Sunday, April 28, 2024
Home » பாரம்பரிய பயிர் விதை வங்கி திட்டம் அங்குரார்ப்பணம்

பாரம்பரிய பயிர் விதை வங்கி திட்டம் அங்குரார்ப்பணம்

by damith
November 13, 2023 6:26 pm 0 comment

உணவுப் பஞ்சம், நஞ்சற்ற உணவு ஆகியவற்றைத் தவிர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்த பாரம்பரிய விதை வங்கித் திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உணவுப் பஞ்சம், நஞ்சற்ற உணவு ஆகியவற்றைத் தவிர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் பாரம்பரிய விதை வங்கித் திட்ட அமுலாக்கம் செய்யப்படுவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

இதற்கென கிழக்கு மாகாணத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 40 கூட்டுறவுச் சங்கங்களிலுள்ள பாரம்பரிய உள்ளூர் விவசாயிகளான 200 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – கதிரவெளி திக்கானை கிராம மட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்காக பாரம்பரிய விதை வங்கியை ஆரம்பித்து விதைத் தேங்காய்கள், தென்னங்கன்றுகள், பயிர் விதைகள் ஆகியவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு அமைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரனின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் 4000 விதைத் தேங்காய்கள் நாற்றிடப்பட்டு வாகரைப் பிரதேசத்துக்கான பாரம்பரிய விதை வங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும், பயனாளிகளான 60 விவசாயிகளுக்கு தலா 1500 ரூபா பெறுமதியான கத்தரி, கறிமிளகாய், கீரை, தக்காளி, பீர்க்கு, சிறகவரை, பாகல், பயற்றை, வெண்டி உள்ளிட்ட பாரம்பரிய உள்ளூர் பயிர் விதைகளும் மேலும் 55 பயனாளிகளுக்கு தலா 20 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வை ஆரம்பித்து வைத்து கிராம கூட்டுறவுச் சங்க விவசாயிகள் மத்தியில் கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் திலீப்குமார், இளைஞர் அபிவிருத்தி அகம், கிழக்கு மாகாண ரீதியாக சமூக, பொருளாதார, அபிவிருத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை விருத்தி செய்து வருகிறது. கிராம மட்டக் கூட்டுறவுச் சங்கங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிலைபேறான அபிவிருத்தியை அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இங்கு நாற்று மேடைகளில் முளைப்பிக்கச் செய்யப்படும் தென்னங்கன்றுகள் பிரதேசத்திற்கு ஏற்ற, காலநிலைக்கு ஈடுகொடுத்து வளரக் கூடிய, பாரம்பரிய, தேங்காய் விதைகளாகும். மேலும், இவற்றை வெளியிலிருந்து அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்து நடுகை செய்யாமல் கிராம மக்கள் தாங்களே உற்பத்தி செய்து உள்ளூரில் நாட்ட முடியும்.

இதன் மூலம் கிராமங்களில் பல பேருக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்களும் வருமானமும் ஈட்டக் கூடியதாகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT