Thursday, May 9, 2024
Home » கொழும்பில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பிற்கான இந்தியா – இலங்கை கூட்டு செயற்குழு கூட்டம்

கொழும்பில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பிற்கான இந்தியா – இலங்கை கூட்டு செயற்குழு கூட்டம்

by Rizwan Segu Mohideen
March 26, 2024 4:08 pm 0 comment

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பிற்கான இந்தியா-இலங்கை கூட்டு செயற்குழு கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் 2023 ஜூலை மாதம் கையொப்பமிடப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான கூட்டு செயற்குழுவின் (JWG) முதல் கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு இந்திய தரப்பில் இருந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ பூபிந்தர் சிங் பல்லா மற்றும் இலங்கை தரப்பில் இருந்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷனா ஜெயவர்தன ஆகியோர் தலைமை தாங்கினர். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜாவும் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய தூதுக்குழுவில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு, இந்திய மத்திய மின்சார ஆணைக்குழு மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்தியாவின் முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) உறுப்பினர்கள் 17 பேர் கொண்ட குழுவும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவுடன் இதில் பங்கேற்றனர். இலங்கைக் குழுவில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை மற்றும் வெளிவிவகார அமைச்சின் உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.

இந்த சந்திப்பின் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவின் சாதனைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசு வழங்கும் பொதுமக்களை மையப்படுத்திய திட்டங்கள், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் மற்றும் இந்தியாவின் எல்லை தாண்டிய மின்சார வர்த்தகம் குறித்து இந்திய பிரதிநிதிகள் விரிவான விளக்கத்தை அளித்தனர். இலங்கையின் மின்சாரத் துறையின் தற்போதைய நிலை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்களிப்பை இலங்கை தரப்பு எடுத்துரைத்தது. 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஊடாக 70% உற்பத்தி என்ற லட்சிய இலக்கை அடைவதற்கு இலங்கை அரசாங்கம் செயல்பட்டு வருவதால், இந்திய நிறுவனங்களின் முதலீடுகளுக்கு பரந்த வாய்ப்புகள் இருப்பதாக செயலாளர் தெரிவித்தார். இலங்கை அதிகாரிகளுக்கு முன்மொழிவுகள் மற்றும் பயிற்சிகளை மதிப்பீடு செய்வதற்கான திறன் மேம்பாட்டு ஆதரவை இந்திய அரசாங்கத்தால் நீட்டிக்கும் வாய்ப்பு தொடர்பாகவும் அவர் கருத்து முன்வைத்தார்.

தேசிய சூரிய சக்தி நிறுவனம், தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் போன்ற பிரதான இந்திய நிறுவனங்களில் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் சூரிய, காற்று, உயிரியல் வாயு ஆகிய துறைகளில் இலங்கை அரசாங்கத்திற்கு சாத்தியமான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க இந்திய தரப்பு ஒப்புக்கொண்டது.

இந்தியக் குழுவினர் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்ததோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தற்போதுள்ள ஒத்துழைப்பின் எல்லை மற்றும் அதை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.

இதே சமயம் “புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பதன் மூலம் இந்தியா-இலங்கை உறவுகளை மேம்படுத்துதல்” என்ற தொனிப்பொருளிலான வணிக சந்திப்பொன்றும் நடைபெற்றது. எரிசக்தி துறையில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த தொழில்துறை பிரதானிகள் இதில் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பில் குழு கலந்துரையாடலும் இந்த நிகழ்வின் போது நடைபெற்றது .

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் தலைமையிலான இந்திய தொழில்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழுவின் விஜயம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நெருக்கமான ஒத்துழைப்புக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT