Home » 1,153 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு

1,153 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதி

by Gayan Abeykoon
May 1, 2024 9:43 am 0 comment

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ள 1,153 அபிவிருத்தித் திட்டங்களுக்கு அம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த வருடத்துக்கான மூன்றாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (29) நடைபெற்றது.  இதன்போது கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், இந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத்திட்ட நிதியிலிருந்து 1,104.5 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 1,153 அபிவிருத்தித் திட்டங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார நிலைமை, கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் விவகாரங்கள் உட்பட அனைத்து திணைக்களங்கள்சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன், இவற்றில் பிரதேச மட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்கள் சார்பாக பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், இவற்றில் மாவட்ட மட்டத்தில் தீர்க்க வேண்டிய விடயங்களுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.

தேசிய மட்டத்தில் பேசப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கோ.கருணாகரம், இரா சாணக்கியன், அலிசாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் உட்பட மாவட்டச் செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் சகல திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT