Home » அணிகளை அறிவிப்பதற்கான ஐ.சி.சி. கெடு இன்றுடன் முடிவு: இலங்கை தேர்வில் தாமதம்
டி20 உலகக் கிண்ணம்:

அணிகளை அறிவிப்பதற்கான ஐ.சி.சி. கெடு இன்றுடன் முடிவு: இலங்கை தேர்வில் தாமதம்

by Gayan Abeykoon
May 1, 2024 10:00 am 0 comment

டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இறுதி அணிகளை சமர்ப்பிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் விதித்த கேடு இன்றுடன் (மே 1) முடிவடையும் நிலையில் இலங்கையின் 15 பேர் குழாத்தை தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

டி20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் 1 தொடக்கம் 29 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 15 பேர் குழாத்தை நியூசிலாந்து முதல் நாடாக நேற்று முன்தினம் (29) வெளியிட்டது. எனினும் 15 பேர் கொண்ட ஆரம்ப குழாத்தை வெளியிடுவதற்கு ஐ.சி.சி. மே 1 ஆம் திகதி வரையே கெடு விதித்துள்ளது. இந்தக் குழாத்தில் மாற்றங்கள் செய்வதற்கு மே 22 ஆம் திகதி வரை ஐ.சி.சி. அவகாசம் அளித்துள்ளது.

டி20 உலகக் கிண்ணத்திற்கு இலங்கை தேர்வாளர்கள் 25 பேர் கொண்ட ஆரம்ப குழாத்தை ஏற்கனவே அறிவித்துள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சி முகாம் ஒன்றில் பங்கேற்றுள்ளனர். எனினும் ஐ.சி.சி. விதித்த கெடுவுக்குள் 15 பேர் குழாத்தை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. குறிப்பாக இலங்கை வீரர்கள் சிலர் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் நிலையில் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை என்பதோடு முக்கோண தொடர் ஒன்றை அடுத்தே இறுதி அணியை தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முக்கோணத் தொடர் நாளையே (மே 2) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி வீரர்களை உள்ளடக்கிய இந்த பயிற்சி முக்கோணத் தொடரின் போட்டிகள் மே 02 தொடக்கம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையிலேயே இறுதி அணி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இலங்கை இன்றைக்குள் 15 பேர் குழத்தின் பட்டியலை ஐ.சி.சி. இடம் வழங்கினாலும். பின்னர் அதில் மாற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளது.

டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணியில் 12 வீரர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அணித் தேர்வு இறுதிக் கட்டத்தில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதில் 15 பேர் குழாத்தை பூர்த்தி செய்வதற்கு மேலதிக துடுப்பாட்ட வீரர், சுழற்பந்து வீச்சாளர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தேர்வு செய்வது குறித்து தேர்வாளர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் மே 25 ஆம் திகதிக்குள் போட்டியில் பங்கேற்கும் அணிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு வருகை தர ஐ.சி.சி. நிபந்தனை விதித்துள்ளது. இதற்கமைய இலங்கை அணி எதிர்வரும் மே 14 ஆம் திகதி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளது. இதில் அணி ஒன்று சென்றடையும் காலத்தை பொறுத்தே பயிற்சிப் போட்டிகள் நிர்ணயிக்கப்படவுள்ளன. எனினும் ஐ.பி.எல். தொடர் மே கடைசி வரை நீடிக்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்றிருக்கும் இலங்கை வீரர்கள் அணியில் இணைவது மற்றும் டி20 உலகக் கிண்ண போட்டிக்கான தயார்படுத்தல்களில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.

டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றில் டி குழுவில் ஆடும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஜூன் 3ஆம் திகதி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி நியூயோர்க்கில் நடைபெறும்.

டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் ஜேர்சி அறிமுகம் எதிர்வரும் மே 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT