Thursday, May 2, 2024
Home » இலங்கைக்கு நன்மை பயக்கும் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்

இலங்கைக்கு நன்மை பயக்கும் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம்

by Gayan Abeykoon
April 19, 2024 1:08 am 0 comment

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று வரும் இலங்கையை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான வேலைத்திட்டங்கள் பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்வேலைத்திட்டங்கள் பயனளிக்கவும் ஆரம்பித்துள்ளன.

நாடு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. மக்களும் பல்வேறுவிதமான பாதிப்புகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்தார்கள்.

அதே ஆண்டின் ஜுலை மாதப் பிற்பகுதியில் நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான பொருளாதார வீழ்ச்சி நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஏற்பட்டு விடக்கூடாது. அதற்கு அதற்கு இடமளிக்கவும் முடியாது என்பவற்றை இலக்காகக் கொண்டு உறுதியான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை ஆரம்பித்தார்.

அந்த வகையில் முதலீட்டு ஊக்குவிப்பு திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. இலங்கை போன்ற நாடொன்றின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முதலீடு மிகவும் அவசியம். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் இன்றி முன்னேற்றப்பாதையில் பயணிப்பது என்பது சாத்தியமற்ற காரியமாகும்.

இந்தப் பின்புலத்தில்தான் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஜே.ஆர். ஜயவர்தன சுதந்திர வர்த்தக வலயத் திட்டத்தை 1978 இல் இலங்கைக்கு அறிமுகப்படுத்தினார். அதன் ஊடாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் முதன் முதலாக நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு பல நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டன. அது புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் வலயமாக மாத்திரமல்லாமல் நாட்டுக்கு வருடா வருடம் அந்நிய செலாவணியை ஈட்டிவரும் நிலையமாகவும் அமைந்துள்ளது.

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் ஏற்றப்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து பியகம, கொக்கல உள்ளிட்ட பல இடங்களிலும் முதலீ்ட்டு வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த முதலீட்டு வலயங்களுக்கும் முதலீடுகள் வந்து சேர்ந்தன.

இவ்வாறான பின்னணியில், நாட்டில் நிலைபேறான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ள தற்போதைய சூழலில் முதலீடுகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்கு இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதை இலக்காகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் பெரிதும் உதவக்கூடியதாக அமைந்துள்ளது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து இலங்கை பெற்றுக்கொள்ளும் முதலீடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடாகும்.

இவ்வாறான சூழலில், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டிருப்பதாவது, ‘2023 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க முதலீடுகளை நாடு பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடுகளாக அதிகரித்துக் கிடைக்கப்பெற்றது. அதனால் இவ்வாண்டு இது 4 பில்லியன் முதல் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றுள்ளார்.

உண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் உடன்படிக்கையானது, இலங்கை தொடர்பில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்புக்களையும் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளன. இது வெளிப்படையானது. முதலீடுகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

அதேநேரம் இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நாட்டின் ஏனைய துறைகளிலும் முன்னேற்றங்கள் வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக உல்லாசப் பயணத்துறை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்நிலையில் இலங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே கடந்த மார்ச் 31 ஆம் திகதி வரையும் சீனா, ரஷ்யா, இந்தியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இலவச விஸாத் திட்டம் முன்னோடித்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறான நிலையில் இத்திட்டத்தை மேலும் 50 நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை இவ்வாறிருக்க, இலங்கையை முதலீட்டு வலயமாக அறிவிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இந்நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு இந்த வேலைத்திட்டங்கள் பாரிய பங்களிப்புக்களை நல்கும். அதன் ஊடாக நாட்டில் கிட்டிய எதிர்காலத்தில் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும். அது தொடர்பில் பாரிய நம்பிக்கைகளும் ஏற்பட்டுள்ளன. அதுவே நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT