Wednesday, May 1, 2024
Home » மீள் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் கைகொடுத்த ‘புனர்வாழ்வு புதுவாழ்வு’ அமைப்பினர்
மட்டக்களப்பு மாவட்ட மீனவ குடும்பங்களி

மீள் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் கைகொடுத்த ‘புனர்வாழ்வு புதுவாழ்வு’ அமைப்பினர்

by damith
October 24, 2023 12:23 pm 0 comment
நன்றி தெரிவித்து பலரும் கருத்து தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பகுதியிலுள்ள பறங்கியா மடு பிரதேசத்தில் வாழும் மீனவக் குடும்பங்களின் மீள் எழுச்சிக்காக ‘புனர்வாழ்வு புதுவாழ்வு’ அமைப்பின் இங்கிலாந்து நாட்டிற்கான தலைவர் பொறியியலாளர் கலாநிதி சர்வேஸ்வரன் வேலாயுதம் மற்றும் இலங்கைக்கான தலைவர் பொறியியலாளர் ஹென்றி அமல்ராஜ் ஆகியோர் வழங்கி வருகின்ற மனிதாபிமான பணிகள் பாராட்டத்தக்கவையென மீனவ குடும்பங்கள் தெரிவித்துள்ளதோடு அவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கும் அந்நிறுவனம் உதவி ஒத்தாசைகளை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தன.

இந்நிறுவனத் தலைவர்கள் இப்பிரதேச மக்களின் மீள் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஆற்றிவரும் பங்களிப்புக்கள் குறித்து கடற்றொழிலாளர் முத்துவேல் நற்குணசிங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் தினகரன் பத்திரிகைக்காக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பறங்கியாமடு கிராமத்தில் 120 மீன்பிடி கடற்றொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இப்பிரதேசத்திலுள்ள மக்கள் அனைவரும் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். இப்பிரதேச மக்களின் அவலநிலை குறித்து புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் இலங்கைக்கான தலைவர் பொறியியலாளர் ஹென்ரி அமல்ராஜின் கவனத்திற்கு பிரதேச மக்களினால் கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்து, அவர் மேற்படி கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து பிரச்சினைகளை இனங்கண்டு புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் இங்கிலாந்து நாட்டுக்கான தலைவர் பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டளவில் இந்த அமைப்பினால் இம்மக்களுக்கான நிவாரண உதவிகள், மலசல கூடம், மின்சார வசதிகள், தண்ணீர் வசதிகள், மீள் குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வாழ்வாதார உதவிகள் போன்ற பல்வேறு பட்ட நடவடிக்கைகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன.

இக்கிராம மக்கள் போர் சூழலின் காரணமாக 1996 களில் இடம்பெயர்ந்து சென்று மீளவும் 1997 களில் இக்கிராமத்தில் மீளவும் குடியேறினர். யுத்த காலத்தில் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி நிறைய வீடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டதோடு நிறைய பொது மக்களும் காயப்பட்டனர். இந்தப் பகுதிக்கு புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பைத் தவிர வேறு எந்தவொரு நிறுவனமோ, அரச உதவிகளோ எமது கிராமத்திற்கு கிடைக்கவில்லை. சுனாமி காலத்தில் கூட எங்களது கிராமம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. நேரடியாகவோ மறைமுகமாகவே இந்தப் பிரதேச மக்களுக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை.

பொதுவாக புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் மூலம்தான் எங்களது வறுமையும் தீர்க்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல தண்ணீர்ப் பிரச்சினைகள், வீடமைப்பு வசதிகள் போன்ற அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் கடற்றொழிலாளர்கள் வாழ்கின்றமையால் சகலருக்கும் மீன்பிடி படகுகள், வலைகள் வாங்கித் தந்து பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தியுள்ளார்கள். இன்றைக்கு எல்லோரும் முதலாளிமார்கள் என்று சொல்லுமளவுக்கு நாங்கள் இன்று வளர்ந்து விட்டோம். ஆரம்பத்தில் நாங்கள் புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளுக்குச் சென்று மரக்கறித் தோட்டங்களில் கூலி வேலைகள் செய்தோம். அங்கு கரைவலை மீன்பிடித் தொழில்களிலும் ஈடுபட்டு வந்தோம். வெளியே சென்றுதான் எங்களுடைய வாழ்வாதாரத்தை ஓட்ட வேண்டிய நிலைமை இருந்தன.

இவை தொடர்பில் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பினர்களுடன் இப்பிரதேச மக்களின் வாழ்வாதார பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது ஆண்கள் பெண்கள் வெளியே சென்று தொழில் செய்வதைத் தடுத்து நிறுத்தி ஊரிலே தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தினால் ஊர் பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் சிறப்பாகவும் அமையும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், ஐந்து குடும்பங்களுக்கு ஒரு மீன்பிடிப் படகு இயந்திரம் வழங்குதல் திட்டத்தின் கீழ் இந்த அமைப்பினால் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் ஒரு விதவைத் தாய் உட்பட ஐந்து பேர் கொண்ட பயனாளிகளுக்கு ‘இன்ஜின்’ படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த கடற்றொழிலினால் ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும். சிலவேளை, ஒன்றுமில்லாமல் இருக்கும். ஒரு மாதத்திற்கு ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் கூட சம்பாதிக்கலாம். எனினும் இதன் மூலம் இன்று நாங்கள் நல்ல சௌபாக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த கடற்றொழிலின் மூலம் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. வீட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. தண்ணீர்ப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இப்பொழுது எமது மக்கள் உழைத்துச் சம்பாதித்து, சுயமாக வீடு வாசல்களைக் கட்டக் கூடியவர்களாக உயர்ந்து இருக்கிறார்கள்.

நாங்கள் ஆரம்பத்தில் தாய், தகப்பன், பிள்ளைகள் எல்லோரும் புத்தளம் சென்று சாம்பாதித்து வாழ்க்கை நடத்திய முதல் காலகட்டத்தில் பிள்ளைகளுடைய படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு தொழில் செய்தமையால் பிள்ளைகளுக்கு படிக்க இயலாமற்போய் விட்டது. இப்பொழுது புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் உதவித் திட்டத்தின் ஊடாக எல்லோரும் வீட்டோடு இருந்து தொழில் செய்வதன் காரணமாக பள்ளிக்கூடம் சென்று படிக்கின்ற நிலைமை அதிகரித்துள்ளது. நான்கு பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள்.

இங்கு ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால்,

க. பொ. த உயர் தரம் படிக்கின்ற பிள்ளைகள் தூரம் சென்று படிக்க வேண்டும். கிரானிலுள்ள பாடசாலைக்குச் செல்ல வேண்டும். மாரி காலத்தில் பிள்ளைகள் நடந்து செல்வார்கள். அப்பொழுது சப்பாத்துக்குள் தண்ணீர் போகும் என்று ‘பாட்டா’ செருப்பை போட்டுச் சென்றால் அதிபர் அல்லது ஆசிரியமார்கள் அடிப்பார்கள். இது மட்டும் தான் பிரச்சினை என்று இருக்கிறது. புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பினால் இன்றைக்கு எங்களுடைய ஊர் மாற்றம் அடைந்துள்ளது.

இருந்தாலும் சுனாமியின் போது 21 தோனி வலைகள் கிடைத்தன. அவை தவிர புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பினால் இயந்திரப் படகுகள் கிடைத்தன. இப்படகுகள் தான் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தன. ஆனால் அவை காற்றுக் காலங்களில் மீன் பிடித்தொழிலுக்குச் செல்வதில் கடினமாக உள்ளன. ஏனென்றால் 15 ‘ஹோஸ் பவர்’ தர இன்ஜின் கடலில் காற்றுக்கு முகம்கொடுத்து ஓட முடியாமை இருக்கிறது. கழுதங்கேணியிலுள்ள அதி சக்தி மிக்க படகுகளின் மூலம் இழுத்து வர வேண்டும். சிலவேளை, கடலின் இடையில் காற்று அதிகம் அடித்தால் அல்லது படகு பழுதடைந்தால் படகு ஓட முடியாமை இருக்கும். இப்படி நான்கு தடவை வந்தன. இதனால் அதி சக்தி மிக்க இன்ஜின் வலு மிக்க படகுகளின் மூலம் கரைக்கு இழுத்து வந்தோம். அதற்கு தலா 5000 ரூபா கொடுக்க வேண்டும். எங்களுடைய மீனவர் சங்கத்தின் மூலம் கழுதங்கேணி மீனவர் சங்கத்திடம் கதைத்துள்ளோம். அதாவது ஒரு படகு இன்ஜின் பழுதானால் 15 ‘ஹோஸ் பவர்’ இன்ஜினால் இழுத்து வர முடியாது. 25 ‘ஹோஸ் பவர்’ இன்ஜின் மூலம்தான் இழுத்து வர வேண்டும்.

எனினும் இப்படகுகளின் மூலம் சம்பாதிக்கின்ற பணத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். மேலும் வலுமிக்க படகு இன்ஜின்களை வாங்கி தொழில் செய்ய வேண்டும் என்ற ஆலோசனை புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பினால் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒரு சேமிப்பை செய்து வருகின்றோம். இந்தப் பணத்தைக் கொண்டு 25 ஹோஸ் பவர்மிக்க இன்ஜினை நாங்கள் வாங்கியிருக்க வேண்டும். நாங்கள் இன்னும் வாங்கவில்லை. அவை எங்களுடைய தவறாகும்.

படகு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தினசரி ஒரு சிறிய தொகையை இதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதனை நாங்கள் சரியாகக் கருத்திற் கொண்டு செய்து வந்திருந்தால் ஒரு வருடத்தில் 25 ஹோஸ் பவர் இன்ஜினுக்குச் சென்று இருக்கலாம். இதில் பயனாளிகளுடைய முயற்சியும் கட்டாயம் இருத்தல் வேண்டும். அடுத்தடுத்த கட்டத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற ஆலோசனையை புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பினர் தெளிவாக விளக்கி கூறியிருந்தார்கள். அந்த அடிப்படையில் 4 இலட்சத்துக்கு மேல் சேமிப்பு பணம் இருக்கிறது. ஒரு 25 ஹோஸ் பவருள்ள இன்ஜின் படகு ஒன்றை வாங்கினால் எமது பிரதேசத்திலுள்ள படகுகளுக்கு எவையேனும் படகுகளுக்கு பழுது ஏற்பட்டால் அவற்றை வைத்துப் பயன்படுத்தலாம் என யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் எங்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடி உடனுக்குடன் உதவிகளைச் செய்கின்ற புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்புக்கு நாங்கள் எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் இருக்கின்றோம். அதற்கு வார்த்தைகள் இல்லை.

நாங்கள் அனைவரும் பறங்கிய மடு நீலக்கடல் கூட்டுறவுச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மீனவக் குடும்பங்களாகும். இந்தப் படகுகள் விற்பனை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விடக் கூடாது என்ற வகையில் இலங்கை கடற்றொழில் நீரியல் திணைக்களத்திற்கு ஊடாக இந்தப் படகுகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பினால் சம்பூர் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் அதன் மூலம் சரியான பயனை அடைந்து 25 ஹோஸ் பவர் இன்ஜின் படகுகளை வாங்கி ஆழ்கடல் பகுதிகளுக்குச் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனர். சிறந்த முறையில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். நல்ல வருமானத்தையும் ஈட்டி வருகின்றார்கள். இதுதான் உண்மை.

ஆனால் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பு வழிகளை மட்டும்தான் காட்டும். அதன் இலக்கை எல்லையைத் தொட வேண்டியது பயனாளிகளுடைய பொறுப்பு. அவசர தேவைக்காக எப்படியும் 25 ஹோஸ் பவர் இன்ஜின் படகு ஒன்று இருந்தால் எங்களுடைய சிறிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு போதுமானதாகும்.

ஒரு இன்ஜினை வாங்கி ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி பயன்படுத்த முடியும். அதில் கூடுலான மீன்கள் பிடிபட்டால் அந்தப் படகில் இருந்து வரும் நிதியில் இருந்து பொது நிதிக்கு கூடுதலாக ஒதுக்கிக் கொண்டால் மிகுந்த பயனை அடையலாம். இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதியைக் கொண்டு ஒவ்வொருவரும் 25 ஹோஸ் பவர் இன்ஜினைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டமிடலை மேற்கொள்ள முடியும்.

மொத்தமாக 56 கடற்றொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. அவர்களிடத்தில் 24 இன்ஜின் படகுகளும் 30 தோணிகளும் உள்ளன. புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பு எங்களுக்கு படகுகள் வாங்கித் தருவதற்கு முன்னர் ஏற்கனவே இரு படகுகள்தான் இருந்தன. ஆனால் இன்று 24 படகுகள் வைத்துக் கொண்டு தொழில் செய்து வருகின்றோம். முன்னர் புத்தளம் உடப்பூர் சென்று தான் கடற்றொழிலில் ஈடுபட்டோம். அந்த நிலை இன்று இல்லை. புத்தளத்தில் தாய் தந்தையும் இருந்தால் ஊரில் உள்ள பிள்ளைகளை எப்படி நாங்கள் படிப்பிப்பது? எல்லோரும் ஒரு வீட்டில் வசிக்கின்றோம். பிள்ளைகள் நேரத்திற்கு பாடசாலை செல்கின்றார்கள். நாங்களும் வீட்டில் இருந்து கொண்டு அந்த நேரத்திற்குச் தொழிலுக்குச் சென்று சம்பாதிக்கின்றோம். கையில் பணம் இல்லை என்றால் இரவுவேளையில் மீன்பிடிக்கச் செல்வோம். வாழ்வாதாரத்தை தேடுவது என்பது எங்கள் கைகளிலேயே உள்ளன. தேட வேண்டிய உதவிகளை எல்லாம் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பு எங்கள் கைகளில் தந்துள்ளன. நாங்கள் எந்தளவுக்கு தேட வேண்டுமோ அந்தளவுக்கு நாங்கள் தேட வேண்டும். இப்பொழுது சிறிய வீடாக இருந்த இடமெல்லாம் பெரிய பெரிய வீடுகளாக மாற்றம் பெற்று வருகின்றன.

இக்கிராமத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்புத்தான் வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்தன. இரு பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்லுகின்றன. ஒரு பிள்ளை யாழ் பல்கலைக்கழகம் மற்றைய பிள்ளை கிழக்குப் பல்கலைக்கழகம்.

இங்கு கருத்துத் தெரிவித்த கடற்றொழிலாளியான சுமன்;

நாங்கள் கடற்றொழிலை பிறந்த நாள் முதல் செய்து வருகின்றோம். புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் இங்கிலாந்து நாட்டுக்கான தலைவர் பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் மற்றும் அவ்வமைப்பின் இலங்கைக்கான தலைவர் பொறியியலாளர் ஹென்ரி அமல்ராஜ் ஆகிய இருவர்களின் காலடி இந்தப் பிரதேசத்தில் மண்ணில் பட்ட பின்பு தான் நாங்கள் இன்று எழுந்து நிற்கின்றோம். அவர்கள் முதலில் எல்லோருக்கும் வீடுகள் கட்டித் தந்தார்கள். அதில் எனக்கு ஒரு வீடு கிடைத்தது. பின்பு வாழ்வாதார மேம்பாட்டுக்காக இன்ஜின் படகுகளையும் பெற்று தந்தார்கள். இன்று நான் அவர்கள் தந்த வீட்டோடு சேர்த்து இன்னும் பெரியளவில் புதிய வடிவில் வீட்டை நிர்மாணித்து வருகின்றேன். இத்தகைய உதவிகள் செய்த புண்ணியவான்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார். மேலும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து நலன்கருதி துவிச்சக்ர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு வேலைத் திட்டங்களையும் இவ்வமைப்பினர் முன்னெடுத்து வருவதாகவும் பயனாளிகள் கருத்து தெரிவித்தனர்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT