Monday, April 29, 2024
Home » பண்டிகைக் காலத்தில் மக்கள் அவதானம் பேணுவது அவசியம்

பண்டிகைக் காலத்தில் மக்கள் அவதானம் பேணுவது அவசியம்

by mahesh
April 10, 2024 6:00 am 0 comment

இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்நாட்டில் நீண்ட காலத்திற்கு பின்னர் எல்லா மக்களதும் பண்டிகைகள் ஒன்றாகவும் அருகருகேயும் இவ்வருடம் அமைந்துள்ளன. அதாவது கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்வாரம் முஸ்லிம்களின் நோன்பு பெருநாளும் தமிழ் சிங்கள புத்தாண்டும் அமைந்துள்ளன. அதனால் இது இலங்கை மக்களின் பண்டிகைக் காலப்பகுதியாக விளங்குகிறது.

அதேநேரம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல், கொவிட் 19 பெருந்தொற்று மற்றும் 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி என்பவற்றினால் இந்நாட்டுக்கு மக்களுக்கு சுதந்திரமாக பண்டிகைகளைக் கொண்டாடக் கிடைக்கவில்லை. அவ்வாறான அச்சுறுத்தல்கள், பாதிப்புக்களைக் கடந்து சுதந்திரமாகப் பண்டிகைகளைக் கொண்டாடும் வாய்ப்பை இந்நாட்டு மக்கள் இம்முறை பெற்றுக் கொண்டுள்ளனர்.

நான்கைந்து வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறான வாய்ப்பு கிடைக்கப்பெற்று இருக்கின்றது. அதனால் இப்பண்டிகைக் காலத்தை உச்சளவில் கொண்டாடுவதில் அநேகர் சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர். பண்டிகை என்பது மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அதனால் இக்காலப்பகுதியில் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. அவற்றில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் சுற்றுலா செல்வது ஒரு பாரம்பரியமாக உள்ளது. அதேபோன்று இக்காலப்பகுதியில் அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அத்தோடு உயிரிழப்புகளும் கூட அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை சுகாதார அமைச்சின் தரவுகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் சுகாதார அமைச்சின் தொற்றாநோய்கள், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவரான பொதுமருத்துவ நிபுணர் சமித்த சிறிதுங்க குறிப்பிடுகையில், ‘நாட்டில் நாளாந்தம் இரண்டு மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இது வருடா வருடம் 700-_800 பேராக விளங்குகிறது. அதிலும் பண்டிகைக் காலங்களில் இவ்விதமான மரணங்கள் அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது’ என்றுள்ளார்.

பண்டிகைக் காலங்களில் சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் கடற்கரைகளில் மாத்திரமல்லாமல் குளங்கள், ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நீரூற்றுகளில் நீராடுவதில் அதிக ஆர்வம் காட்டுவது வழமையாகும். ஆனால் இவர்கள் நீராடும் இடங்களில் பெரும்பாலானவை முன்பின் அறிமுகமற்றவை. அவ்விடங்களின் நீரின் தன்மை, நீரோட்டம், ஆழம், முதலைகள் நடமாட்டம் உள்ளிட்ட விடயங்களை இவர்கள் அறியாதவர்களாவர். அத்தோடு இவ்வாறான இடங்களில் பெரும்பாலானவை ஆபத்துக்கள் நிறைந்தவையாகவே உள்ளன.

இருந்தும் இவை தொடர்பில் கவனம் செலுத்தாது நீராடுவதால் உயிராபத்து அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் துரதிர்ஷ்ட நிலைமைக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது. கடந்த காலங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த பலரது மரணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் இதனையே எடுத்துக்காட்டுகின்றன. அதாவது நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நீராடும் நீர்த்தேக்கமோ, குளமோ, நீரூற்றோ அமைந்திருக்கும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் தூர இடங்களைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் நீராடும் குளம் அல்லது நீர்த்தேக்கம் அல்லது ஆறு என்பவற்றின் நீரோட்டத்தின் தன்மையையோ அவற்றின் ஆழத்தையோ அறிந்தவர்களாக இருப்பதில்லை. அதனால் அறிமுகமில்லாத இடங்களில் நீராடுவதால் உயிராபத்து அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது.

ஆனால் இந்த நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகளுக்கு அருகில் வசிப்பவர்களும் பிரதேசவாசிகளும் அவற்றின் ஆழம், தன்மை என்பவற்றை நன்கறிந்தவர்களாக இருப்பவர். அதனால் அவர்கள் ஆபத்து மிக்க இடங்களில் நீராடுவதைத் தவிர்த்து உயிராபத்து அச்சுறுத்தலைத் தவிர்த்துக் கொள்கின்றனர்.

இவ்வாறான நிலையில் பண்டிக்கைக் காலங்களில் அறிமுகமில்லாத இடங்களில் நீராடுபவர்கள் நீரில் முழ்கி உயிரிழக்கும் ஆபத்துக்கு அதிகளவில் முகம்கொடுக்கும் நிலைமை காணப்படுகிறது.

அதனால் நீராடும் குளங்கள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மாத்திரமல்லாமல் கரையோரங்கள் குறித்த அறிவு தெளிவைப் பெற்றிராதவர்கள் அவற்றில் நீராடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதுவே விபத்து தவிர்ப்பு பிரிவினரின் அறிவுறுத்தலாகும். இதைவிடுத்து குளத்தையும் நீரோடையையும் நீர்த்தேக்கத்தையும் கண்டதும் நீராடக்கூடாது. அவற்றில் ஆபத்துமிக்க இடங்கள் நிறையவே இருக்கலாம்.

ஆகவே முன்பின் அறிமுகமில்லாத குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் நீரூற்றுக்களிலும் நீராடுவது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பண்டிகைக் காலத்தில் சுற்றுலா செல்பவர்கள் அவ்வாறான இடங்களில் நீராடுவதைத் தவிர்த்துக் கொள்வதே ஆரோக்கியமானது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT