Friday, May 10, 2024
Home » நான்கு தசாப்த கால கல்விப்பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிழக்கின் இலக்கிய ஆளுமை சித்தி சபீனா வைத்துள்ளாஹ்

நான்கு தசாப்த கால கல்விப்பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிழக்கின் இலக்கிய ஆளுமை சித்தி சபீனா வைத்துள்ளாஹ்

by damith
September 12, 2023 10:07 am 0 comment

கல்விப் பணியுடன் கலை இலக்கியப் பங்களிப்பினையும் சமதளமாகக் கொண்டு செல்வது கடினமான காரியம். ஆனால் இவ்விரண்டிலும் ஆற்றல் கொண்டவர் கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சித்தி சபீனா வைத்துள்ளாஹ்.

1982 ஏப்ரல் 23 ஆம் திகதி கந்தாளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் பாடசாலைக் காலத்தில் இருந்தே இலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். தனது மாணவர்களையும் இத்துறைக்குள் உள்வாங்கினார். இவரது சேவைக் காலத்தில் மாணவர்களை கவிதை, கட்டுரை, நாடகம், கவிதை,கஸீதா வில்லுப்பாட்டு, பக்கீர் பைத், நாட்டுப் பாடல் போன்ற பல போட்டி நிகழ்ச்சிகளுக்குள் உள்வாங்கி வெற்றிச் சாதனை படைக்கக் காரணமானவர்.

திருகோணமலை ஸாகிறா கல்லூரியில் கற்பிக்கும் காலத்தில் 2011ஆம் ஆண்டு ‘ஹுர் மூஸானும் உமர் (ரழி) யும்’ எனும் தலைப்பில் நாடகம் ஒன்றை ஆற்றுப்படுத்தி அந்நாடகத்தை தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்துக்கு கொண்டு வந்தவர் அவர்.

திருகோணமலை சென்மேரிஸ் கல்லூரியில் கற்பித்த காலத்தில் கற்றலில் பின்தங்கிய மாணவர் மீது அதிக கவனம் செலுத்தினார். சஞ்சிகை உருவாக்குவதற்கு மாணவர்களை பயிற்றுவித்தததுடன் மாணவர் மன்றங்களையும் ஒழுங்குபடுத்தினார். இவரால் உருவாக்கப்பட்டதே ‘ஹிரா இலக்கிய மன்றம்’.

பிரதேச கலை இலக்கியப் போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்தியதோடு தானும் இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைத் தானதாக்கினார். 2022 இல் ‘கடற்பறவை’ குழுமம் நடத்திய மகளிர்தின கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம்பெற்றார். மூதூர் பொதுநுாலகத்தால் 2022 இல் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம்பெற்று பணப்பரிசில் பெற்றார்.

கடந்த மாதம் இந்தியாவின் திருக்கோவிலூர் இளைஞர் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட உலகளாவிய மரபுக் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுக் கொண்டார்.

இவர் சிறுகதை, சிறுவர் பாடல், மரபுக் கவிதைகள், நாட்டார் பாடல், புதுக்கவிதை, விழிப்புணர்வுக் கட்டுரைகள் போன்றவற்றைப் படைப்பதில் வல்லவர். 2023 ஜனவரியில் ‘வண்ணக் கனவுகள்’ எனும் கவிதைநூலை வெளியிட்டார். இவரது ‘செல்லச் சிட்டுக்கள்’ சிறுவர்பாடல் நூல் மற்றும் ‘மரபுச் சோலை’ மரபு கவிதைநூல் ஆகியன வெளியிடுவதற்கான தயார் நிலையில் உள்ளன.

முகநூல் குழுமங்களில் நடுவராகப் பயணிக்கும் இவர் பல குழுமங்களில் ‘கிண்ணியாசபீனா’ எனும் பெயரில் நிர்வாகியாகவும் விளங்குகின்றார். அக்குழுமங்களில் கவியரங்கு, கவிக்களம் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வருகின்றார். மேலும் ‘சூரியத் தமிழ்’ தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய மரபுப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று ‘விருத்தப் பாமணி’ என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்தியாவின் புதுவை நலச்சான்றோரால் அண்மையில் தொகுக்கப் பட்ட ‘கலைஞர் நூறு கவிஞர் நூறு’ எனும் கவிதைமலரில் இவரது ‘ஓய்வறியா உழைப்பாளர் கலைஞர்’ எனும் தலைப்பிலான விருத்தப்பாக்கள் இடம்பிடித்துள்ளமை முக்கிய அம்சமாகும்.

புதுவைச் சான்றோரால் நடாத்தப் படும் உலகளாவிய மரபுக் கவிதைப் போட்டிகளிலும் இவருக்கு மூன்று தடவைகள் மூன்றாம் இடங்கள் கிடைத்தன. பிரதேசக் கலை இலக்கியப் போட்டிகளில் இவரது மரபுக்கவிதைகள் முதலிடங்களையே அலங்கரித்து வருகின்றன.

மரபுக்கவிதை எழுதுவதில் அதிக நாட்டமுடைய இவர் பாவலர் சரஸ்வதி பாஸ்கரன், காப்பியக்கோ ஜின்னா சரிபுதீன், தமிழ் நெஞ்சம் அமீன், பிரான்சில் வசிக்கும் பாட்டரசர் கி. பாரதிதாசன் ஆகியோரை தம் மரபுக்கவிதை பயிற்சியாளர்களாகக் கொண்டுள்ளார்.

ஆசிரியர், உதவி அதிபர் பதவிகளை வகித்த சபீனா வத்துள்ளா செப்டம்பர் 1 ஆம் திகதி(2023) தமது 60 வயதில் 41 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது இலக்கியப்பணி தொடர வாழ்த்துவோம்.

ஜெஸ்மி எம்.மூஸா (பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT