Wednesday, May 22, 2024
Home » சவூதி-இலங்கை பொருளாதார நல்லுறவுக்கு வழிவகுத்த சர்வதேச பொருளாதார மாநாடு

சவூதி-இலங்கை பொருளாதார நல்லுறவுக்கு வழிவகுத்த சர்வதேச பொருளாதார மாநாடு

by Gayan Abeykoon
May 1, 2024 6:55 am 0 comment

வூதியின் தற்போதைய மன்னர் சல்மான் அவர்களது அரசாங்கம் நாட்டு மக்கள் தமது அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான சகலவிதமான திட்டங்களையும்  நுணுக்கமான முறையில் நிறைவேற்றி வருகின்றது.

முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் தூரநோக்கு, இராஜதந்திர நகர்வு, வலுவான பொருளாதார சிந்தனை போன்றவற்றை உள்ளடக்கிய ‘விஷன் 2030’ என்ற மூலோபாய திட்டத்தின் மூலம் சவூதி அரேபியா விஞ்ஞானம், மருத்துவம், சுற்றுலா, பொருளாதாரம் என முக்கியமான துறைகளில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. சவூதி பொருளாதாரம் அசுர வளர்ச்சியடைந்து வலுவான நிலையில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முடிக்குரிய இளவரசரின் விஷன் 2030 திட்டமானது சவூதி அரேபியாவின் பொருளாதாரத் துறையை ஸ்திரமாக்குவதுடன் அதில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய தேவையான சீர்திருத்தங்களை கொண்டுள்ளது.

அதன் பயனாக சர்வதேச பொருளாதார மன்றத்தின் முதல் மாநாட்டை இவ்வருடம் நடத்தும் தகுதியினை சவூதி அரேபியா பெற்றிருக்கின்றது.

இந்த மாநாடு தலைநகர் ரியாத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த மாநாட்டில் சர்வதேச ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் போன்ற பல முக்கியமான விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதில், சர்வதேச நிறுவனங்கள், அரசுசார் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த சர்வதேச வல்லுநர்கள், சிந்தனையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். தற்போதைய உலகளாவிய சவால்களைப் பற்றி இவ்வல்லுனர்கள் கலந்துரையாடி, உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துதவதையும், குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை காணும் நோக்கோடு சர்வதேச கூட்டு முயற்சிகள் மேற்கொள்வதையும் ஊக்குவித்துள்ளனர்.

இம்மாநாட்டில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்றிருந்ததுடன் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

1974 முதல் சவூதி அரேபியாவுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணிவரும் இலங்கையின் பொருளாதாரத்தில் சவூதியின் வகிபாகம் மிகவும் முக்கியமானது. நீர், எரிசக்தி, சுகாதாரம், வீதிகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களுக்காக பாரிய உதவிகளை சவூதி இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அதேசமயம் கடந்த வருட நவம்பர் மாதம் சவூதி அரேபிய பொருளாதார அமைச்சர் பைசல் அல்இப்ராஹிம் இங்கைக்கான விஜயமொன்றை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் தலைமையில் சர்வதேச பொருளாதார மையத்தின் முதல் மாநாடு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இலங்கை _-சவூதி நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகள் மேம்படும் என்றும் சவூதி அரேபிய வர்த்தகர்கள், முதலீட்டு நிறுவனங்கள் இலங்கையில் பல துறைகளிலும் முதலீடு செய்வார்களென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அபூ அரீஜ்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT