Thursday, May 16, 2024
Home » பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் பங்களிப்புடன் நோன்புப் பெருநாள்

பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் பங்களிப்புடன் நோன்புப் பெருநாள்

by mahesh
April 10, 2024 6:00 am 0 comment

எக்லட் யுனைட்ஸ் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் ஜே. ஜே.பவுண்டேசன் ஸ்தாபகத் தலைவர் ஐ. வை. எம். ஹனீப், பல்கலைக்கழக மாணவர் சமூகம் மற்றும் நலன்விரும்பிகளின் அனுசரணையுடன் நோன்புப் பெருநாள் புத்தாடைகள் வழங்குதல் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு எக்லட் யுனைட்ஸ் சமூக சேவை அமைப்பின் இயக்குநர் இஹ்திசான் ஹுஸைன்டீன் தலைமையில் அண்மையில் கண்டியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளராக அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம் ரிஸ்மி கலந்து கொண்டார். அதேவேளை பல்கலைக்கழக மாணவிகள் தொண்டு பணியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கண்டி பெண்கள் வலுவூட்டல் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவி பாத்திமா ரியாஸாவின் இல்லத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு புத்தாடைகள், உலருணவுப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திகனவில் அமைந்துள்ள த கார்டியன் சிறுவர் பராமரிப்பு நிலையம், பன்விலை பெண்கள் அமைப்பு, மாத்தளை வக்காமுற உம்மு குரா அரபுக் கல்லூரி, வட்டதெனிய கதீஜதுல் குப்ரா அரபுக் கல்லூரி மற்றும் கம்பளை அல் ஹக்கீமிய்யா அரபுக் கல்லூரி ஆகிய இடங்களில் உள்ள பின்தங்கிய பிள்ளைகளுக்கு இந்த நோன்புப் பெருநாள் உடைகள் மற்றும் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கண்டி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு இடங்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எக்லட் யுனைட்ஸ் சமூக சேவை அமைப்பின் இயக்குனரும் கம்பளை அல் மத்ரஸதுல் ஹக்கீமிய்யாவின் அத்தியட்சகரும் இஹ்திசான் ஹுஸைன்டீன் உரையாற்றும் போது;

மக்களின் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க மனிதாபிமான உதவிகள் புரிகின்றவர்களின் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான செயற்பாடுளும் முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும் இவை எந்நாளும் இந்நிலை உருவாகக் கூடாது. எப்பொழுதும் எந்தவொரு பிள்ளைகளும் கையேந்துகின்ற பிள்ளைகளாக உருவாகக் கூடாது. அதற்கான மாற்றத்தையும் கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பல தரப்பட்ட தேவைகள் உள்ளன என்பது உண்மைதான். அவ்வாறு தேவைகள் உள்ளவர்களும் கூட தங்களுக்கு கீழ் பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற பங்களிப்புக்களையும் உதவிகளையும் நல்கி வருகின்றனர். ஏழை பணக்காரன் என்று இல்லாமல் எல்லோருக்கும் பல்வேறு பிரச்சினைகளும் தேவைப்பாடுகளும் இருந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் எத்தகைய சூழ்நிலையிலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்தல் என்ற மனப்பாங்கு எல்லா தரப்பினர்களிடத்திலும் இருத்தல் வேண்டும்.

ஓர் இக்கட்டான சூழ்நிலையில் மனிதாபிமான உதவியைப் பெற்றுக் கொண்டால், தொடர்ந்து அதே நிலையில் இருந்து கொண்டு வாழ்தல் கூடாது. நாம் அடுத்தவர்களிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டதைப் போல அதை விடப் பன்மடங்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய முன் வருதல் வேண்டும். இந்தப் புத்தாண்டு உடைகளை பெற்றுக் கொள்வதற்காக பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பிள்ளைகளும் ஏ. ஜே. பவுண்டேசன் ஸ்தாபகத் தலைவர் ஐ. வை. எம். ஹனீப் மற்றும் நலன்விரும்பிகள் அனுசரணை வழங்கியுள்ளார்கள்.

இதில் விசேடம் என்னவென்றால் எமது உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுடைய பங்களிப்பு இந்த வேலைத் திட்டத்தில் இணைந்துள்ளமை என்பதுதான் மிக முக்கிய விடயமாகும். இங்கு பல்கலைக்கழக மாணவிகள் நேரடியாக களத்தில் கலந்து கொண்டு யார் பயனாளியாக கருதப்படுகின்றார்களோ அத்தகைய நபர்களுக்கு உதவிப் பொருட்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நோன்புப் பெருநாள் தினத்திற்கான புத்தாடை உடைகளையும் உலருணவுப் பொதிகளையும் நாங்கள் வழங்கி வைப்பதில் பெருமிதம் அடைகின்றோம்.

இவற்றையெல்லாம் கொடுப்பதற்கு பெரியளவில் பணம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதல்ல. அதற்றகுரிய பின்புலம் நல்ல மனம் படைத்தவராக இருத்தல் வேண்டும். சாதாரண நிலையில் இருந்தாலும் கொடுத்துதவி செய்யலாம். இங்கு உதவி செய்ய வந்துள்ள பல்கலைக்கழக சகோதரிமார்கள் ஒருவேளைக்கு கையில் பணம் இல்லாமல் விடுதியில் இருந்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களோடு படிக்கின்ற பிள்ளைகளிடத்தில் நிதிகளைச் சேகரித்துக் கொண்டு உங்களுக்கு பெருநாள் உடைகளை வாங்கிக் கொண்டு வந்துள்ளமை என்பது எந்தளவுக்கு அவர்களுடைய மனிதாபிமான சேவை முக்கியத்துவம் பெற்று இருக்கின்றது என்பதை நாம் அறியலாம். இவ்வாறு அடுத்தவர்களுக்கு கொடுத்துதவ வேண்டும் என்ற வகையில் இன்று கண்டியில் உள்ள ஆறு இடங்களுக்கு இந்த உதவிகளைச் செய்துள்ளோம்.

இந்த வேலைத் திட்டத்தை கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் செய்து வருகின்றோம் என்பது முக்கிய அம்சமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

# அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி உரையாற்றும் போது;

இன்று மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொள்வதை விட எதிர்காலத்தில் இந்த மனிதாபிமான உதவிகள் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்பவர்களையும் அதற்கு உதவி செய்பவர்களையும் உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

குறிப்பாக இரண்டு ஆளுமைகள் இந்த இடத்தில் மனிதாபிமானத் தொண்டு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் வலுவூட்டல்கள் அமைப்பின் தலைவி பாத்திமா ரியாஸா இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் இஹ்திசான் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள் ஆவர். இவ்விடத்தில் அதிகளவு சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பெண்களையே காணுகின்றோம். உண்மையிலே இவை ஒரு நல்ல விடயம்.

பல்கலைக்கழக மாணவிகளைப் பொறுத்த வரையில் 75 விகிதமான மாணவிகள் இங்கு வருகை தந்துள்ளார்கள். இது வரவேற்கத் தக்க அம்சமாகும். இவ்வாறு சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் அதிகளவு ஆண்கள்தான் என்ற பொதுவான கருத்துக்கள் உள்ளன. உண்மையிலே அவை அல்ல. இன்றைக்கு எல்லா இடங்களிலும் பெண் பிள்ளைகளும் சமூகப் பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டார்கள். இன்றைய களப்பணியில் பல்கலைக்கழக மாணவிகளும் பெருமளவு பங்கேற்று இருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.

ஏதோ தொழிற்துறைககளில் ஈடுபட்டாலும் சமூகப் பணிகளில் ஒவ்வொருவரும் வந்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கின்றோம். காரணம் சம காலத்தில் நாட்டில் தேவைகள் அதிகரித்துள்ளன. எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தொடர்ந்து இத்தகைய வழிகாட்டல்களை நாம் செய்ய வேண்டும். எமது நாட்டில் நிலவும் இந்த நெருக்கடியான நிலைமை எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் இல்லாமற் செய்யப்பட வேண்டும். சமூக நலன்கருதி பயனாளிகளுக்கு என்ன தேவையோ அவற்றை உணர்ந்து இஹ்திசான், ரியாஸா போன்றவர்கள் இயங்குகின்றார்கள்.

தற்காலத்தில் கூடபிறர் பெண்கள் அடிமைகளாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் பார்க்கின்றனர். உண்iமை அவை அல்ல . அக்காலத்தில் பெண்கள் ஒரு குழுவினர் எல்லா உரிமைகளும் ஆண்களுக்கே வழங்கப்பட்டுள்ளன என்று ஆதங்கப்பட்டுக் கொண்டனர். கூட்டுத் தொழுகை தொழுவதற்கும் பெண்களுக்கு இடம் இல்லை. அறப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்கும் பெண்களுக்கு இடம் இல்லை என்ற விடயங்களுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அஸ்மா பின் செய்த் என்ற சஹாபி பெண்மணி தலைமையில் நபி நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். அப்பொழுது நபி நாயாகம் (ஸல்) அவர்கள் இவை தொடர்பில் பல கேள்விகள் முன்வைத்தார்கள்.

இதற்கான பதிலை நபி நாயகம் (ஸல்) அவர்கள் சிறியதொரு பதிலின் மூலம் விடையளித்தார்கள். இவை போன்ற பல்வேறு விடயங்கள் இஸ்லாத்தில் உள்ளன. இதில் நன்மையும் இருக்கிறது. பங்களிப்பும் இருக்கிறது. நீங்கள் உங்கள் கணவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு கடமை புரிவதன் மூலம் நேரடியாகப் பங்காளியாக இருப்பீர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆதலால் பெண்கள் ஒரு கட்டுப்பாட்டுக்கு உரியவர்கள் அல்ல. நபி நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உபைதா என்ற வைத்தியப் பெண்மணிக்கு ஒரு கூடாரம் அமைத்துக் கொடுத்து தன் கடமையைத் திறன்படச் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். உமர் ரழி அவர்கள் ஒரு பெண்மணி ஒருவர் சிரியா தேசம் சென்று வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காக பைத்துமால் நிதியத்திலிருந்து பணத்தைக் கொடுத்து அனுப்பினார்கள்.

அந்தப் பெண்மணி நான்கு வருடங்கள் அங்கே இருந்து வர்த்தகத் துறையில் ஈடுபட்டு சிறந்த வியாபாரியாக மாறினார். நபி நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து பெண்கள் ஆளுமைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறான இளம் தலைமைத்துவங்கள் தொடர்ந்து செயற்பட்டு இன்று நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வைப் பெற்றுத் தர முன் வருதல் வேண்டும்.

முதியோர்கள் செய்த பணியை இளையவர்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் எங்களது சகோதரிகளும் எங்களோடு கலந்து கொண்டு தொண்டுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அதே போன்று உங்களைப் பராமரிக்கின்றவர்கள் அனைவரும் உங்கள் மீது அதிகம் அன்பு வைத்திருக்கின்றார்கள் தம் பிள்ளைகளை விட அதிகளவு அன்பு காட்டி பராமரித்து வருகின்றார்கள். இந்த இடத்தில் மார்க்கக் கல்வியும் கிடைக்கின்றது. உலகக் கல்வியும் கிடைக்கின்றது. நபி நாயகம் (ஸல்) அவர்கள் இந்த கல்வி இரண்டையும் சேர்த்துத்தான் கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். வெளியே உள்ள பிள்ளைகளுக்கு ஒரு கல்வியினைத் தான் கற்க முடிகின்றது. ஆனால் நீங்கள் இரு கல்வியினையும் கற்று வருகின்றீர்கள். நாங்களும் உங்களோடு சேர்ந்து பெருநாள் கொண்ட இருக்கின்றோம். நாங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உங்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாட இருக்கின்றோம்.

இந்த நிறுவனம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறு சட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த இடத்திற்கு அநாதைப் பிள்ளைகள் எவ்வாறு இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள் என்பது பற்றிய தெளிவான விடயங்களை அறிந்து அதன் வரலாற்றைப் பதிவு செய்ய, இங்கு வருகை தந்துள்ள பல்கலைக்கழக மாணவர் சமூகம் கவனம் செலுத்த வேண்டும். இந்நிறுவனத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான நயீம் இந்நிறுவனம் ஆரம்பிக்கின்ற போது என்னிடமும் பல ஆலோசனைகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் நிலையங்களுக்கு கையளிக்கின்ற பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த சமூகத்திற்கு ஏற்ப சிறுவர் நிலையங்கள் அமைக்கப்படுதல் வேண்டும். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் இது மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. இது தொடர்பில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஜே.ஜே. பவுண்டேசன் ஸ்தாபகத் தலைவர் ஐ. வை. எம். ஹனீப் கருத்து தெரிவிக்கையில்;

பெருநாள் என்பது ஒவ்வொரு தனி நபரும் தனிப்பட்ட முறையில் கொண்டாடக் கூடிய விசயமல்ல. தன்னுடைய வசதியை வைத்து எத்தனை பேரை பெருநாள் கொண்டாட வைக்கின்றோம் என்பதுதான் இந்த நோன்புப் பெருநாள் பற்றிய எனது கருத்து ஆகும். ஒரு வருடத்தில் எத்தனையோ புது உடைகள் அணிகின்றேன். ஆனால் நான் உடுக்கின்ற உடையின் மூலம் நான் என்ன சந்தோசத்தை அடைகின்றேன் என்று சில சமயம் என்னிடம் நானே கேள்வி கேட்டுள்ளேன். நான் கேட்டதற்குரிய பதில்தான் நான் செய்யக் கூடிய இந்த மனிதாபிமான உதவி. செல்வந்தர்கள் புதிய உடைகளை உடுப்பதில் அவர்களுக்கு சந்தோசத்தை சுகத்தையோ ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் ஒருவர் தன்னுடைய வசதிக்கு ஏற்றமாதிரி எத்தனை பேருக்கு புதிய உடைகளை அணிய வைக்கின்றோமோ எத்தனை பேருக்கு அன்றைய தினம் நல்ல சாப்பாடு சாப்பிட வைக்கின்றோமோ அத்தினத்தில் அந்த வசதிபடைத்தவர் அடையக் கூடிய சந்தோசம்தான். மகத்தான சந்தோசம்.

அந்த வகையில் கடந்த எழு வருடங்களாக எக்லட் யுனைட்ஸ் சமூக சேவை அமைப்பு சேவை செய்து கொண்டு வருகிறார்கள். எங்களுடைய ஜே. ஜே. பவுண்டேசன் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு செல்லுகின்றோம். நாங்கள் மென்மேலும் தொடர்ந்து அவர்களுக்குச் செய்வோம்.

இதேபோன்று நாட்டில் காணப்படும் பொருளாதாரப் பிச்சினை நீங்கி நிம்மதியான சந்தோசமான ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT