Thursday, May 2, 2024
Home » காலம் காலமாக பேசுவதை விடுத்து அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்

காலம் காலமாக பேசுவதை விடுத்து அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்

ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு நீதி அமைச்சர் அழைப்பு

by gayan
September 23, 2023 6:41 am 0 comment

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக காலம் காலமாக பேசுவதை விடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் நாடு

இரத்த வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் காணப்பட்ட போது, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தூரநோக்குடன் செயற்பட்டு நாட்டை பாதுகாத்ததை வெளிப்படையாக குறிப்பிட வேண்டுமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.

பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகளின் செயற்பாட்டை அப்போது நான் வெளிப்படுத்தியதால், குண்டுத்தாக்குதல் இடம்பெறும்வரை தான் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவாதியாகவே சித்தரிக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“நல்லாட்சி அரசாங்கத்தில் நான் நீதியமைச்சர் பதவியில் இருந்த போது, ‘இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் துருக்கியினூடாக சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளார்கள்’ என்பதை சபைக்கு அறிவித்தேன். அதை நான் வெறும் பேச்சுக்காகவோ அல்லது சாட்சியங்கள் ஏதும் இல்லாமலோ குறிப்பிடவில்லை.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் நீதியமைச்சர் என்ற ரீதியில் நான் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் முதன்முறையாக கலந்துகொண்டேன்.

அப்போது அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தினார்.

பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஆராய்ந்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு சாதகமான நிலையில் இல்லையென்பதுடன், ஏதோ பாரிய விளைவு இடம்பெறவுள்ளது என்பதையும் நான் உணர்ந்தேன். அதன் பின்னர் நான் இனவாதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். ஒருசில ஊடகங்களும் முஸ்லிம் சமூகத்தின் விரோதியாகவே என்னை விமர்சித்தன.

சிரியாவுக்கு ஒரு தரப்பினர் சென்று அடிப்படைவாத பயிற்சி பெற்றதை நான் குறிப்பிட்டதைத் தொடர்ந்து கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் முக்கிய 50 பிரதிநிதிகள் என்னை சந்தித்தார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஆதிக்கம் பெற்றுள்ள அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிட்டார்கள்.

பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் நாட்டு மக்கள் மத்தியில் அப்போது நிலவியது.

பயங்கரவாதி சஹ்ரான் முதலில் காத்தான்குடி பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டு முஸ்லிம் ஒருவரை கொலை செய்தார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை போன்றே சஹ்ரான் தமது இனத்தவரையே கொன்று பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

எவ்வாறெனினும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது நான் அமைச்சராக பதவி வகிக்கவில்லை. குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 250 க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டு, 500 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலத்துக்குள் சம்பவம் இடம்பெற்ற பகுதியின் பொலிஸ் நிலைய அதிகாரி நீதவான் நீதிமன்றத்துக்கு ‘ பி’ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 7 நாட்கள்வரை நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

2019.04.27 மற்றும் 28ஆம் திகதிகளில் நான் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் வலியுறுத்தினேன்.

அதன் பின்னரே 2019.04.29 ஆம் திகதி பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஷ முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT