Monday, May 20, 2024
Home » சீனன்கோட்டை, அல் ஹுமைஸரா அஹதிய்யாவின் முப்பெரும் விழாவில் மாணவர்கள் கௌரவிப்பு

சீனன்கோட்டை, அல் ஹுமைஸரா அஹதிய்யாவின் முப்பெரும் விழாவில் மாணவர்கள் கௌரவிப்பு

பள்ளிச்சங்கத் தலைவர் உட்பட பலரும் பங்கேற்பு

by Gayan Abeykoon
May 9, 2024 3:19 am 0 comment
ஆசிரியர் குழாத்தினர்

பேருவளை, சீனன்கோட்டை அல் – ஹுமைஸரா அஹதிய்யா பாடசாலையின் பரிசளிப்பு விழா   அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையின் ஜாபிர் ஹாஜியார் நினைவு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

சீனன்கோட்டை பள்ளிச்சங்கத் தலைவர் அல்-ஹாஜ் முக்தார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர் தலைவர் பதவியேற்பு, ரமழான் கேள்வி பதில் திறந்த போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் ரமழான் ஆன்மீக பயிற்சி நெறியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதல் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கப்பட்டதோடு, மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில்  ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முதல்வர் அஷ்-ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) பிரதம அதிதியாகவும்  கெளரவ அதிதிகளாக அமானா வங்கியின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.ஸி.எம். நுமைல் காஸிம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி அதிகாரி அஷ்-ஷெய்க் முப்தி முர்ஸி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் விஷேட அதிதிகளாக அஹதிய்யா மத்திய சம்மேளன தலைவர், களுத்துறை மாவட்ட அஹதிய்யாக்களின் தலைவர் மற்றும் அமானா வங்கியின் பேருவளைக் கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அல்-ஹுமைஸரா அஹதிய்யாவின் நிர்வாகத்தலைவரும், சீனன்கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ்-ஷெய்க் இஹ்ஸானுத்தீன் (நளீமி)  தலைமையிலான அஹதிய்யா நிர்வாகம் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய அஹதிய்யா நிர்வாக உறுப்பினரும் சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளருமான  அரூஸ் அனஸ் தனது உரையில், 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது அஹதிய்யாவின் 14 வருட வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும் என்பதோடு, அஹதிய்யாவிற்கான சமூக அங்கீகாரத்தை முழுமையாக பெற்றுக் கொடுக்கும் முயற்சியை சீனன் கோட்டை பள்ளிச்சங்கம் செய்து வருகிறது. இந்த விழா அதன் ஓர் அங்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

விழாவில் உரையாற்றிய அல்ஹுமைஸரா அஹதிய்யா அதிபர் அஷ்-ஷெய்க் ஸப்வான் ஆரிப், மாணவர்களும், இளம் சிறார்களும் ரமழான் மாதத்தை பயனுள்ளதாக கழிப்பதற்கு “ரமழான் ஆன்மீகப் பயிற்சி நிகழ்ச்சி” வழியேற்படுத்தியுள்ளது. மேலும், அஹதிய்யாவை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட “ரமழான் கேள்வி பதில் திறந்த போட்டி” இந்த பிரதேசத்தின் 1000 க்கும் பேற்பட்ட மாணவர்களை சென்றடைந்துள்ளது. அத்தோடு, தரம் 4 முதல் 11 வரை நடைபெற்று வருகின்ற எமது அஹதிய்யாவில் மாணவர்களுக்கான பண்பாட்டு, ஒழுக்க வழிகாட்டல்கள், தலைமைத்துவ பயிற்சி, போட்டி நிகழ்ச்சிகள், இஸ்லாமிய கலாசார தின நிகழ்ச்சிகள், இபாதத்கள் பற்றிய வழிகாட்டல்கள், அன்றாட இஸ்லாமிய நடைமுறைகள் என்பன கற்பிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக, க.பொ.த. (சா/த) பரட்சைக்கான இஸ்லாம் மற்றும் அரபு இலக்கியம் ஆகிய பாடங்களுக்கான வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன. மேலும்,  மே மாதம் 26ம் திகதி முதல் சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தரம் 4ற்கு பின்னர் சீனன்கோட்டைப் பிரதேச சிறார்கள் மார்க்க கல்வியை பெற்றுக் கொள்கின்ற அரச அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு நிறுவனம் அல்-ஹுமைஸரா அஹதிய்யா என்றும் குறிப்பிட்டார்.

விழாவில் விஷேட உரையாற்றிய பிரதம அதிதி ஜாமிஆ நளீமிய்யா கலாபீட  முதல்வர் அஷ்-ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி), பிள்ளைகள் மீதான பெற்றோரின் பணி, அஹதிய்யாக் கல்வியின் முக்கியத்துவம் என்பன குறித்து விளக்கமளித்தார். அதில் அவர், மறுமையில் பிள்ளைகளுக்கு முன்னர் பெற்றோர்களே விசாரிக்கப்படுபவர்கள். பிள்ளைகளுக்கு சன்மார்க்க அறிவை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் மிக அரிதாகவே உள்ள இக்காலப் பகுதியில், அதற்காகவே அமைக்கப்பட்டுள்ள அஹதிய்யாக்களில் அவர்களை இணைத்து இந்த சந்தர்ப்பத்தை ஒவ்வொரு பெற்றோரும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்த அஹதிய்யாவின் வளர்ச்சியில் அனைவரும் இணைந்து பங்காற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் ரமழான் கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மற்றும் ரமழான் கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல், பத்து வருடங்களுக்கு மேல் அஹதிய்யாவில் சேவையாற்றிய ஆசிரியர்களை கெளரவித்தல் மற்றும்  மாணவர்களின் நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

இறுதியாக இலங்கை அரச மருத்துவர்கள் சங்க ஊடக பேச்சாளர்களில் ஒருவரும் அஹதிய்யாவின் நிர்வாக அங்கத்தவருமான டொக்டர்  அன்பாஸ் பாரூக் அவர்களின் நன்றியுரையோடு விழா நிறைவடைந்தது.

10-1

 

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT