Home » கல்முனையில் மக்கள் மனங்களை வென்ற ஓய்வுநிலை அதிபர் மர்ஹும் எம்.எச்.ஏ.காதர்

கல்முனையில் மக்கள் மனங்களை வென்ற ஓய்வுநிலை அதிபர் மர்ஹும் எம்.எச்.ஏ.காதர்

by Gayan Abeykoon
May 1, 2024 6:28 am 0 comment

ல்முனை மண்ணுக்குக் கிடைத்த ஆளுமைகளில் ஒருவர்தான்  ஓய்வுபெற்ற அதிபர் மர்ஹும் எம்.எச்.ஏ.காதர் அவர்கள். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்த அன்னார் தனது 88வது வயதில் அண்மையில் காலமானார்.

மீராமுகைதீன் மற்றும் ஆதம்பாவா சாருவும்மா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரான அன்னார் 1935.06.15ஆம் திகதி கல்முனையில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-அஷ்ஹர் வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர் கல்வியை கல்முனை பற்றிமா மற்றும் கல்முனை ஸாஹிறா கல்லூரிகளிலும் கற்றார்.

களுத்துறை மாவட்டத்திலுள்ள அட்டுலுகம பிரதேச முஸ்லிம் பாடசாலையில் 1956ஆம் ஆண்டு தனது 21வது வயதில் ஆசிரியராக நியமனம் பெற்ற அன்னார் பின்னர் அநுராதபுரம் மடாட்டுகம முஸ்லிம் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றார். அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் 1961, 1962 கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்தார்.

பின்னர், அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளிலும் பயிற்றப்பட்ட ஆசிரியராக பணியாற்றினார். தான் கடமையாற்றிய பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் கல்வி விருத்திக்கும் தன்னாலான அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளார்.    அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் நியமனம் பெற்ற அன்னார், கல்முனை உவெஷ்லி உயர்தரப் பாடசாலை ஆரம்பப் பிரிவு, கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம் மற்றும் நற்பிட்டிமுனை அல்-அக்ஷா மகாவித்தியாலயம் என்பனவற்றில் அதிபராகக் கடமையாற்றி அப்பாடசாலைகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கினார்.

‘காதர் சேர்’, ‘காதர் மாஸ்டர்’ என கல்முனைப் பிரதேசத்தில் அன்புடன் அழைக்கப்பட்ட அன்னார், கல்விப் பணிக்கு அப்பால் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார்;. 1995ஆம் ஆண்டு அதிபர் சேவை ஓய்வைத் தொடர்ந்து சமாதான நீதவானாக, மத்தியஸ்த சபை உறுப்பினராக, சமூகசேவை அமைப்புக்களின் உறுப்பினராக, ஆலோசகராக என பல பதவிகளை வகித்து சமூகப்  பணியில் தன்னை முழுiமாயக ஈடுபடுத்திக் கொண்டார்.

இவ்வாறு, கல்விப் பணியிலும், சமூகப் பணியிலும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட ஓய்வுநிலை அதிபர் காதர் அவர்களின் மறைவு பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

முகம்மட் றிஸான் 

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)    

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT