Tuesday, April 30, 2024
Home » பெற்றோருக்கு நன்மை செய்வோம்

பெற்றோருக்கு நன்மை செய்வோம்

by sachintha
February 9, 2024 12:24 pm 0 comment

பெற்றோருக்கு நன்மை செய்வதும், நன்மைகள் பல கிடைக்கும் நற்செயல் தான். பெற்றோருக்குச் செய்யும் நன்மை அது அவர்களுக்கானது அல்ல, அது நமக்கே திரும்பவும் கிடைக்கும் நன்மையாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் ஆன்மிகம் என்பது இறைவனுடன் மட்டும் தொடர்பில் இருப்பது அல்ல. பெற்றோரின் தொடர்பில் நிலைத்திருப்பதும் ஆன்மிகம் தான். பெற்றோருக்கு பணிவிடை செய்வதும் அவர்களிடம் பணிந்து நடப்பதும் அவர்களுக்காக அர்ப்பணிப்புடன் நடந்து கொள்வதும் அவர்களது வார்த்தைகளுக்கு கட்டுப்படுவதும் அவர்களுக்கு ஊழியம் செய்வதும் இறைஊழியம் தான்.

பெற்றோருக்கு நன்மை புரியும்படி அல் குர்ஆனில் இறைவன் குறிப்பிட்டிருக்கிறான். ‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (அல் குர்ஆன் 4:36).

‘தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.’

(அல் குர்ஆன் 46:15).

‘பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது’ (அல் குர்ஆன் 31:14)

இறைவன் விதித்த கடமைகளில் மிகச் சிறந்ததும், முதல் நிலை பெறுவதும் தொழுகைதான். அந்தத் தொழுகைக்கு பிறகு சிறந்த செயல், பெற்றோருக்கு நன்மை புரிவதுதான். இதை உணர்த்தும் விதமாக பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது.

இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார், நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறைவனுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?’ என்று கேட்டேன். அதற்கு நபிகளார் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது’ என்று பதில் கூறினார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டதற்கு ‘இறை வழியில் அறப்போர் புரிவது’ என்று கூறினார்கள்’. (ஆதாரம்: புஹாரி)

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே, நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உன் தந்தை’ என்றார்கள்’. (ஆதாரம்: புஹாரி)

இந்நபிமொழியின் படி, முக்கிய மூன்று இடங்களை தாய் பெற்றுக்கொள்கிறார். தந்தை நான்காவது இடத்தை பெறுகிறார். குழந்தைகளுக்காக தாய் மூன்று விதமான தியாகங்களை செய்கிறாள். அவற்றில் ஒன்று குழந்தையை பத்து மாதங்கள் தமது கருவில் சுமந்தது. மற்றையது தன் உயிர் கொடுத்து குழந்தையை பிரசவித்தது. மூன்றாவது, இரண்டாண்டுகள் தமது உதிரத்தையே பாலாக மாற்றி அமுதூட்டியது. இந்த மூன்று விதமான கட்டங்களை தாய் வெகு சிரமத்திற்கு மேல் சிரமப்பட்டு கடந்து செல்வதால் அவளுக்கு இவ்வாறான சிறப்பு கிடைக்கப்பெறுகிறது.

எனினும் தாயின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல், தந்தையின் தியாகமும் குழந்தைகளை சூழ்ந்துள்ளது. தாயின் தியாகம் முப்பது மாதங்கள் என்றால் தந்தையின் தியாகம் பல வருடங்களாக நீண்டு செல்கிறது.

குழந்தைகளுக்காக தந்தை மாடாக உழைத்து, ஓடாய் தேய்வது, குழந்தை உயரச் செல்லும் படிக்கட்டுகளாக தனது உடலையே அமைப்பது, தன்னை விட உயர்வான இடத்தை அடைய தனது தலைக்கு மேலே குழந்தையை உயர்த்திப் பிடிப்பது போன்ற தந்தையின் வலிகள் நிறைந்த தியாகங்களை எந்த தராசிலும் அளந்து விட முடியாது. பல கிளைகளை ஒரு வேர்தான் தாங்கிப் பிடிக்கிறது. அது என்றுமே மறைந்துதான் இருக்கும். அந்த வேர் தான் தந்தை. குழந்தைகளின் வளர்ச்சியின் அடித்தளம்தான் தந்தை. அவரையும் இஸ்லாம் தனியாகவும் கௌரவிக்கிறது.

ஒரு தடவை ஜாஹிமா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைவனின் தூதரே, நான் அறப்போருக்குச் செல்ல நாடி, உங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்’ என்று கூறினார். உடனே நபியவர்கள் ‘உனக்கு தாய் (உயிருடன்) உண்டா?’ என்று கேட்க, அவர் ‘ஆம்’, என்றார். ‘அப்படியானால், உனது தாயைப் (அவருக்கு பணி விடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக்கொள். நிச்சயமாக சொர்க்கம் அவளுடைய இருபாதங்களின் கீழ்தான் உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

பெற்றோர் இணை வைப்பவராக இருந்தாலும் உலக விஷயங்களில் அவர்களுக்கு உடன்பட்டு, உறவாடி மகிழ வேண்டும். மார்க்கத்திற்கு முரணாக நடக்குமாறு உத்தரவிட்டால் அதை மட்டும் கேட்க வேண்டியதில்லை. இது குறித்து அல் குர்ஆன், ‘ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்வில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக்கொள். என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று’ (31:15) என்றுள்ளது.

இவ்வசனத்தின் படி பெற்றோரிடம் உறவாடுவதற்கும், நன்மை புரிவதற்கும் மதம் தடையாக வரக்கூடாது. பெற்றோருக்கு எந்தவிதத்தில் எல்லாம் நன்மையும், உதவியும் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யவேண்டும். அதனால் பெற்றோருக்கு நன்மைகள் செய்வதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT