Saturday, April 27, 2024
Home » தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உலக நீர் தினம்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உலக நீர் தினம்

by Gayan Abeykoon
March 22, 2024 1:00 am 0 comment

க்கிய நாடுகள் சபை சில தினங்களை விஷேட தினங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்தந்தத் தினங்களில் அந்தந்த விடயங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எதிர்பார்ப்பிலேயே இத்தினங்கள் பிரகடனப்பட்டு இருக்கின்றன.

அந்த வகையில் 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் நீர் தினம் அனுஷ்டிப்பது பற்றிய யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி ஐ.நா பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாகப் பிரகடனப்படுத்தியது. அதற்கேற்ப 1993 முதல் உலக நீர் தினம் ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழும் வருடா வருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.

மனிதன் நீர்வளத்தை வீண்விரயமின்றி தன் தேவைகளுக்காகத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டியவனாக உள்ளான். ஆழ்கடலில் வாழும் உயிரினங்களுக்கும் பாலைவனத்தில் வாழும் உயிரினங்களுக்கும் நீரின்றி வாழ்க்கை இல்லை. நீரே பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. பூமியின் மேற்பரப்பு 71 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது. அதில் 0.001 சதவீத நீர் வளிமண்டலத்தில் மிதக்கிறது. 68 சதவீத நன்னீர் பனிக்கட்டியாக உறைந்திருக்கிறது. எஞ்சியுள்ள 30 சதவீத நீர் நிலக்கீழ் நீராகக் காணப்படுகிறது. எஞ்சிய 2 சதவீத நீர்தான் நன்னீர் ஏரி, ஆறு, ஓடை, நிலத்தடிநீராக இருக்கிறது.

இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பிடித்துள்ளது. அந்தளவுக்கு நீரின் தேவை இன்று அதிகரித்துள்ளது.

உணவு உடை இல்லை என்றால் அவற்றை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நீர் இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்யவே முடியாது. நீர் உயிரின் ஆதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகில் உயிருள்ள ஜீவன்கள் இருக்காது.

நீரின் பங்களிப்பு இல்லாமல் உடலில் இயக்கம் இருக்காது. குருதிக் கலங்களுக்கு தேவையான உயிர்ச்சத்துகளைக் கொண்டு செல்கின்ற அதேவேளையில், உடலில் சேரும் கழிவுகளை நீர்தான்​ வெளியேற்றுகிறது. உடலின் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருப்பதும் மூளையும் முதுகெலும்பும் அதிர்ச்சியால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதும் நீரால்தான்.

அதனால்தான் திருவள்ளுவர், ‘நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும், வானின்று அமையாது ஒழுக்கு’ என்றுள்ளார். நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் நிலை பெற்று வாழ முடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்குகின்ற மழை இல்லையென்றால் இவ்வுலகில் எந்த ஜீவராசிகளும் வாழ்ந்திட முடியாது. அதுதான் உண்மை.

இருந்த போதிலும் நீரின் முக்கியத்துவம் உணரப்படாத நிலைமையை மக்கள் மத்தியில் பரவலாகக் காண முடிகிறது. எவ்வித பற்றாக்குறையும் இன்றி தண்ணீர் கிடைக்கப்பெறுவதன் வெளிப்பாடே இது. இதன் விளைவாக கழிவுகள் கொட்டப்பட்டு தண்ணீர் அசுத்தப்படுத்தப்படுவதும் வீண்விரயம் செய்யப்படுவதும் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகிறது. அத்தோடு நீர் ஆதாரங்களும் மனித தேவைகளுக்காக அழிக்கப்பட்டு அவற்றில் கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன.

அதேநேரம் நீரின் முக்கிய ஆதாரமாக விளங்கும் காடுகளையும் மனிதன் தன் தேவைகளுக்காக அழித்து வருகின்றான். இவற்றின் விளைவாக நீர் அருகிவிடக்கூடிய அபாயமும் நிலவுகின்றது.

மழைநீர் நிலத்தினுள் செல்வது அவசியம். அத்தோடு நீர்நிலைகளின் நீர்மட்டமும் உயர வேண்டும். அப்போதுதான் அப்பிரதேசத்திலுள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயரக்கூடியதாக இருக்கும். ஆனால் கொங்கிறீட் வீதிகளும், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் குப்பைகளும் நாடெங்கிலும் பரவலாக அதிகரித்துள்ளன. அவை மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுப்பவையாக அமைந்துள்ளன. அதனால் நீர்புக முடியாத தடுப்பான்கள் போன்று பரவியுள்ள பிளஸ்ரிக், பொலித்தீன் கழிவுகளை ஒழுங்குமுறையாக அப்புறப்படுத்துவதிலும் கவனம் வேண்டும்.

தற்போது எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி தாராளமாக தண்ணீர் கிடைக்கப் பெறலாம். அதன் விளைவாக தண்ணீரின் முக்கியத்துவதை உணர்ந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஆனால் தண்ணீர் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்துள்ள நாடுகளும் பிரதேசங்களும் தண்ணீரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்ந்துள்ளளன.

ஆகவே நீர் வளத்தைப் பேணிப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT