Home » வறிய மக்களில் அக்கறை கொண்டு பணியாற்றியவர் அமரர் பிரேமதாச

வறிய மக்களில் அக்கறை கொண்டு பணியாற்றியவர் அமரர் பிரேமதாச

31 ஆவது நினைவுதினம் இன்று

by Gayan Abeykoon
May 1, 2024 9:38 am 0 comment

லங்கையின் ஜனாதிபதிகளில் முக்கியமானவராகத் திகழ்ந்தவர் அமரர் ரணசிங்க பிரேமதாசஆவார். அவர் இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதியாக 1989 முதல் 1993 இல் படுகொலைசெய்யப்படும்வரை பதவி வகித்தார். அவர் தனது ஜனாதிபதி பதவிக்கு முன்னர்  1978 முதல் 1989 வரை இலங்கையின் பிரதமர் பதவியை வகித்தவர். அவர் நீண்ட மற்றும் அனுபவம்மிக்க அரசியல் வாழ்க்கையைக் கொண்டிருந்தார்.

முன்னாள்  ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 31ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இவர் 1993 இல் கொழும்புநகரில் நடைபெற்றமேநாள் பேரணிஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பன்மைத்துவ சமூகத்திற்குள் பன்மைத்துவ கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தார். இன,மொழி மற்றும் மதஅடிப்படையில் இலங்கை மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க சவால்கள் எதிர்கொள்ளப்பட்ட பொழுது, பிரேமதாச அரசியல் கொள்கையாக்க செயன்முறையில் எல்லா சமூகமும் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தார்.

அரசியல் மற்றும் சமூகத்துறைகளில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் மற்றும் பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டகொள்கைகளை அவர் செயற்படுத்தினார்.  வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தினார். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தைஉயர்த்த வீட்டுவசதித் திட்டங்கள், கல்வித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயற்படுத்தினார். மிகவும் சவால் நிறைந்த ஒரு காலத்தில் துணிந்து  செயற்பட்டு இந்நாட்டு மக்களின் விடிவிற்காக அயராது உழைத்தார்.

அமரர் பிரேமதாச ஆற்றிய பணிகள் அளப்பரியவை. இவர் ஆற்றிய பணிகளுக்காக இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 1986 இல் இவருக்கு’சிறீலங்காபிமான்ய’ என்ற இலங்கையின் அதியுயர் பட்டம் வழங்கப்பட்டது.

இவர் இலங்கையின் பொருளாதாரம்,கலாசாரம், இனநல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றிற்கு ஒப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கி இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்காக ஆற்றிய சேவைகள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவைஆகும்.

வறுமை ஒழிப்பு திட்டத்தினைக் கொண்டு வந்து ஏழ்மையைக் குறைப்பதற்கும் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நலத்திட்டங்களை பிரேமதாசா செயற்படுத்தினார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு மற்றும் பிறஉதவிகளை வழங்கும் ‘ஜனசவிய’ திட்டம் போன்ற வீட்டுத் திட்டங்களை அவர் தொடங்கினார். விளிம்புநிலை சமூகங்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரசேவைகளை விரிவுபடுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.

தொழில் கட்சியில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த ரணசிங்க பிரேமதாச கொழும்பு மாநகரசபை உறுப்பினராகத் தெரிவாகி, பிரதிமேயராகவும் பதவியேற்று பின்னர் 1965 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சென்று உள்ளூராட்சி அமைச்சராகவும், பிரதமராகவும் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் பதவிவகித்தார். இவர் பிரதமராக இருந்த போது’செமடசெவன – அனைவருக்கும் நிழல்’ எனும் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து பணியாற்றியவர். இதனால் எத்தனையோ ஏழை மக்கள் பயனடைந்தனர். வடக்கு, கிழக்கு உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இவர் கம் உதாவ, உதாகலகம்மான ஆகிய முன்மாதிரி வீடமைப்புத் திட்டங்கள் ஊடாக இன மற்றும் மதவேறுபாடின்றி அனைவருக்கும் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பல திட்டங்களை மேற்கொண்டார்.

நகரஅபிவிருத்தித் திட்டத்தையும் செயற்படுத்தினார். பிரேமதாசவின் தலைமையின் கீழ் குறிப்பாக கொழும்பில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குடிசைப் பகுதிகளை மேம்படுத்தவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், நகர்ப்புற வசதிகளை மேம்படுத்தவும் திட்டங்களைத் தொடங்கினார்.

அமரர் பிரேமதாசதொழில்துறை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார். வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதிலும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதிலும் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதிலும் கவனம் செலுத்தினார்.

ஆடை உற்பத்தித் தொழிற்சாலை திட்டங்கள் மூலமும் வறிய மக்களுக்காக ஜனசவிய திட்டத்தின் மூலமும், பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் மூலமும்,சிறுவர்களின் போசாக்கை மேம்படுத்துவதற்கான மதியஉணவுத் திட்டத்தின் மூலமும் நாட்டின் அபிவிருத்தியையும் ஏற்றுமதி வருமானத்தையும் மேம்படுத்த முன்னின்றுஉழைத்தார்.  ஜனசவிய வறுமைஒழிப்புத் திடடம் தெற்காசியாவின் முதன்மையான வறுமை ஒழிப்புத் திடடமாக சர்வதேசஅளவில் போற்றப்பட்டது. அவரதுசேவைக்குஅங்கீகாரமளிக்கும் வகையில், 1987 ஆம் ஆண்டைஉலககுடியிருப்பு வருடமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்தது.

சமாதான முயற்சிகளைத் தொடக்கி இனப்பிரச்சனைக்குபேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணமுயன்றார். புலிகளுடன் மோதல்கள் நடந்து கொண்டிருந்த போதிலும் இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் நோக்கில் சமாதான முயற்சிகளை பிரேமதாச தொடங்கினார். இதன் மூலம் சிறுபான்மை சமூகங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முயன்றார்.

ஆயினும் இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்வுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நாட்டு மக்களின் எண்ணங்களில் நிலைத்திருக்கும் சிறந்த தலைவராக ரணசிங்க பிரேமதாச என்றும் போற்றப்படுகின்றார்.

 

கலாநிதி ச. பாஸ்கரன் 

சிரேஷ்ட விரிவுரையாளர் 

அரசறிவியல் துறை 

பேராதனை பல்கலைக்கழகம் 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT