Saturday, April 27, 2024
Home » இலங்கையில் அவதரித்து மக்களுக்கு அருளாசி வழங்கிய சிவஞானச் சித்தர் யோகர் சுவாமிகள்

இலங்கையில் அவதரித்து மக்களுக்கு அருளாசி வழங்கிய சிவஞானச் சித்தர் யோகர் சுவாமிகள்

சோமசுந்தரப் புலவரின் பேரன் சிவஞானச்சுடர் கலாநிதி பாரதி இளமுருகனார் எழுதிய நூல்

by mahesh
March 27, 2024 7:00 am 0 comment

சாதாரண மனிதர்களின் இறை வழிபாட்டை விட சித்தர் வழிபாடு தனித்துவமானது; ஆழமானது. அதனை ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்று சொல்வதின் பொருள் விளங்கினால் புரியும். சிவனே முதன்மைச் சித்தர் என்று கருதப்படுகின்றான். அவனுக்கு அடுத்த நிலை அகத்தியர். அதன் பின்னர் திருமூலர். அகத்தியர் தொடங்கி பதினெட்டுச் சித்தர்கள் தமிழில் இருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்று வரை கண்ணுக்குத் தெரிந்து, தெரியாமல் நூற்றுக்கணக்கான சித்தர்கள் பூமியிலே பிறந்திருக்கிறார்கள்.

இந்த சித்தர்கள் யார்? வாழுங் காலத்தில் தன்னலமற்று வாழ்ந்தவர்கள். இனம், சாதி பேதங்கள் கடந்து உலகில் உள்ள மக்கள் பசிப்பிணி அற்று நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள். அவர்கள் இறைவழிபாட்டை எளிமையாக்கிக் காட்டியவர்கள்; ஆடம்பரம், அலங்காரம் தேவையற்றது என்றவர்கள். எளிய வழியே ஏகனை காணும் வழி என்பதே அவர்களின் தத்துவம். இதனை திருமூலர்

‘யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம், பிறர்க்கு இன்னுரைதானே’
என்று திருமந்திரத்தில் (252) கூறியுள்ளார்.

‘இறைவனை ஒரு பச்சிலை கொண்டு வழிபடுங்கள். பசுவுக்கு ஒரு வாயளவு புல்‍லை உணவாகக் கொடுங்கள், சாப்பிடும்போது ஒரே ஒரு கைப்பிடி எடுத்து வறியவர்க்கு சாப்பிடக் கொடுங்கள். பிறரிடம் இனிமையான சொற்களைப் பேசுங்கள்’ என்கிறார் அவர். இது எல்லோரும் செய்யக்கூடிய எளிய வழிபாடு. இதுதான் சித்தர்களின் வழிபாடும் கூட.

தமிழகத்தில் வாழையடி வாழையாய் சித்தர்கள் மரபு தொடர்ந்து வந்ததைப் போல் ஈழத்திலும் சித்தர் மரபு இருந்தது. அந்த மரபை தொடங்கி வைத்தவர் கடையிற் சுவாமிகள். ஆனால் அவர் இலங்கையைச் சேர்ந்தவரில்லை. பெங்களுரிலே நீதித்துறையில் பணியாற்றி குருவிடம் தீட்சை பெற்று, அவர் ஆணைப்படி யாழ்.நகர் வந்து, யாழ்ப்பாணக் கடைவீதிகளில் கையில் குடையுடன் நடமாடி ‘கடையிற் சுவாமிகள்’ என போற்றப் பெற்றவர். இவரிடம் தீட்‍சை பெற்ற செல்லப்பச் சுவாமிகளே யோகர் சாமிகள் என அழைக்கப்படும் சிவயோகர் சுவாமிக்குத் தீட்சை கொடுத்தார்.

அந்த யோகர் சாமியின் வரலாற்றை, அவர் செய்த அற்புதங்களை, அவரின் ஆன்மீகச் சிந்தனைகளை விளக்குவதே, தங்கத்தாத்தா எனப் புகழ்பெற்ற சோமசுந்தரப் புலவரின் பேரன் சிவஞானச்சுடர், பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் எழுதிய ‘சிவஞானச்சித்தர்’ என்ற நூலாகும்.

பெரிய அளவு புத்தகமாய், அருமையான தாளில் இதுவரைக் காணக்கிடைக்காத புகைப்படங்களுடன் 314 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. சித்தர்களின் ஞான பரம்பரை ஒரு அறிமுகம், சித்தர்கள் இயற்றியருளும் அற்புதங்கள், சைவ சித்தாந்தம் ஒரு கண்ணோட்டம், ஈழத்தை அலங்கரித்த சித்தர்கள், கடையிற் சுவாமிகள், யோகர் சுவாமியின் குருவான செல்லப்பா சுவாமிகள், என்று பல தலைப்புகளில் தொடங்கும் நூல் யோகர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் அருளாசியையும், தீர்க்க தரிசனத்தையும் ஆவணமாய், அற்புதமாய் விளக்குகின்றது.

யோகர் சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் அவரைப் புரிந்து கொண்டவர்கள் சிலரே. அவர் தட்டேந்தி, உண்டியல் ஏந்தி பொருள் நாடி வாழ்ந்தவரல்ல, சிவ சிந்தனையோடு வாழ்ந்தவர். பார்வைக்கு எளியனாய் ஆன்மீக வலிமையோடு சுயநலமற்று பொதுநலம் ஏந்தியவர். அவர் எண்ணத்திலே கருத்திலே பொதிந்தவை, தொலைநோக்கு பார்வையில் எழுந்தவை. இருந்த இடத்தில் இருந்து உணர்ந்து, வரும் மனிதர்களின் தற்காலிக துயரத்தை நீக்கினார். நடத்தப் போவதைச் சொன்னார்.

யோகர் சுவாமியின் அருளாசி பெற்றவர்களின் துயரம் தீர்த்த கதைகள் பல எழுதப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் தமிழ் அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன், பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சோல்பரி பிரபுவின் புதல்வன் இராம்ஸ்போத்தம், கனடிய தூதுவர் டொக்டர் ஜேம்ஸ் ஜோர்ஜ், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வரி ஓவன் வின்சர் (நரிக்குட்டி சுவாமிகள்), அமெரிக்காவைச் சேர்ந்த றொபேட் ஹான்சன் (இவர் ஹவாய் தீவில் சைவ ஆதினம் நிறுவியவர்) ஆகியோர் சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றுஅவரின் மகிமை உணர்ந்தவர்களில் சிலர்.

மனிதனை ஆற்றுப்படுத்துவது ஆன்மீகம் மட்டுமல்ல அவனின் எண்ணங்கள் என்பதை, உரத்துச் சொன்னவர் ஈழத்துச் சித்தர் யோகர் சுவாமிகள். மனித பிறப்பிலே சாதியில்லை, யாவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்திச் சொன்ன ஒரு சம்பவத்தையும் நூலில் காணலாம்.

யோகர் சுவாமிகள் ஈழத்தில் பிறந்த சித்தர். அவர் சிவத்தை உணர்ந்த ஞானி. அவருக்குச் சிவஞானச் சித்தர் என்ற திருப்பெயர் பொருத்தமானது. நூலின் பெயரும் சிவஞானச் சித்தர். நூலை எழுதியவரின் தாத்தா சோமசுந்தரப் புலவர் எழுதிய ‘சிவயோகர் தோத்திரப் பாமாலை’ என்ற பெயரில் பாடிய பாடல்களில் அவரின் பெருமை, அற்புதம், அருளாசி ஆகியவற்றை சிறப்பாக வடித்துள்ளார். நேற்றைய தலைமுறை யோகர் சுவாமிகளின் ஆசி, அருள், கருணை மழையில் நனைந்த வரலாற்றைச் சொல்லும் இந்நூல், இன்றைய தலைமுறை கற்க வேண்டிய நூல் மட்டுமல்ல; இது யோகர் சுவாமி பற்றி எழுதப்பட்ட ஆவணம்.

மாத்தளை சோமு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT