Thursday, May 9, 2024
Home » ‘இந்தியாவை சீண்டுவது நோக்கமல்ல’ கனடா பிரதமட் ட்ரூடோ தெரிவிப்பு

‘இந்தியாவை சீண்டுவது நோக்கமல்ல’ கனடா பிரதமட் ட்ரூடோ தெரிவிப்பு

by gayan
September 23, 2023 7:16 am 0 comment

இந்தியாவை சீண்டி பார்த்து, பிரச்சினைகள் ஏற்படுத்த வேண்டும் என்பது கனடாவின் நோக்கமல்ல என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் நிகழ்ந்த சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கனடாவில் செய்தியாளார்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

“வளரும் முக்கியத்துவம் கொண்ட நாடு இந்தியா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் இந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்தியாவுடன் தொடர்ந்து உறவாட வேண்டிய அவசியம் உள்ளது.

இந்தியாவை சீண்டி பார்த்து பிரச்சினைகள் ஏற்படுத்துவது கனடாவின் நோக்கமல்ல” என்று அவர் தெரிவித்தார்.

எனினும் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசுக்கும் நம்பத்தக்க தொடர்பு உள்ளது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தொடர்ந்து கனடா நாட்டு பிரஜை என்று குறிப்பிட்டு பேசினார் ஜஸ்டின் ட்ரூடோ. “ஒரு கனடியர் கனடிய மண்ணில் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இந்திய அரசு எங்களுடன் சேர்ந்து உண்மையை கண்டறிய உதவ வேண்டும் என கூறுகிறோம்” என அவர் தெரிவித்தார். இந்தியா–கனடா நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இரு நாடுகளும் வெளியுறவு கொள்கை தொடர்பாக சில முடிவுகளை அறிவித்துள்ளன.

கனடாவில் பணியிலிருந்த இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதை போல, இந்தியாவிலுள்ள கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற இந்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.

இதேவேளை இந்தியாவுக்கு எதிராக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

கனடாவின் ‘கடுமையான’ குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டுடன் தொடர்பில் இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் சீக்கியர்கள் வாழ்ந்துவரும் நிலையில், இந்த விவகாரம் அந்நாடுகளின் உள்ளூர் அரசியலில் கடும் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT