Home » தொழில் உரிமைகளை பாதுகாக்க உறுதியுடன் ஒன்றிணைவோம்

தொழில் உரிமைகளை பாதுகாக்க உறுதியுடன் ஒன்றிணைவோம்

by Gayan Abeykoon
May 1, 2024 9:10 am 0 comment

வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து நாட்டைக் கட்டியெழுப்ப உலக தொழிலாளர் தினத்தில் உறுதியுடன் ஒன்றிணைவோமென, பிரதமர் தினேஸ் குணவர்த்தன  மே, தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  உழைக்கும் மக்களின் உதிரம், வியர்வை மற்றும் உயிர்த் தியாகங்கள் மீதான பயணத்தின் வரலாற்றுப் பதிவாக 138ஆவது உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

இம்முறை, பொருளாதார நெருக்கடியின் முக்கியமான ஒரு தருணத்திலேயே இத்தினத்தை கொண்டாடுகிறோம். எத்தகைய உடன்படிக்கைகளுக்கு மத்தியிலும் தொழிலாளர் உரிமைகளை புறக்கணிக்கும் வகையில், நாங்கள் செயற்படவில்லை. உழைக்கும் மக்களுடனான உரையாடல்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே தொழிற்சூழலை முடிவு செய்கிறோம்.

இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட   நாடுகள், உழைக்கும் மக்களின் பலத்தினாலே  மீண்டெழுந்தன. இவ்வாறு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உழைக்கும் மக்கள் தொடர்ந்து வழங்கிய அர்ப்பணிப்புகளுக்கும் பங்களிப்புகளுக்கும்  எனது விசேட மரியாதையை செலுத்துகிறேன். இதன் மூலம் எல்லாத் துறைகளிலும் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டது.

அரச துறை, தனியார் துறை மற்றும் சுயதொழில் போன்றவற்றை பொருளாதார சக்திகளாக வலுப்படுத்த பாடுபடுவோம்.

உழைக்கும் மக்கள் அரசாங்கத்துக்கும், அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுத்த வெற்றிகள் ஏராளம். இந்த வெற்றிகளோடு இக்கட்டான சவால்களை முறியடிக்க உழைக்கும் மக்களின் உறுதியுடன் இன்று நாம் அடைந்துள்ள நிலையைப் பாதுகாக்க பாடுபடுவோம்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT