Monday, May 20, 2024
Home » போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் காசாவில் தொடர்ந்தும் தாக்குதல்

போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் காசாவில் தொடர்ந்தும் தாக்குதல்

by Gayan Abeykoon
May 9, 2024 8:06 am 0 comment

எகிப்துடனான காசா எல்லைக் கடவையை கைப்பற்றி அங்கு உதவிகள் செல்வதை மேலும் முடக்கி இருக்கும் இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்றும் (08) அதிரடித் தாக்குதல்களை நடத்தியதோடு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் கடைசிக் கட்ட முயற்சியில் பேச்சுவார்த்தையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காசாவில் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபாவில் சர்வதேசத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை கைப்பற்றி இஸ்ரேல் இராணுவம் கிழக்கு ரபாவில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி வருகிறது.

இந்த நெருக்கடியான சூழலில் பேச்சுவார்த்தையாளர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீன போராளிகளின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் எட்டு மாதங்களை தொட்டிருக்கும் போரை நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு இஸ்ரேலுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இதுவென்று பெயர் குறிப்பிடாத ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் கெய்ரோவில் ஹமாஸ் பிரதிநிதிகள் குழுவை சந்தித்து பேசியதாக எகிப்து அரசுடன் தொடர்புபட்ட அல் ஹகெரி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பும் இணங்கி இருப்பதோடு இஸ்ரேல் தனது பிரதிநிதிகளை கெய்ரோவுக்கு அனுப்பியுள்ளது.

இரு தரப்பும் பிளவுகள் தொடர்பில் தீர்வு காணும் என்று நம்புவதாக இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ‘அனைவரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்துள்ளனர்’ என்று குறிப்பிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி, ‘இது முக்கியமானதாகும்’ என்றார்.

முன்னதாக ஹமாஸ் இணங்கிய போர் நிறுத்த முன்மொழிவை இஸ்ரேல் நிராகரித்திருந்தது. ‘ஹமாஸின் முன்மொழிவு இஸ்ரேலுக்கு அவசியமான தேவைகளில் இருந்து மிகத் தொலைவில் உள்ளது. காசாவில் ஹமாஸ் கொடிய ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கு இஸ்ரேல் இடம் அளிக்காது’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் பில் பர்ன்ஸ், இஸ்ரேல் சென்று நெதன்யாகுவை சந்திக்கவிருப்பதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை ஒன்றுக்கான திட்டம் மற்றும் அதனால் போர் நிறுத்தப் பேச்சுகள் முறியும் அபாயம் இருக்கும் சூழலிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 

தொடரும் தாக்குதல்கள்

கெய்ரோ பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் ரபா உட்பட இஸ்ரேல் காசா எங்கும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடக்கம் சரமாரித் தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்கள் மற்றும் உள்ளூர் மருத்துவமனையை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசா நகரில் உள்ள தொடர்மாடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் ஒரே குடும்பத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்ததாக அல் அஹலி மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.

இதில் ரபா மீது கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் 35 பேர் கொல்லப்பட்டு மேலும் 129 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா நேற்று தெரிவித்தது. மத்திய காசாவின் அல் கிஷ்டா கோபுரத்தின் கடைசி மாடி மீது இஸ்ரேல் நடத்திய பீரங்கித்தாக்குலில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக அங்குள்ள வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் தெற்கு நகரான கான் யூனிஸின் குசா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலின் பீரங்கி தாக்குதல்களில் இரு பெண்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். காசாவில் 215 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாமல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் உத்தரவை அடுத்து ரபாவில் இருந்து வெளியேறிய மக்கள் மத்திய காசாவின் டெயிர் அல் பலாவில் உள்ள அல் அக்ஸா மருத்துவமனையின் முற்றவெளிப் பகுதி மற்றும் அதற்கு அருகில் கூடியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

‘சுஜெய்யாவில் இருந்து நுசைரத்துக்கும், பின்னர் டெயிர் அல் பலாவுக்கும் தொடர்ந்து ரபாவுக்கு நான் இடம்பெயர்ந்தேன். இது நான் இடம்பெயர்வது ஐந்தாவது முறையாகும்’ என்று முஹமது அல் குல் என்பவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு கூறினார்.

‘நாம் எங்கே போவது என்று எமக்கு தெரியவில்லை. நிலைமை மோசமாக உள்ளது. தலைக்கு மேலால் செல்லும் செல் குண்டுகளுக்கு மத்தியில் இரவு முழுவதும் நாம் உறங்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மற்றுமொரு பலஸ்தீனரான இமாத், ‘மக்களின் எதிர்காலம் தெளிவாக இல்லை’ என்றார். ‘எனது குடும்பம் நான்கு பேரைக் கொண்டது, அதேபோன்று எனது சகோதரரின் குடும்பம் நான்கு பேரைக் கொண்டது. மொத்தம் எட்டுப் பேர் உள்ளனர். எம்மால் எங்கே போக முடியும்?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 

உதவிகள் முடக்கம்

ரபா எல்லைக் கடவையின் பலஸ்தீன பக்கமாக இஸ்ரேலிய டாங்கிகள் கட்டுப்படுத்தி வரும் காட்சிகள் கடந்த செவ்வாயன்று (07) வெளியாகின.

இந்த எல்லைக் கடவையை கட்டுப்படுத்துவது ஹமாஸின் பயங்கரவாத ஆட்சியை நிறுவுவதற்கு அவசியமாக இருந்த வழி ஒன்றை மறுப்பதில் முக்கிய படியாக உள்ளது என்று நெதன்யாகு விபரித்துள்ளார்.

எனினும் காசாவுக்கான உதவிகள் செல்லும் மற்றொரு எல்லைக் கடவையான கெரம் ஷலோம் மற்றும் ரபா இரண்டையும் அணுகுவதை இஸ்ரேல் மறுத்து வருவதாக ஐ.நா. மனிதாபிமான அலுவலக பேச்சாளர் ஜேன்ஸ் லேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த எல்லைக் கடவைகளை உடன் திறக்கும்படி வலியுறுத்திய ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், இவை மூடப்படுவது ஏற்கனவே மோசமடைந்திருக்கும் மனிதாபிமான நிலைமை மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று எச்சரித்தார். வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ஜேன் பீரேவும் இதே நிலைப்பாட்டை வெளியிட்டதோடு, இவ்வாறு மூடப்பட்டிருப்பது ‘ஏற்க முடியாதது’ என்றார்.

‘இஸ்ரேல் நிர்வாகம் உயிர் காக்கும் உதவிகளை முடக்கும் ஒவ்வொரு நாளிலும், மேலும் பலஸ்தீனர்கள் உயிரிழக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக’ மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT