Sunday, May 19, 2024
Home » தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர் சுவாமி விபுலாநந்தர்

தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர் சுவாமி விபுலாநந்தர்

by damith
May 6, 2024 6:00 am 0 comment

சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.

பிறப்பு: சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம், 27 ஆம் திகதி சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார்.

கல்வி: இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார்.ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.

ஆசிரியப் பணி: கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.

துறவறம்: மனதை ஈர்த்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன்.

சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும்,வேதாந்த கேசரி (Vedanta Kesari) என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், ‘மதங்க சூளாமணி’ என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

இசை ஆராய்ச்சி: 1942 ஆகஸ்த்து 1 மதுரை முத்தமிழ் மாநாட்டில் விபுலாநந்தர்செட்டி நாட்டரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் ‘பிரபுத்த பாரதம்’ (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய ‘யாழ் நூல்’ உருவாக்கம் பெற்றது.1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களைச் சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT