Friday, May 3, 2024
Home » இஸ்ரேலின் தாக்குதலை ஈரான் குறைமதிப்பீடு: விரைந்து பதில் நடவடிக்கையை தவிர்த்தது

இஸ்ரேலின் தாக்குதலை ஈரான் குறைமதிப்பீடு: விரைந்து பதில் நடவடிக்கையை தவிர்த்தது

by gayan
April 20, 2024 6:00 am 0 comment

ஈரான் மீது இஸ்ரேல் நேற்று பதில் தாக்குதல்களை நடத்திய நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கையாக இது அமைந்தது என்று இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்க வரும் இலக்குகளை ஈரான் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதோடு மத்திய ஈரானின் அஸ்பாஹான் மற்றும் வட மேற்கு ஈரானின் தப்ரிஸ் நகரங்களில் வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் ஈரான் அரச ஊடகம் இந்தத் தாக்குதல்களை குறைத்துக் கூறியதோடு, தாக்குதலையடுத்து கொண்டுவரப்பட்ட வான் கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை மாலை தனது நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவுக்கு அறிவித்தது.

எனினும் இந்த எச்சரிக்கையில் தாக்குதல் தொடர்பில் விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால், ஈரான் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை தவிர்ப்பதற்கு அறிவுறுத்தி இருப்பதோடு குறிப்பிட்ட இராணுவ திட்டங்கள் அல்லது ஈரானிய புரட்சிக் காவல் படையுடன் தொடர்புபட்ட இடங்கள் மீது அவதானம் செலுத்தப்பட்டதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம், சிரியாவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள வான் பாதுகாப்பு நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு இராணுவத்தை மேற்கோள்காட்டி சிரிய அரச ஊடகமான சனா செய்தி வெளியிட்டது.

ஈரான் மீதான தாக்குதல்கள் இஸ்ரேலில் இருந்து நடத்தப்பட்டதையும் அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது என்பதையும் மூன்று மேற்கத்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஏவுகணைகளை பயன்படுத்தி இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடுவதை இஸ்ரேலிய அரசு மற்றும் இராணுவம் மறுத்து வரும் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்பு அஸ்பஹான் நகருக்கு மேலால் பறந்த மூன்று ஆளில்லா விமானங்கள் மீது நடத்திய தாக்குதலால் சிறு எண்ணிக்கையிலான வெடிப்புகள் இடம்பெற்றதாக இந்தத் தாக்குதலை ஈரானிய ஊடகம் மற்றும் அதிகாரிகள் விபரித்துள்ளனர். பதில் தாக்குதல் ஒன்றை தவிர்க்கும் வகையில் இந்த சம்பவத்தை இஸ்ரேலின் தாக்குதல் என்பதற்கு பதில் ‘ஊடுருவிகளால்’ நடத்தப்பட்ட தாக்குதல் என்றே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்காக இஸ்ரேலுக்கு எதிரான பதில் நடவடிக்கை எடுக்க எந்தத் திட்டமும் இல்லை என்று ஈரானிய அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘சம்பவத்தின் வெளி மூலம் உறுதி செய்யப்படவில்லை. நாம் எந்த வெளித் தாக்குதலையும் சந்திக்கவில்லை என்பதோடு இது தாக்குதலை விட ஊடுருவலாகவே விவாதிக்கப்படுகிறது’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்பஹான் நகரில் ஈரானின் இராணுவ விமானத் தளம் மற்றும் முக்கியமான அணு திட்ட தளம் ஒன்று அமைந்துள்ளது. எனினும் அவை பாதுகாப்பாக இருப்பதாக ஈரானின் தஸ்மின் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்பஹானில் வான் பாதுகாப்பு அமைப்பு சில வான் பொருட்களை சுட்டு வீழ்த்தியதாகவும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ஈரானின் உயர் இராணுவத் தளபதியான அப்துல்ரஹ்மான் மூசாவி அரச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அந்த முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று தேசிய தொலைக்காட்சியில் பேசிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் எதுவும் கூறவில்லை என்பதோடு, கடந்த வாரம் நடத்தப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை பாராட்டிப் பேசினார்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி சிரிய தலைநகர் டமஸ்கஸில் ஈரானிய துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே ஈரான் கடந்த வாரம் இஸ்ரேல் மீது 300க்கும் அதிகமான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி முதல் நேரடித் தாக்குதலாகவும் இருந்தது.

இஸ்ரேலின் எந்த ஒரு பதில் தாக்குதலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி முன்னதாக எச்சரித்திருந்தார்.

நேற்றைய தாக்குதல்கள் தொடர்பில் ஈரானிய செய்திகளில் இஸ்ரேல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனினும் இஸ்ரேலில் பாதுகாப்பு தொடர்ந்து உசார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதோடு ஜெரூசலத்தில் உள்ள அமெரிக்க தூதரக உழியர்களுக்கு அந்த நாடு பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதோடு அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT