Home » காசா போர் நிறுத்தம் தொடர்பில் பதிலளிக்க ஹமாஸ் ஆலோசனை

காசா போர் நிறுத்தம் தொடர்பில் பதிலளிக்க ஹமாஸ் ஆலோசனை

விரைவில் முடிவெடுக்க இரு தரப்புக்கும் அழுத்தம்

by Gayan Abeykoon
May 1, 2024 10:42 am 0 comment

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பகரமாக காசாவில் 40 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான இஸ்ரேலின் முன்மொழிவை ஹமாஸ் அமைப்பு ஆராய்ந்து வருகிறது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் நேற்று (30) கட்டார் திரும்பிய ஹமாஸ் பிரதிநிதிகள் ‘முன்மொழிவு மற்றும் திட்டம் பற்றி ஆலோசித்து நடத்துவதாகவும், முடியுமான விரைவில் பதிலளிக்க ஆர்வமாக உள்ளோம் என்றும்’ குறிப்பிட்டதாக ஹமாஸ் தரப்பை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் பிரதிநிதிகள் எழுத்துமூல பதில் ஒன்றுடன் கெய்ரோவுக்கு திரும்பவிருப்பதாக எகிப்து உளவுப் பிரிவுடன் தொடர்புபட்ட அல் கஹெரா செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் முன்வைத்திருக்கும் இந்த போர் நிறுத்த நிபந்தனைகள் அதிக தளர்வுப்போக்குடையது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டிருப்பதோடு, போரை நிறுத்துவதற்கு ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும்படி எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களிடம் வெள்ளை மாளிகை கேட்டுள்ளது.

கடந்த திங்கள் இரவு எகிப்து மற்றும் கட்டார் தலைவர்களுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ‘ஹமாஸின் பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு’ வலியுறுத்தியதோடு, ‘முற்றுகை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான நிவாரணங்களை உறுதி செய்வதற்கு இதுவே ஒரே தடையாக உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும் போரை நிரந்தமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனைகளை இஸ்ரேல் தொடர்ந்து பொருட்படுத்தவில்லை என்று ஹமாஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் 40 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு பரிந்துரைத்திருப்பதாகவும், சுமார் 130 இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு பகரமாக ஆயிரக்கணக்கான பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமரூன் குறிப்பிட்டுள்ளார்.

‘இரு பிரதான பிரச்சினைகளில் அவர்கள் இன்னும் உறுதியாக இருப்பது இஸ்ரேலிய ஆவணத்தில் தெளிவாகிறது. அவர்கள் முழுமையான போர் நிறுத்தம் ஒன்றை விரும்பவில்லை என்பதோடு காசாவில் இருந்து வாபஸ் பெறுவது தொடர்பில் தீவிரமாக பேசவில்லை. உண்மையில் அவர்கள் (காசாவில்) நிலைகொள்வது பற்றியே பேசுகிறார்கள். அதாவது காசாவில் ஆக்கிரமிப்பு தொடரும் என்பதே இதன் அர்த்தமாகும்’ என்று ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான், அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

‘மத்தியஸ்தர்களிடம் எமக்கு தீவிரமான கேள்விகள் உள்ளன. அவர்கள் சாதகமான பதில்களை அளித்தால், எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் ஏழு மாதங்களாக மோதல் நீடித்து வரும் நிலையில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா  போர் நிறுத்தம் ஒன்றுக்கு பல மாதங்களாக முயற்சித்து வருகின்றன. முந்தைய பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்த சூழலிலேயே புதிய சுற்று பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களுக்குள் ஹமாஸுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று எட்டப்படாவிட்டால், திட்டமிடப்பட்ட தெற்கு காசாவின் ரபா நகர் மீதான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று இஸ்ரேலிய இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா பகுதி காசாவில் இஸ்ரேலிய தரைப்படை புகாத ஒரே பகுதியாக இருந்து வருகிறது.

உயிரிழப்பு 34,535 உயர்வு

எனினும் காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடந்து நீடித்து வருகின்றன. நுஸைரத் அகதி முகாமின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற கடுமையான வான் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டு, 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேபோன்று காசா நகரின் செய்தூன் பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய மூன்று வான் தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. வடக்கு காசாவின் ஜபலியா நகர் மற்றும் அகதி முகாம்களையும் போர் விமானங்கள் இலக்கு வைத்த நிலையில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் பொதுமக்களின் வீடுகளை இலக்குவைத்து சரமாரி பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. கான் யூனிஸின் மேற்குப் பகுதியின் அல் அமல் பிரதேசத்தில் இருந்து ஆறு சிதைந்த உடல்களை மீட்பாளர்கள் கண்டுபிடித்த நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்கும் தேடுதல் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் 47 பேர் கொல்லப்பட்டு மேலும் 61க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த அரை ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34,535 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 77,704 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT