விளையாட்டால் அரசியல் அதிர்கிறதா அல்லது விளையாட்டாக இலங்கை அரசியல் அதிர்கிறதா? இதுதான், இலங்கையின் நடப்பு விவகாரம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதமில்லாமல் பாராளுமன்றத்தில் எல்லோரும் இணங்கியதால் வந்துள்ள சந்தேகமிது. நாட்டில் இவ்வாறான ஒன்றுபடல்கள் எட்டாக்கனிதான். இப்போது, எட்டும் தூரத்தில் கனிகள் பழுத்துள்ளதே எதற்காக? ஆட்சியதிகாரத்தை தீர்மானிப்பது வாக்காளர்களா அல்லது பணக்காரர்களா? என்ற குழப்பம்போல் குளறுபடியாக உள்ள விவகாரங்கள் இவை. ஶ்ரீலங்கா கிரிக்கெட் இவ்வளவு ஆழத்துக்கு வேரூன்றியுள்ளதை நினைக்கையில் வியர்க்கிறது.
விளையாட்டு வீரர்கள் பெயரில் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு ஹீரோ இருக்குமளவுக்கு நமது நாட்டில் விளையாட்டுக்கு மவுசு. இதிலும் ஒருபடி மேலுள்ளது கிரிக்கெட்டின் பிடிப்பு. உலகக் கிண்ணம், ரீ- 20, ஒருநாள் போட்டி மற்றும் ஐ.பீ.எல். போட்டிக் காலங்களில் வீடுகள் களைகட்டுவதும், வீதிகள் தோறும் திரைகளில் போட்டிகளை கண்டுகளிக்க மக்கள் திரள்வதிலிருந்தும் இது புரிகிறது. இந்த ரசனைக்கு நாடு, வீடு, நகர, கிராம வேறுபாடுகளிருக்காது. ஏன், வயது மற்றும் ஆண், பெண் என்ற பால் வேறுபாடுகளும் கிரிக்கெட்டின் ரசனைகளில் இல்லை. அரசியல்வாதிகள் இதை நன்குணர்ந்துள்ளனர். இதனால்தான், இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் ஊழல்களை வெளிக்கொணர ஒன்றுபட்டுள்ளனர்.
2018 முதல் 2023 வரையான காலப்பகுதியிலான இலங்கை கிரிக்கெட் சபையின் கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு, விளையாட்டுத் துறை அமைச்சர் கோரியதால் வந்த விவகாரம் இன்று விஸ்வரூபமாகிவிட்டது. பாராளுமன்றம் கோரினாலன்றி ஐந்து வருடகால கணக்கறிக்கையை தர முடியாதென மறுத்த இலங்கை கிரிக்கெட் சபை, ஓரிரு வருடங்களின் அறிக்கைகளைத் தருவதாகவே ஏற்றுக்கொண்டது. இதை பகிரங்கமாகவே பாராளுமன்றத்தில் (08) விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் சபை எந்த அதிகாரத்தின் கீழ் இயங்குகிறதென்ற இழுபறிகள் இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. எதைச் செய்தாலும் சர்வதேச கிரிக்கெட் சபையின் செல்வாக்கே மிகைக்குமென்ற கதையும் இல்லாமலில்லை. உலகக் கிண்ணத்தை 1996இல் அர்ஜுன ரணதுங்க தலைமையிலும் ரீ- 20 கிண்ணத்தை லசித் மலிங்க தலைமையில் 2012இலும் ஈட்டிய இலங்கையின் பெருமைகளுக்கு நடந்தவை என்ன?
ஊழல்வாதிகள், லஞ்சவாதிகள் மற்றும் போதைவாதிகளின் பிடியில் சிக்குமளவுக்கு தரம் குறைந்ததால், சமீபகால போட்டிகளிலும் வெற்றியின்றி வெட்கிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதுவே, கிரிக்கெட் ரசிகர்களின் ஆதங்கம். இது ஆத்திரமாக மாறாமலிருக்க, காத்திரமான பணிகள் செய்வது அரசியல் தலைமைகளின் பொறுப்பாகியுள்ளது. ரசிகர்களின் வாக்குகளுக்கு தீர்மானிக்கும் திராணியுள்ளதால், அரசியல் கட்சிகள் கவனமாக இதைக் கையாளலாம். அன்னம், தண்ணி உண்ணாமலே கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்கும் நம் நாட்டு ரசிகர்களுக்கெல்லாம் பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் ஒரு பொருட்டுமில்லை.
சர்வதேச கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் “டைம் அவுட்” முறையில் நமது வீரர் அஞ்சலோ மெத்தியுஸ் பங்களாதேஷ் அணியினரால் ஆட்டமிழக்கச் செய்ததை நோக்குகையில், விதி வேறு கருணை வேறு என்பதை உணர்த்துகிறது. இதற்காக, பங்களாதேஷ் அணியினரை கடிந்துகொள்வதா அல்லது ஆடுகளத்தில் நுழைந்து இரண்டு நிமிடங்களுக்குள் துடுப்பாட்ட வீரர் தயாராக வேண்டுமென்ற விதியை இயற்றியவர்களை நொந்துகொள்வதா? வெற்றிக்காக சட்டத்திலுள்ள சகலதையும் பயன்படுத்தத் தூண்டுவதுதான் விளையாட்டு. ஆனால், இப்படிப் பெறும் அல்லது பெற்றுக்கொண்ட வெற்றிப் பெருமைகளுக்கு இலங்கையில் நடப்பது என்ன? 13ஆவது தடவையாக நடைபெறும் இவ்வுலகக்கிண்ணப் போட்டியில், மேற்கிந்தியதீவு கலந்துகொள்ளாத போட்டியிது. இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற அணிக்கு இந்நிலை ஏன் வந்தது? இலங்கையும் எதிர்காலத்தில் இந்நிலைக்குச் செல்லுமா?
முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் முயற்சியில், 1982இல் நமது நாட்டுக்கு டெஸ்ட் போட்டி அந்தஸ்து கிடைத்ததிலிருந்து 1996 வரைக்கும் கிரிக்கெட் உலகின் பார்வை நமது நாட்டுப்பக்கம் தலைகாட்டவே இல்லை. 14 வருடங்களின் பின்னர் தலைநிமிர்ந்த ஶ்ரீலங்கா கிரிக்கெட் மீண்டும் 15 வருடங்களின் பிறகு ஔியிழந்து வருகிறது. இத்தனைக்கும் உலகக் கிண்ணங்களை ஈட்டுமளவுக்கு இலங்கையில் தரமுயர்ந்த விளையாட்டும் கிரிக்கெட்தான்.
1952இல் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற Dr.எதிர்வீரசிங்கம், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் போன்றவர்களின் திறமைகளால் பேதங்களைக் கடந்து, நாட்டுப்பற்றில் ஒன்றிக்கும் உணர்வுகளை விளையாட்டுக்களே ஏற்படுத்துகின்றன. இதில், கிரிக்கெட் தனியிடத்தில். இப்படியுள்ள இந்தக் கிரிக்கெட், பாராளுமன்றம் எடுத்துள்ள முடிவால் சர்வதேச தரத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதே! இதற்குப் பொறுப்புக் கூறுவது யார்?
சுஐப்.எம். காசிம்