Saturday, April 27, 2024
Home » குழந்தைகளிடம் சிறுவயதில் இருந்தே கற்கும் ஆற்றலை தூண்டுவது எவ்வாறு?

குழந்தைகளிடம் சிறுவயதில் இருந்தே கற்கும் ஆற்றலை தூண்டுவது எவ்வாறு?

-ஓர் உளவியல் பார்வை

by sachintha
March 26, 2024 3:34 pm 0 comment

சிறுகுழந்தைகள் என்று கூறும்போதே நம் கண்முன் தோன்றுவது கள்ளம் கபடமற்ற வஞ்சனைகள் அற்ற சிரித்த முகம்தான். இக்குழந்தைகளின் எதிர்காலம் தாயின் கருவறையில் இதயம் துடிக்கத் தொடங்கும் நாளில் இருந்து ஆரம்பமாகிறது. பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் வளரும் குழந்தை தனது தாயிடம் இருந்து தனக்குத் தேவையானஅனைத்தையும் பெற்று வளர்ந்து இவ்வுலகை அடைகிறது.

பிறப்புக்குப் பின்னர் அக்குழந்தை உலகத்தை தனது புலன்களால் உணரத் தொடங்குகிறது. ஒரு பிள்ளை ஐந்து வயதில் பாடசாலைக்குச் சென்றாலும் பிறந்தது முதல் தாயின் மடியில் இருந்தே கற்றுக் கொள்கிறது. அனைத்துக் குழந்தைகளும் ஒன்றுபோலக் காணப்பட்டாலும், பாடசாலைக் கல்வி ஆரம்பிக்கப்பட்டதும் ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு மட்டத்தில் கல்வி அறிவில் காணப்படுவதை நாம் காண்கிறோம். இதற்கு அடிப்படை மூலகாரணம் வீட்டுச் சூழலில் பிள்ளைகளுக்கு அடிப்படை அறிவு கிடைக்காததால் ஆகும்.

ஒரு குழந்தையின் மூளைவளர்ச்சியில் முக்கிய கட்டம் முதல் மூன்று வருடங்கள் ஆகும். முதல் மூன்று வருடங்களில் மனிதமூளையின் 70 வீதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. ஐந்து வயது வரையுள்ள அடுத்த இரண்டு வருடங்களில் மூளையின் வளர்ச்சி அடைந்த கலங்கள் விரிவடைகின்றன. அந்நேரத்தில்தான் ஒரு பிள்ளை பாடசாலையில் சேர்க்கப்படுகிறது. ஏற்கனவே விரிவடைந்த அவ்விடத்தில் இருந்துதான் அப்பிள்ளை பாடசாலை கலைத்திட்டத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.

அவ்வாறு செல்லும் போது ஏற்கனவே 3,5 வயது வரை வளர்ச்சியடைந்த பிள்ளையின் மூளையில் பதிவாகியிருக்கும் சொற்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பிள்ளையின் அறிவு விருத்தியடைகிறது என்பது உளவியல்ரீதியான உண்மை ஆகும். இதில் இருந்து குழந்தைப் பருவகாலத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

ஒரு மனிதன் பெரியவனானதும் அவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பெற்றோர் காணும் கனவை ஐந்து வயதுக்குள் பிள்ளையின் உள்ளத்தில் விதைத்திட வேண்டும். பிள்ளைகளுடன் பெற்றோர் மனம் விட்டுக் கதைக்க வேண்டும்.

குழந்தையின் உள்ளத்தில் நேர்மறை எண்ணங்களை மட்டுமே விதைக்க வேண்டும். நல்லவை, கெட்டவை, பிறரை மதித்தல், நற்பழக்கவழக்கங்கள் போன்றவற்றை பிள்ளையின் பிஞ்சுமனதில் விதைத்திட வேண்டும்.

பிள்ளைகள் எப்போதும் ஒன்றைப் பார்த்து அதைப் பின்பற்றுபவர்களாகவே உள்ளனர்.(போலக் கற்றல்). எனவே வீட்டில் உள்ளோரின் நடத்தைகள் பிள்ளையின் நடத்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனது பிள்ளைக்கு ஐந்து வயதாகி விட்டதே, இப்போது என்ன செய்வது என்று சிந்திப்பவர்களுக்கும் பதில் உண்டு. 5_7 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் இலகுவில் புதியவற்றைக் கற்கக் கூடியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அதிகமாக புதிய சொற்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

சிறுவயதில் இருந்தே

வாசிப்புத்திறனை தூண்டும் முறை:

ஏற்கனவே கூறியது போல மூன்று வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பொருட்களின் பெயர்கள், படங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் ஆங்கிலம், தமிழ், சிங்களம், மதரீதியான எழுத்துகள், பத்து வரையான எண்கள் என்று ஒவ்வொரு எழுத்தையும் பார்த்தால் சொல்லக் கூடியவாறு படங்களைப் போல் எழுத்துகளை அறிமுகம் செய்வது பிள்ளையின் எதிர்கால வாசிப்புத்திறன் வளர்ச்சியில் பாரிய பங்களிப்புச் செய்கிறது.

இவ்வாறு அறிமுகம் செய்யும் போது ஒரு கிழமைக்கு ஒரு எழுத்து என்ற வீதம் அறிமுகம் செய்யலாம். ஒரு எழுத்தை பல நாட்களுக்கு இடையிடையே சொல்லிக் கொடுக்க வேண்டும். பிள்ளை விளையாடும் போதும், உறங்கச் செல்லும் போதும், சாப்பிடும் போதும் என்று ஒவ்வொரு நேரத்திலும் ஒரு நாளைக்கு குறைந்தது 20 முறையேனும் அவ்வெழுத்தை நினைவூட்ட வேண்டும். அவ்வாறு செய்யும் போது குழந்தையின் ஆழ்மனதில் அது பதிந்து விடுகிறது. நாம் நினைத்தாலும் அதை மறக்க வைக்க முடியாது. இவ்வாறு சிறுவயதில் இருந்து அனைத்து மொழிகளையும் குழந்தை விளையாடிக் கொண்டே கற்கும் சூழலை பெற்றோர் உருவாக்க வேண்டும்.

பிள்ளைகளுக்கு இலகுவில்

மனனம் செய்ய வைப்பது எவ்வாறு?

பிள்ளைகளுக்கு பாடம் சார்ந்த விடயங்கள், மதம் சார்ந்த விடயங்கள், பாடல்கள், புதிய சொற்கள் என்பவற்றை மனனம் செய்ய வைப்பதில் பெற்றோர் பெரிதும் சிரமப்படுகிறார்கள். அவ்வாறு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மனனமிட வைக்க வேண்டிய விடயத்தை பலமுறை சொல்லிக் கொடுக்க வேண்டும். முதல் நாளில் எதுவுமே மனனம் ஆகாதது போல் இருக்கும். இரண்டாம் நாளும் அதையே பலமுறை இடைக்கிடை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு நான்காவது நாளில் பிள்ளை சிலவற்றை விட்டு விட்டு சொல்லும்.

ஒரு கிழமைக்குள் குறித்த விடயத்தை பிள்ளையால் மனனமிட முடியும். ஒவ்வொரு நாளும் இடைக்கிடை அதனை 20_-30 முறையேனும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு பிள்ளை அதை திரும்பத் திரும்ப கூறும்போது பிள்ளையின் ஆழ்மனதில் மெதுமெதுவாக அது பதிந்து விடுகிறது.

கற்றலில் ஊக்கப்படுத்தல் Motivation என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். அதாவது பெரியவர்களுக்கே ஒரு விடயத்தை செய்யும் போது ஒரு எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும். அவ்வாறு இருக்கையில் சிறுகுழந்தைகளிடம் தாம் செய்யும் வேலைகளை ஏனையோர் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்து வருகிறது. அவர்கள் செய்யும் ஒவ்வொரு நல்லசெயலையும் நாம் கட்டாயம் அவ்வப்போது பாராட்ட வேண்டும், புகழ வேண்டும். நாம் அன்றாடம் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் உணவுப் பொருட்களை மற்றும் விளையாட்டுப் பொருட்களை குறிப்பிட்ட ஒரு விடயத்தை படித்தால் மனனமிட்டால் தருவதாகக் கூறி பிள்ளைகளை ஊக்கப்படுத்தலாம். அதனால் அப்பொருள்களைப் பற்றிய பெறுமதியும் பிள்ளைக்கு ஏற்படும்.பெற்றோரிடம் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பொருளை வாங்கிக் கொடுக்கும் போது பல முறை அப்பொருளை வாங்க சிரமப்படுவதாகக் கூறியே வாங்கிக் கொடுக்க வேண்டும்.

குழந்தையின் எழுத்தாற்றலை

வளர்க்கத் தூண்டும் முறைகள்:

குழந்தைக்கு 2,3 வயது இருக்கும் போது பென்சிலால், கலரால் தாராளமாகக் கிறுக்கக் கொடுக்க வேண்டும். தாள்களை கிழிக்கவும் உருண்டையாக்கவும் கத்தரிக்கோலால் பிடித்து வெட்டவும், கிளே விளையாடவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவை போன்ற விரல்களுக்கு பயிற்சியளிக்கும் செயற்பாடுகள் மூலமாகவே விரல்கள் வலுப்பெற்று பாடசாலை செல்லும் போது மிக அழகாகவும் நுணுக்கமாக பிள்ளைகள் எழுதப் பழகிக் கொள்வர்.

பிள்ளைகளுக்கு நாம் செய்ய வேண்டாம் என்று கூறும் விடயத்தை நாம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பிள்ளைகளுக்கு முன்னிலையில் பெற்றோர் சண்டை பிடிப்பது கூடாது. பிள்ளைக்கு முன்னிலையில் நாம் பொய் பேசுவது, ஏனையோரைப் பற்றி குறை பேசுவது கூடாது. பிள்ளைகளிடம் தொலைபேசியை கொடுத்து விட்டு மிகப்பயங்கரமான விதத்தில் பிள்ளையின் அறிவையும் ஆளுமையையும் எம்மை அறியாமலேயே அழித்து விடுகிறோம். கார்டூன்களில் போடப்படும் உண்மைக்கும் புறம்பான வீடியோக்கள் நமது பிஞ்சு குழந்தைகளின் சிந்தனையை மழுங்கடித்து விடுகின்றன.

உதாரணமாக மிருகங்கள் பேசுவது, மனிதன் பறப்பது, வித்தைகள்,போன்றன பிள்ளைகளின் அறிவை இல்லாமல் செய்வதை பெரியவர்கள் உணர்வதில்லை.

குழந்தைகள் வீட்டில் சரியாக வளர்க்கப்படும் போதுதான் அவர்களால் முறையாகப் பயணிக்க முடிகிறது.

எம்.வை.எப்.சியாமா…

(ஆசிரியை) BA (hons), MA (reading) spcl in psychology

இலுக்வத்தை மு.மகா.வித்தியாலயம்

பிலிமாடதலாவ

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT