றை இலக்கு வைத்து யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து சேதமடைந்துள்ளது. எனினும் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

தாக்குதலின் போது அமெரிக்க கப்பல்கள் எதுவும் அருகாமையில் இல்லை என்றும், ஆனால் அமெரிக்க கடற்படை நாசகார கப்பலான யுஎஸ்எஸ் மேசன் அங்கு இருந்து உதவி வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாப்- எல்-மண்டேப் ஜலசந்திக்கு வடக்கே சுமார் 60 கடல் மைல்கள் (111 கிலோமீற்றர்) தொலைவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தக் கப்பல் மலேசியாவில் தாவர எண்ணெய் மற்றும் உயிரி எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு எகிப்தில் உள்ள சுயஸ் கால்வாயை நோக்கி சென்று கொண்டிருந்ததாக கப்பல் கண்காணிப்பு நிறுவனமான மரைன்ட்ராஃபிக் தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என உறுதியளித்தனர். அவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும் சரி, சர்வதேச கப்பல் நிறுவனங்களை இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு நுழைவதை எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT