Friday, May 10, 2024
Home » இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அட்டுலுகம முஸ்லிம் கிராமம்

இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அட்டுலுகம முஸ்லிம் கிராமம்

by sachintha
July 19, 2023 1:04 pm 0 comment

களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமங்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியது பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் கிராமமான அட்டுலுகம ஆகும். இக்கிராமம் தேசிய நல்லிணக்கத்துக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். உலகப் பிரசித்திபெற்ற நாடுகளைத் தேடி அக்காலத்தில் பயணித்த நாடுகாண்பயணியான மொரோக்கோ நாட்டின் கல்வியாளர் இப்னு பதூதாவின் இலங்கை வருகையின் சரித்திரத்தோடு இக்கிராமம் சம்பந்தப்பட்டுள்ளதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பிரதேசத்தில் நாலாபுறமும் அமைந்த சிங்களக் கிராமங்களுக்கு மத்தியில் சுமார் 2,50,-300 ஏக்கர் நிலப்பரப்பில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். 1300 ஆவது கிறிஸ்தவ வருடத்தில் மொரோக்கோ கல்வியாளர் நாடுகாண் பயணியான இப்னு பதூதாவின் இலங்கை விஜயம் தொடர்பான வரலாற்றுத் தகவல்களிலும் இந்தக் கிராமத்தின் வரலாறு சம்பந்தப்பட்டதாக விளங்குகின்றது. இது சிங்கள மன்னராட்சி காலத்துடன் பிணைந்ததாகவும் இருந்துள்ளது .இதனை சரித்திர நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன அட்டுலுகம வரலாறு பற்றிய நிகழ்வில் விரிவுரை நிகழ்த்திய அல்கஸ்ஸாலி தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.எம். ஹிதாயதுல்லா தெரிவித்தார்.

பண்டாரகம பிரதேச செயலகம் அட்டுலுகம பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து சர்வசமய மதத் தலைவர்களையும் பிரமுகர்களையும் தெளிவூட்டும் வேலைத் திட்டத்தை அட்டுலுகமவில் ஏற்பாடு செய்தமை தேசிய நல்லிணக்க வேலைத் திட்டத்துக்கு வலுவூட்டுவதாக அமையும் எனவும் சட்டத்தரணி ஹிதாயதுல்லா மேலும் தெரிவித்தார்.

பண்டாரகம பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அட்டுலுகம மர்கஸ் பெரியபள்ளிவாசல் மற்றும் ஊர் நிர்வாகத்தின் அனுசரணையில் நிர்வாக சபைத் தலைவர் எம்.அனூஸ், எம்.மில்ஹான், மௌலவி எம்.பவாஸ் தலைமையிலான பிரமுகர்களின் வழிகாட்டலில் முஸ்லிம் சமய வழிபாடு மற்றும் ஹஜ் பயணம் தொடர்பான செய்முறை தெளிவூட்டல் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

மர்கஸ் பெரியபள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் முஹம்மது அனூஸ் தலைமையில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்க சமய,கலாசார ஊக்குவிப்பு வேலைத்திட்ட சிறப்பு நிகழ்வில் பௌத்த சமய, கலாசார விவகார அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்ரமநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேல்மாகாண கலாசார அமைச்சின் செயலாளர்,எஸ்.லொகுவிதான, பிரதேச செயலாளர், ஜே.ஏ.திஸ்னா ஜானகி, பிரதேச சபை செயலாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நப்லி நஸீர், உலமாக்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பெரியபள்ளிவாசல் பரிபாலன தலைவர் தலைமையிலான ஊர் முக்கியஸ்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட சமயப்பெரியார்கள் மற்றும் அதிதிகளுக்கு புனித குர்ஆனின் சிங்களப் பிரதிகளை அன்பளிப்புச் செய்தனர்.

அன்று இலங்கையின் கம்பளை இராசதானியின் உபபிரிவாக விளங்கிய றைகம் நிர்வாகப் பிராந்தியம் வீரகனேகஸ்வர என்பவரின் ஆட்சியில் இருந்துள்ளது. அட்டுலுகமகே என்ற மக்கள் பிரதிநிதி ஒருவரும் இங்கு இருந்துள்ளார். அக்காலம் தொட்டு அட்டுலுகம நாமம் சரித்திரப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

‘றைகம்வித்தி’ என்ற புத்தகம் மற்றும் இதற்கு முன்னர் இருந்த ஒன்பதாம் தரத்துக்கான வரலாற்றுப் புத்தகத்தில் ‘யஹியா நெயினா’ என்ற பிரதேச சேனாதிபதிக்கு பிரதேச நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. வீரகனகேஸ்வரவினால் படையெடுப்புக்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் முஸ்லிம்களாக இருந்துள்ளனர். அவர்களுக்கு அட்டுலுகம பிரதேசத்தை வழங்கியுள்ளார் எனவும் சட்டத்தரணி ஹிதாயதுல்லா விளக்கமளித்தார்.

மேற்கண்ட சரித்திர விபரங்களை பார்க்கும்போது அட்டுலுகமவாழ் மக்களின் வாழ்க்கை வரலாறு 1300 ஆவது கிறிஸ்தவ வருடத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது புலனாவதுடன், அதற்கு முன்பிருந்தும் முஸ்லிம்களின் தொடர்பு இருந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.முன்தஸிர்…

(பாணந்துறைமத்திய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT