Tuesday, April 30, 2024
Home » வயோதிப பெற்றோருடன் பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய முறை

வயோதிப பெற்றோருடன் பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய முறை

by gayan
July 7, 2023 10:10 am 0 comment

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ‘அவனுடைய மூக்கு மண்ணாகட்டும் (அவன் கேவலம் அடையட்டும்) என்று மூன்று முறை கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! யார்? (யாரைப்பற்றி இப்படி கடிந்துரைக்கிறீர்களா?) என்று வினவ

‘வயோதிப நிலையில் தன் தாய் தந்தையரில் ஒருவரோ இருவருமோ உயிருடன் இருக்கையில் (அவர்களை நல்ல முறையில் கவனித்து) சுவனம் செல்லாதவன்’ என்று குறிப்பிட்டார்களென அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

வயது முதிர்ந்த தன்னுடைய தாய், தந்தையரோடு நல்ல முறையில் நடந்து கொள்ளாத காரணத்தால் இழிவுக்கும், கெட்ட பெயருக்கும் ஆளான ஒருவன், சுவனம் செல்லும் பேற்றினை இழப்பான் என்ற செய்தியை நபி (ஸல்) அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

தள்ளாத வயதிலுள்ள தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து அவர்களை உபசரித்து அவர்களுடைய தேவைகளுக்கு பணம், பொருள் கொடுத்து மகிழ்விப்பவன் சுவனத்திற்கு தகுதியானவன் என்பதையே இந்நபி மொழி எடுத்தியம்புகிறது.

பொதுவாக முதுமை மற்றும் உடல் பலவீனத்தின் காரணமாக பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே அவர்களை நல்லமுறையில் பராமரிப்பது பிள்ளைகளின் மீது கடமையாகும். பொருளாதார விஷயத்தில் அவர்கள் பலவீனமுற்றிருக்கும் போது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் நோயுற்றால் அவர்கள் மீது அன்பு காட்டி தகுந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால், துன்பத்திற்கு ஆளானால் அவர்களின் கவலையைப் போக்கவும் மனதைத் தேற்றவும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி அவர்களைச் சந்தித்து அன்பு காட்ட வேண்டும். அவர்களிடம் உரையாடும் போது அவர்களின் கண்ணியமும் மரியாதையும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுடன் நடந்து செல்லும் போது பின்னால் செல்ல வேண்டும். அவர்களுக்கு கண்ணியம் அளிக்க வேண்டும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போருக்குச் செல்ல அனுமதி கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய பெற்றோர் உயிருடன் இருக்கின்றனரா? என அவரிடம் வினவ அவர் ‘ஆம்’ என பதிலளித்தார். அவ்வாறெனில், அவர்களுக்காக (உழைத்து பணிவிடை செய்து) நீர் அறப்போர் செய்யும் என்ற கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

‘தாய் தந்தையருக்கு அறச்சேவை செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பதன் ஊடாக அவர்களுக்கு ஓய்வும் சுகமும் கிடைக்கும் பொட்டு பொருட்களை செலவிட வேண்டும். அதனால் உங்கள் உடல் சோர்வுற்றுப் போகும் அளவிற்கு அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவர்களுடன் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களது நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு மனத் திருப்தியை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் ஜாஹிமா (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியொன்று இவ்வாறு பதிவாகியுள்ளது/. ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்துகொள்ள அனுமதி கோரினேன். அப்போது நபிகளார், உன்னுடைய தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா? என அன்னார் வினவ நான் ‘ஆம்’ என்றேன். அச்சமயம் நபி (ஸல்) அவர்கள், ‘நீர் அவர்களுடன் இரும், சுவனம் அவர்களுடைய காலடியில் உள்ளது. (அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொண்டால் ‘சுவனம்’ கிட்டும்’ என்று குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம்: மிஷ்காத்)

இதேவேளை நபிமொழித் தொகுப்பான அபூதாவூத்தில் பதிவாகியுள்ள ஹதீஸொன்றில், ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து ‘(யாரஸூலுல்லாஹ்) உங்களிடம் ஹிஜ்ரா (அல்லாஹ்வின் திருப்தியை நாடி நாட்டைத் துறத்தல்) ஒப்பந்தம் செய்ய வந்துள்ளேன். (எனது இந்த எண்ணத்தின் காரணமாக) என்னுடைய தாய் தந்தையரை அழுத வண்ணம் விட்டு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் திரும்பச் சென்று அவர்கள் சிரித்து மகிழச் செய்வாயாக’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு நபிமொழியில் ‘ஒருவர் ஏமன் நாட்டிலிருந்து ஹிஜ்ரத் செய்து நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரிடம் நபிகளார், ஏமனில் உமக்கு யாரேனும் உறவினர்கள் உண்டா?’ என வினவ தமக்கு பெற்றோர் உள்ளனர் என அவர் பதிலளித்தார். அதனால் நபி (ஸல்) அவர்கள் மேலும் இவ்வாறு வினவினார்கள்.

‘உமக்கு பெற்றோர் ஹிஜ்ரத் செய்ய அனுமதி தந்தார்களா? எனக் கேட்க அவர் ‘இல்லை’ என்றார். அப்படியாயின் நீர் திரும்பிச் சென்று அவர்களிடம் அனுமதி பெற்று வாரும். அவர்கள் அனுமதி அளித்தால் நீர் அறப்போரில் பங்கு கொள்ளலாம். இல்லை என்றால் அவர்களுடன் அன்பும் கருணையும் காட்டி வாஞ்சையுடன் நடந்து கொள்ளும்’ என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்

(ஆதாரம்- அபூதாவூத்)

எனவே வயோதிபப் பெற்றோரைப் பராமரிப்பது அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது உள்ளிட்ட விடயங்களில் ஒவ்வொருவரும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே நபிகளாரின் வழிகாட்டலாகும்.

தொகுப்பு: ஜத்து மைஸரா அப்துல் காதிர்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT