Friday, May 3, 2024
Home » இலங்கை பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துமா மத்திய கிழக்கு பதற்றம்?

இலங்கை பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துமா மத்திய கிழக்கு பதற்றம்?

by gayan
April 20, 2024 6:00 am 0 comment

காஸா மீதான யுத்தம், இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் ஈரான் மீது நேற்று வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் என்பவற்றின் விளைவுகளால் மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதனை சர்வதேச தரவுகளும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையில் 3 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

மசகு எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படுவது பிராந்திய நாடுகளை மாத்திரமல்லாமல் முழு உலக நாடுகளையும் பாதிக்கவே செய்யும். குறிப்பாக பொருளாதார ரீதியில் எல்லா நாடுகளும் தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுக்க நேரிட முடியும். அவற்றில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களதும் விலைகள் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு பொருட்களின் விலைகள் அதிகரிப்பதானது வளர்முக மற்றும் மூன்றாம் மண்டல நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் பெரும் பாதிப்பாகவே அமையும்.

அதன் காரணத்தினால் இலங்கை உள்ளிட்ட உலக மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கு விரைவாகவும் வேகமாகவும் அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது அவசியம். அதுவே இன்றைய அவசரத் தேவையாகும். இவ்விடயத்தில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகள் மாத்திரமல்லாமல் வளர்முக நாடுகளும் கூட தங்கள் பங்களிப்புக்களை நல்கத் தவறலாகாது.

இல்லாவிடில் உலகசந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரிப்புக்கு உள்ளாகி ஏனைய அனைத்துப் பொருட்களதும் விலைகள் உயர்வடைவதைத் தவிர்க்க இயலாது. அதன் விளைவாக பெரும் அசௌகரியங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மக்கள் முகம்கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். இந்தப் பாதிப்புகளில் இருந்து இலங்கை மக்களும் விதிவிலக்கு பெற்றிட முடியாது.

இலங்கை ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி பாதிப்புக்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்தது. அந்த நெருக்கடியில் இருந்து தற்பொது மீட்சி பெற்று நம்பிக்கை தரும் வகையில் முன்னேற்றப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலில்தான் மத்திய கிழக்கின் பதற்றநிலை உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இது இந்நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தை பொருளாதார நிபுணர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அன்று அந்நிய செலாவணி பற்றாக்குறையோடுதான் நாடு பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. அதன் விளைவாக எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டனர். இவற்றுக்காக நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வாகனப் போக்குவரத்து, மின்வழங்கல் உள்ளிட்ட எல்லாத் துறைகளும் பாதிப்படைந்தன.

ஆனால் தற்போது மத்தியகிழக்கில் உருவாகியுள்ள பதற்றத்தின் விளைவாக எரிபொருள், எரிவாயுவின் விலைகளில் ஏற்படக்ககூடிய அதிகரிப்பு குறித்து கவனயீனமாக நடந்து கொள்ளக்கூடாது. இப்பதற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எரிபொருள், எரிவாயு என்பவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

அவற்றை வீண்விரயமாகப் பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதன் ஊடாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதையும் அவற்றின் விலைகள் அதிகரிப்பதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

கடந்த காலங்களில் மத்தியகிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்றங்களின் போது உலக சந்தையில் எரிபொருள், எரிவாயுவின் விலைகள் பெரிதும் அதிகரித்தன. அச்சமயங்களில் அதன் தாக்கங்களுக்கு இலங்கை உள்ளிட்ட உலகின் பெரும்பாருலான நாடுகளது மக்களும் முகம்கொடுத்தனர். குறிப்பாக ஈராக் – குவைத் யுத்தம், ஈராக் மீது அமெரிக்கா முன்னெடுத்த யுத்தம் இவற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.

ஆகவே மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் இந்நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்த இடமளிக்காத வகையில் பொறுப்புடன் செயற்படுவது அவசியம். அதற்கான பொறுப்பு ஒவ்வொரு குடிமகனிடமும் உள்ளது. குறிப்பாக தற்போதைய சூழலில் எரிவாயு, எரிபொருளை சிக்கனமாகவும் வீண்விரயமற்ற முறையிலும் பயன்படுத்தும் போது அவை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். இதனை உறுதிபடக் கூற முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT