Monday, May 20, 2024
Home » சி.வி.வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள் மீள்பதிப்பாக்கம் செய்யப்பட வேண்டும்

சி.வி.வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள் மீள்பதிப்பாக்கம் செய்யப்பட வேண்டும்

by Gayan Abeykoon
May 9, 2024 11:00 am 0 comment

‘எல்லைப்புறம்’ என்ற நாவல் மலையக இலக்கிய வரலாற்றின் முன்னோடியான சி. வி. வேலுப்பிள்ளை அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பொன். கிருஷ்ணசாமியினால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இது கலை ஒளி முத்தையா பிள்ளை நினைவுக்குழுவினால் கடந்த ஜனவரி மாதம் 2024 இல் சென்னையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இந்நாவலை சி. வி. வேலுப்பிள்ளை அவர்களே தன் கைப்பட, இலக்கிய ஆளுமை அகிலனின் முன்னுரையோடு பல ஆண்டுகளின் முன்னே   மு. நித்தியானந்தனுக்கு அனுப்பி வைத்தமைதான். இருந்தாலும் உள்நாட்டு யுத்தம், இடப்பெயர்வு, புலம்பெயர் வாழ்வின் நடைமுறைச் சிக்கல்கள் எனப் பலதும் அலைக்கழித்ததில் இந்நாவல் எங்கெல்லாமோ அலைந்து, பல ஆண்டுகளாகப் பதிப்பாக்கம் செய்யப்பட முடியாத ஒரு நிலையில் இருந்தது. பல ஆண்டுகளின் பின்னர் நித்தியானந்தன் அவர்கள் இதனைத் தன் பெருமுயற்சியினால் பதிப்பாக்கம் செய்திருக்கிறார்.

நித்தியானந்தன் மிகுந்த முனைப்போடு, பல சிக்கல்களைக் கடந்து இந்நாவலை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் ‘ borderland’ என்ற பெயரில் சி. வி. வேலுப்பிள்ளையால் இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், இதன் தமிழ் மொழிபெயர்ப்பான இந்நூலே ஏறத்தாழ 20 வருடங்களின் பின்னர் வெளிவந்திருக்கிறது. இதன் ஆங்கில மூலப்பிரதி வெளிவரவில்லை என்பது கவலைக்குரியது.

சி. வி. வேலுப்பிள்ளை ( 1914 – 1984)மலையகத்தின் இலக்கிய முன்னோடி மட்டுமல்ல, ஆசிரியர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, கவிஞர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமையாளராகத் திகழ்ந்தவர். இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக 1947 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டவர்.

மலையகத்தில் ஒரு புகழ் பூத்த குடும்பத்தில் பிறந்து, கொழும்பில் நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றுத் தேறியிருந்தாலும் தான் பிறந்த இடத்து மலையக மக்களின், மனித உரிமைகளை இழந்து தவித்த நாடற்ற மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்தவர்.

சிவி வேலுப்பிள்ளை அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரு சேர புலமை பெற்றவராயிருந்தவர். பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் மலையக மக்களுடன்தான் அவர் வாழ்ந்திருந்தார், அந்த மக்களைப் பற்றித்தான் எழுதினார். அவர்தான் மலையக இலக்கிய மரபுக்கு வித்திட்டவர் என்பதை மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான தெளிவத்தை ஜோசப் முன்னர் கூறியிருந்தார். சி. வி. வேலுப்பிள்ளை எழுதிய பல படைப்புகளில் பதினைந்து நூல்கள் மாத்திரமே பிரசுரமாகியிருக்கின்றன.

‘எல்லைப்புறம்’ ஒரு கைக்கடக்கமான, விறுவிறுப்பு சற்றும் குறைய விடாத ஒரு கதைக்களத்தை எமக்குத் தந்திருக்கிறது.

மிக வீரியமான கதாபாத்திரமான, விபரீத குணங்களையுடைய ஒரு மங்கையின் திருமண வாழ்வின் தோல்வியும், அது சார்ந்த துயரமும், அதைக் கடந்து செல்லும் அவளது துடுக்குத்தனம் நிறைந்த திமிரும் எங்கு போய் முடிகிறது. எதற்காக இத்தனை ஆண்களை அவள் வசீகரிக்கிறாள், என்பதெல்லாம் வாசகர்களை நிச்சயமாகக் கட்டிப் போடும் கதைக்கருதான்.

நாவல் எங்கும் தோய்ந்து போயிருக்கும் ‘பாலுமை’ சார்ந்த அகவுணர்வுகளோடான எல்லைப்புறம் மட்டுமன்றி மலையகமும் அதனோடு இணைந்தும், இணையாமலும் இருக்கின்ற நிலம் சார்ந்த எல்லைப்புறங்களையும் இந்நாவல் மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தொட்டுச் செல்கிறது.

மலையகத்தின் எல்லைப்புறங்களில் அமைந்திருக்கும் சிங்களக் கிராமங்களின் வழியாக மலையாகத் தமிழர்களுக்கு ஏற்படும் வலியும் துயரமும் அரசியல், பொருளாதாரம், குடியியல் சார்ந்து ஏற்படுவதை கூறத் தவறாத அதேவேளையில் சிங்களவர்,- தமிழர் இடையேயான தோழமைகளையும் அதன் பால் செழுமையாக்கப்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரங்கள், எல்லைப்புறங்களில் வரண்டு போயிருக்கும் இரு சாரார்களுக்கிடையேயான ஊடாட்டத்தை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மலையக இலக்கியத்திற்கு செழுமையும், புதுப்பரிமாணமும் தந்த சி. வியின் இந்நாவல் அவசியம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும். தொடர்ந்தும் அவரது நூல்கள் மீள்பதிப்பாக்கம் செய்யப்பட வேண்டும்.

பூங்கோதை

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT