Thursday, May 9, 2024
Home » மகாபாரதத்தில், கண்ணன் தூது!

மகாபாரதத்தில், கண்ணன் தூது!

by damith
March 25, 2024 11:57 am 0 comment

இதன் ஆரம்பத்தில் ஒரு பெரிய பாடம் கற்பிக்கப்படுகிறது. தேரேறி கிருஷ்ணன் தூது செல்கிறான். அஸ்தனாபுரி எல்லையில் தேரை நிறுத்திவிட்டு, ஊருக்குள் நடந்து செல்கிறான். எல்லோரும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று வணங்குகிறார்கள். எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மாடி வீடுகள். இது யார் வீடு, இது யார் வீடு என்று கேட்டுக்கொண்டே நடக்கிறான் கிருஷ்ணன். பீஷ்மர் தன் வீட்டிற்கு வெளியே வந்து கிருஷ்ணா இது என் வீடு. என் வீட்டிற்கு வந்து தங்கலாமே என்றழைக்கிறார். வருகிறேன், வருகிறேன் உங்கள் வீட்டிற்கு வராமல் வேறெங்கு போகப்போகிறேன் என்று கூறி தொடர்ந்து நடக்கிறார் கிருஷ்ணர். துரோணாச்சாரியார், தன் வீட்டிற்கு வெளியே வந்து கிருஷ்ணா இது என் வீடு. என் வீட்டிற்கு வந்து தங்கலாமே என்றழைக்கிறார். வருகிறேன், வருகிறேன் உங்கள் வீட்டிற்கு வராமல் வேறெங்கு போகப்போகிறேன் என்று கூறி தொடர்ந்து நடக்கிறார் கிருஷ்ணர். கிருபாச்சாரியார், தன் வீட்டிற்கு வெளியே வந்து கிருஷ்ணா இது என் வீடு. என் வீட்டிற்கு வந்து தங்கலாமே என்றழைக்கிறார். வருகிறேன், வருகிறேன் உங்கள் வீட்டிற்கு வராமல் வேறெங்கு போகப்போகிறேன் என்று கூறி தொடர்ந்து நடக்கிறார் கிருஷ்ணர். சொல்கிறாரே தவிர யார் வீட்டிற்குள்ளும் நுழையவில்லை கிருஷ்ணன். மாடமாளிகைகளுக்கு நடுவே ஒரு ஓலைக்குடிசை. அங்கே நின்று கிருஷ்ணன் கேட்டான் இது யாருடைய வீடு? உள்ளே இருந்து விதுரர் வந்து சொன்னார், கிருஷ்ணா இது உன்னுடைய வீடு. ஓ அஸ்தனாபுரத்தில் எனக்கென்று அரையடி மண் கூட இல்லையென்று எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கென்று வீடே இருக்கிறதா… எனக்கென்று வீடிருக்கும்போது, நான் துரோணர் வீட்டிலும், பீஷ்மர் வீட்டிலும் தங்கினால் மரியாதை இல்லை அல்லவா, நான் என் வீட்டிற்கு போகிறேன் என்று சொல்லி கிருஷ்ணர் விதுரர் வீட்டிற்குள் சென்றுவிட்டாராம். எனது என்கிற எண்ணம் இருக்கக்கூடாது. நான் என்கிற அகங்காரம், மமகாரம் இருக்கக்கூடாது. எல்லாம் இறைவனுடையது, பகவானுடையது எனும் எண்ணம் எங்கே யாரிடம் இருக்கிறதோ அங்கே பகவான் அனுக்கிரகம் நடைபெறுகிறது!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT