Saturday, April 27, 2024
Home » சகவாழ்வு நல்லெண்ணத்துக்கு நபிகளாரின் வழிகாட்டல்கள்
இன்று மீலாத் தினம்

சகவாழ்வு நல்லெண்ணத்துக்கு நபிகளாரின் வழிகாட்டல்கள்

by gayan
September 28, 2023 5:04 am 0 comment

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கா, மதீனாவில் யூதர்கள், உருவவழிபாட்டில் ஈடபடக் கூடியவர்கள் என பல சமூகத்தவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் அனைவருடனும் அன்புடனும் கருணையுடனும் இரக்கத்துடனுமே நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்டார்கள். அதன் ஊடாக மாற்றுமத மக்களின் உள்ளங்களிலும் அன்னார் அழகான இடத்தைப் பிடித்திருந்தார்கள்.

இன்று உலகில் இனங்களுக்கிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் பலவிதமான குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்படுகின்றன. ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழாததன் விளைவே இது. மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள் மாற்றுமத சகோதர மக்களுடனும் நல்லெண்ணத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்தார்கள். அதற்கான முன்மாதிரியை வழங்கினார்கள்.

ஹுதைபியாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கையில் மாற்றுமத மக்களுடன் நபிகளார் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்து செயற்பட்டார்கள் என்பது மறைக்க முடியாத உண்மையாகும். அந்த ஒப்பந்தத்தில் சிலபகுதிகள் முஸ்லிம்களுக்கு பாதகமாய் தோன்றின. என்றாலும் அவ் ஒப்பந்தத்துக்கு அன்னார் இணங்கினார்கள்.

ஒரு தடவை அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) என்ற நபித்தோழர் வீட்டில் ஓர் ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் ‘நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? என்று கேட்டார்கள். ‘அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் (அலை) எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக அவர் தெரிவித்தார். (ஆதாரம்: திர்மிதி)

இந்த நபிமொழியானது அந்நியராக இருந்தாலும் அண்டை வீட்டாருக்கு உதவி ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. அண்டை வீட்டாரைக் கவனிப்பதில் மதத்தை அடிப்படையாகக் கொள்ளக் கூடாதென்பது நபிகளாரின் அழகிய நடைமுறையாகும்.

நபி(ஸல்) அவர்களிடம் யூதர் ஒருவர் பணிபுரிந்தார். அவர் நோய்வாய்ப்பட்ட போது அவரை சுகம் விசாரிக்கவென நபிகளார் அவரது வீட்டுக்கு சென்றார்கள். அந்த யூதப் பணியாளரின் தந்தைக்கு அருகில் அன்னார் அமர்ந்தார்கள். ‘நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே’ என்று அவரிடம் கூற அவரது தந்தையும் அருகில்தான் இருந்தார். அவ்விளைஞர் தந்தையைப் பார்த்தார். ‘நபி(ஸல்) அவர்கள் கூறுவதைக்கேள்’ என்று தந்தை கூறியதும் அவ்விளைஞர் இஸ்லாததை ஏற்றுக் கொண்டார். ‘இவரை நரகிலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறிக்கொண்டே நபிகளார் வெளியேறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

நபிகளாரை யூதர்கள் வஞ்சக எண்ணத்துடன் நோக்கிய காலம் அது. என்றாலும் நபிகளாரின் செயல்முறை காரணமாகவே அன்னாரை அவர்கள் நேசித்தனர். தன் பணியாளாக யூத மதத்தினர் இருக்கக்கூடிய அளவுக்கு அன்னார் பிறமதத்தவருடன் மிக இணக்கமாக நடந்து கொண்டார்கள்.

யூதர்களுடன் நபிகளார் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்துக்கு வரவில்லை என்று அவர்களுடன் அன்னார் மோதிக் கொள்ளவில்லை. நபி (ஸல்) அவர்கள் தமது இரும்புக் கவசத்தை ஒரு யூதனிடம் அடமானமாக வைத்து அவனிடம் உணவுப் பொருட்களைக் கடனாக பெற்று இருந்தார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

‘ஒரு தடவை நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து பிரேத ஊர்வலமொன்று சென்ற போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். ‘இது யூதருடைய பிரேதம்’ என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அதுவும் ஒரு உயிர் அல்லவா? என்று கூறினார்கள்.

(ஆதாரம்: புஹாரி , முஸ்லிம்)

இந்நபிமொழியானது நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை அவர்கள் இறந்த பின்னரும் கூட மரியாதை செய்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தம் உயர்நடத்தையால் யூதர்களின் உள்ளங்களை அன்னார் வென்றார்கள். இத்தகு செயல்களை நாமும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் நபி(ஸல்) அவர்களை எதிரிகள் கொல்ல சதித் திட்டம் தீட்டியபோது அல்லாஹ் தன் திருத்தூதரை உடனடியாக மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ய அனுமதி கொடுத்தான். அப்போது மதீனா வரை குறுக்குப் பாதையூடாகச் செல்ல வழிகாட்டியாக நபிகளார் அழைத்துச் சென்றது அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் என்ற முஸ்லிம் அல்லாத ஒருவரையாவார். (ஆதாரம்: புஹாரி)

ஆபத்தான சூழல், எதிரிகள் நபிகளை விரட்டிக் கொலை செய்ய முயற்சிக்கும் நிலை. அதே எதிரிகளைச் சேர்ந்த ஒருவரான அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் என்பவரை தாம் தப்பிச் செல்லக் கூலிக்குப் பிடித்திருந்தார்கள் என்றால் நபிகளாரின் மூலோபாயம் எத்தகையது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாற்று மதத்தவர்களுடன் சந்தேகங்களுடனும் ஐயங்களுடனும் நடந்துகொள்ளும் சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளன. விட்டுக்கொடுக்காத தன்மையும், அவசரச் செயற்பாடும்தான் இவற்றுக்குக் காரணமாகும். நபி(ஸல்) அவர்களது வாழ்வுகாட்டும் முன்மாதிரிகள் பூரணமாகப் பின்பற்றப்பட்டால் இவ்வாறான நிலைமை ஏற்படாது.

எனவே நபிகளார் மாற்றுமதத்தினரை அன்பினால் அரவணைத்தும் அவர்களை மதித்தும், விட்டுக்கொடுத்தும் நட்பு ரீதியாகவும் நடந்து கொண்ட பாங்கு நமக்கெல்லாம் நல்ல படிப்பினை என்றால் அது மிகையாகாது.

மௌலவி எம்.யூ.எம். வாலிஹ்…

(பாரி, அல் அஸ்ஹரி) வெலிகம

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT