Saturday, April 27, 2024
Home » குறைந்தபட்ச சம்பளம்: மாதாந்தம் ரூ.5000; நாளாந்தம் ரூ.200 இனால் அதிகரிப்பு

குறைந்தபட்ச சம்பளம்: மாதாந்தம் ரூ.5000; நாளாந்தம் ரூ.200 இனால் அதிகரிப்பு

- 64 பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி நீக்கம்

by Prashahini
March 26, 2024 3:47 pm 0 comment

– சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் கருத்திட்டம்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முடிவுகள்

பணியாளர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 12,500/- ரூபாவிலிருந்து 17,500/- ரூபாவாக 5,000/- ரூபாவால் அதிகரிப்பதற்கும் குறைந்தபட்ச தேசிய நாளாந்த சம்பளத்தை 500/- ரூபாவிலிருந்து 700/- ரூபா வரை 200/- ரூபாவால் அதிகரிப்பதற்கும்  தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய குறைந்தபட்ச வேதனம் 12,500/- ஆக விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் விதந்துரைகளின் பிரகாரம் நியமிக்கபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்தருநர்களையும் உட்சேர்த்து முத்தரப்பு உபகுழுவொன்றின் மூலம் குறித்த வேதனத்தை 17,500/- வரை அதிகரிப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க பணியாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. CODEGEN INNOVATIONS (PRIVATE) LIMITED மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இரண்டாம் நிலை வணிகமாகப் பெயரிடல்

மென்பொருள் தரவு விஞ்ஞானம், படைப்பாக்கம் மற்றும் வன்பொருள் விடயஞ்சார் துறைகளில் தொழிநுட்ப ரீதியான தீர்வுகளை வழங்குகின்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள CodeGen குழுமத்தின் அலகாக இயங்குகின்ற CODEGEN INNOVATIONS (PRIVATE) LIMITED இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனியாகும். குறித்த கம்பனி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மூலம் அங்கீகாரம் பெற்றவராக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இக்கம்பனி மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இரண்டாம் நிலை வணிகமாகப் பெயரிடுவதற்காக விண்ணப்பித்துள்ளது. கம்பனியானது 500,000 அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகவும், 05 வருடங்களாகும் போது அண்ணளவாக 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவதற்கும், குறித்த காலப்பகுதியில் கிட்டத்தட்ட 400 வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதனால், 2023 ஆண்டின் 02 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (மூலோபாய முக்கியத்துவம் கொண்ட வணிகத்திற்கு விடுவித்தல் அல்லது ஊக்குவிப்பு அளிப்புக்கள் தொடர்பான வழிகாட்டல்) ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த கம்பனியை விடுவித்தல் அல்லது ஊக்குவித்தல் கையளிப்புக்கான தகைமைகளைக் கொண்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, CODEGEN INNOVATIONS (PRIVATE) LIMITED இற்கு விடுவிப்பதற்கும் அல்லது ஊக்குவிப்பு கையளிப்புக்கும், அதற்கான விதியை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. இலங்கைக் கொடியின் கீழ் கப்பல்களைப் பதிவு செய்வதை ஊக்குவித்தல்

கப்பல் பதிவுகளை மேற்கொள்வது, உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு அதிகளவில் வெளிநாட்டு செலாவணி கிடைக்கின்ற முக்கிய வழியாக அமைவதுடன்,நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்கள் பலவற்றை உருவாக்குவதற்குமான ஆள்ளல்வளம் காணப்படுகின்றது. இலங்கைக் கொடியின் கீழ் கப்பல்களைப் பதிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக தகைமை கொண்;ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரல்களைப் பெறுவதற்கும், முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் மூலம் முன்மொழிவை மதிப்பீடு செய்து பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிப் பாடநெறி மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்தல்

ஒறுகொடவத்த இலங்கை – கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்பட்ட 2,900 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் நிர்மாணிக்கபட்டுள்ளதுடன், இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்; பாடநெறிகள் மற்றும் நிறுவனத்தில் காணப்படும் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிப்பை வழங்குவதற்கு கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. மேலும், 16 மாதகாலம் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் கீழ், மோட்டார் வாகன தொழிநுட்பம், உற்பத்தித் தொழிநுட்பம் – CNC, உருக்கு ஒட்டுத் தொழிநுட்பம், மின்னியல் தொழிநுட்பம், இலத்திரனியல் தொழிநுட்பம், தானியக்கவியல் மற்றும் றொபோ தொழிநுட்பம், திரவ அமுக்க தொழிநுட்பம், மெகாரொனிக் தொழிநுட்பம் உள்ளிட்ட அனைத்து பாடநெறிகளிலும் பொதுத் தேவைகளுக்காக வசதிகளை வழங்குவதே நோக்கமாக அமைகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பினர்களுக்கிடையே கையொப்பமிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும், வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உடன்பாடு கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் நெடுஞ்சாலைகள் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைத்தல்

நெடுஞ்சாலைகள் வலைப்பின்னல், நெடுஞ்சாலைகளுக்குச் சொந்தமான காணிகள், நெடுஞ்சாலைகளுக்கான கடன்கள் (உள்நாட்டு) மற்றும் ஏற்புடைய பணிக்குழாமினரை மிகவும் வணிக ரீதியாக முகாமைத்துவம் செய்வதற்கு இயலுமாகும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிலிருந்து வேறாக்கி சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு வழங்குவதற்காக 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அதற்கான செயற்பாட்டுத் திட்டத்திற்காக 2024.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நெடுஞ்சாலைகளின் நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் 2024.04.01 தொடக்கம் முறைசார்ந்த முகாமைத்துவ ஒப்பந்தத்தின் கீழ் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைப்பதற்கும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் கூட்டாக மேற்கொள்கின்ற சட்டம் மற்றும் நிதி ரீதியான சாத்தியவளக் கற்கையின் பின்னர் குறித்த அனைத்துச் சொத்துக்களும் 06 மாதகாலத்தில் சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டட் இற்கு ஒப்படைப்பதற்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் ஆண்டுதோறும் நடாத்துகின்ற சர்வதேச மாநாட்டை 2024 இல் இலங்கையில் நடாத்துதல்

உலகில் மிளகு உற்பத்தி செய்கின்ற பிரதான நாடுகள் இணைந்து 1972 ஆம் ஆண்டில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் கீழ் சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் எனும் பெயரில் சர்வதேச அமைப்பொன்று தாபிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் பிரதான நிரந்தர உறுப்பு நாடுகளாக இலங்கை, இந்தியா, இந்தோனிசியா, மலேசியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் செயற்படுகின்றன. இலங்கை 2002 ஆம் ஆண்டில் சர்வதேச மிளகு உற்பத்தி சமூகம் நிரந்தர அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1999, 2006, 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வருடாந்த சர்வதேச மாநாடுகள் எமது நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, மிளகு உற்பத்தித் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஆய்வுகளின் பெறுபேறுகளை உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளல், மரபு ரீதியான மற்றும் புதிய சந்தைகளுக்கான வேலைத்திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல், சர்வதேச வர்த்தகத்தில் இறக்குமதி வரி மற்றும் இறக்குமதி வரி அல்லாத தடைகளை தளர்த்துவதற்காக ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளல் போன்ற விடயங்கள் பற்றிய உடன்பாடுகளை எட்டும் நோக்கில் சர்வதேச மிளகு உற்பத்தி சமூகத்தின் 52 ஆவது சர்வதேச மாநாட்டை இவ்வாண்டு இலங்கையில் நடாத்துவதற்காக விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. 01 MW – 05 MW AC கொள்ளவு கொண்ட 70 MW கொள்ளவை நிறுவுவதற்காக சூரிய சக்தி வோல்டியாதா மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் கருத்திட்டம்

பதினொரு (11) மின் கட்டமைப்பு உபநிலையங்களில் 01 MW – 05 MW AC கொள்ளவு கொண்ட 70 ஆறு கொள்ளவை நிறுவுவதற்காக சூரிய சக்தி வோல்டியாதா மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் கருத்திட்டத்தின் கிழ் 20 வருடகால நடவடிக்கை காலப்பகுதியுடன் கூடிய நிர்மாணித்தல், உரித்துக் கொள்ளல் மற்றும் அமுல்படுத்தல் அடிப்படையில் நிர்மாணிப்பதற்காக 05 மின்கட்டமைப்பு உபநிலையங்களில் 51MW விநியோத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 2023.10.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 06 மின்கட்டமைப்பு உபநிலையங்களுக்கு 19MW விநியோகத்திற்கு முன்மொழிவுகள் மீண்டும் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரையின் பிரகாரம், அம்பாறை, ஹபரண, கொஸ்கம, குருநாகல் மற்றும் வெயாங்கொட ஆகிய மின்கட்டமைப்பு உபநிலையங்களுக்கான சூரிய சக்தி வோல்டியாதா மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்புடைய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 1962 ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக கட்டளையொன்றை சமர்ப்பித்தல்

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தீர்வை வரியை தளர்த்தும் வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக 2023.05.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2023.07.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் இறக்குமதி வரியை தளர்த்தும் வேலைத்திட்டத்தில் 6 ஆம் வகுதிக்கமைய, வகைப்படுத்தப்பட்டுள்ள 1,116 இயைபு முறைக் குறியீடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள சுங்க இறக்குமதி வரியின் முதலாவது ஆண்டுக்கான கட்டத்தை நீக்குவதை நடைமுறைப்படுத்துவதற்காக 1962 ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவான கட்டளையொன்று 2023.06.30 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த கட்டளைக்கான பாராளுமன்ற அங்கீகாரம் 2023.10.04 அன்று கிடைத்துள்ளது.

குறித்த தீர்வை வரி நீக்கல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக குறித்த வேலைத்திட்டத்தின் 6 ஆம் வகுதியின் வகைப்படுத்தப்பட்டுள்ள 1,222 இயைபு முறைக் குறியீடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள சுங்க இறக்குமதி வரியின் முதலாவது ஆண்டுக்கான கட்டத்தை நீக்குவதை நடைமுறைப்படுத்துவதற்காக 1962 ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவான கட்டளையொன்று 2024.01.04 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தல்

இருநூற்றுப்பத்து (210) இயைபு முறைக் குறியீடுகளின் (HS Code) கீழ் வகைப்படுத்தல்களுக்கான 64 பொருட்களை இறக்குமதி செய்யும் போது வசதியளிப்பதற்காக தனிக்கூட்டு வரி அறவீட்டுக்காக 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வரி அறவீட்டை நடைமுறைப்படுத்தும் போது மேலெழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளால் இவ்வரி அறவீட்டுச் சட்டத்தை இடைநிறுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டத்தை இடைநிறுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைச்செயல் தடுப்புச் சட்டத்தை மீளாக்கம் செய்தல்

சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைச்செயல் தடுப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக 2023.06.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும்,குறித்த திருத்தங்கள் மூலம் சட்டத்தின் பிரிவுகள் அதிகளவில் திருத்தப்படவுள்ளமையால், பொது மக்களுக்கு இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக தற்போது வலுவாக்கத்திலுள்ள சட்டத்தை இரத்துச் செய்து, ஏற்புடைய அனைத்துத் திருத்தங்களையும் உட்சேர்த்து இச்சட்டத்தின் தற்போதைய பெயரின் கீழ் புதிய சட்டமொன்றை உருவாக்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் புதிய சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கைக்கான தேசிய டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம்

2048 ஆம் ஆண்டாகும் போது உயர்ந்த வருமானம் ஈட்டும் பொருளாதாரமாக மாற்றுகின்ற தொலைநோக்கை அடைவதற்காகவும், எதிர்பார்க்கின் பெறுபேறுகளை அடைவதற்காகவும் தேசிய டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் மற்றும் அதன் அமுலாக்கல் திட்டத்திற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடனும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற் சபைகளின் ஆலோசனையுடன் “இலங்கைக்கான டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் – 2030” தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. பொருளாதார நிலைமாற்று சட்டமூலம்

பொருளாதார நிலைமாற்று சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2024.03.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலைமாற்றம் தொடர்பான தேசிய கொள்கையின் பிரதான நோக்கங்களை உள்வாங்கி, குறித்த நோக்கத்தை அடைவதற்காக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பொருளாதார ஆணைக்குழு, இலங்கை முதலீட்டு வலயம், சர்வதேச வர்த்தக அலுவலகம், இலங்கை பொருளியல் மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனம் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழு போன்ற பிரதான நிறுவனங்களை தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேவையான ஏற்பாடுகளை உட்சேர்த்து பொருளாதார நிலைமாற்று சட்டத்திற்கான அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்களை உட்சேர்த்து முறையான சட்டமூலத்தைத் துரிதமாகத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT