Wednesday, May 8, 2024
Home » நெருக்கடியான காலத்தில் IMF நிச்சயம் உதவும்
இலங்கையின் பொருளாதாரத்தில் தற்போது சாதக நிலை

நெருக்கடியான காலத்தில் IMF நிச்சயம் உதவும்

இலங்கை வந்துள்ள IMF தூதுக்குழுவின் தலைவர் Peter Breuer தெரிவிப்பு

by gayan
September 28, 2023 5:14 am 0 comment

கடினமான எனினும் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதென்றும் தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதாரத்தில் சாதகமான சில நிலமைகள் காணப்படுவதுடன் மேலும் சில துறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமென சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி தலைவர் பீற்றர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியுள்ள கடன் சலுகைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு

நேற்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது.

அந்த சந்தர்ப்பத்திலேயே அந்தக் குழுவின் தலைவர் பீற்றர் ப்ரூவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விரைவில் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக முதலாவது மீளாய்வுக் குழு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றது.

அத்துடன் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் இலங்கைக்கு உதவுவதற்கு நாம் விருப்பத்துடன் உள்ளோம்.

முதலாவது மீளாய்வில் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு மேலும் சில காலம் அவசியமாகின்றது.

அதற்கிணங்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மூலம் இணக்கப்பாடு காணப்பட்டுள்ள 2.9 பில்லியன் டொலர் கடன் தொகையில் இரண்டாவது தவணை வழங்கப்படுவது தாமதமாகலாமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், அதற்கான காலவரையறையை தெரிவிக்கமுடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடினமான எனினும் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டுத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

பணவீக்கமும் குறைவடைந்துள்ள நிலையில் பொருளாதார நிலையான தன்மைக்கான தற்காலிக அறிகுறிகள் தென்படுவதால் இத்தகைய முயற்சிகள் பலன் அளிக்கின்றன.

2022 செப்டம்பர் மாதத்தில் 70 சத வீதமாக இருந்த மொத்த சர்வதேச கையிருப்பு இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் 1.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நீங்கியுள்ளதுடன் நிலையான முன்னேற்றம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கிய சீர்திருத்த வேகம் அதிகரிப்பது முக்கியமாகும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுதல், வறுமை நிலையில் உள்ளோர் மற்றும் பாதிக்கப் ப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்தல், ஊழல் மோசடிகளுக்கு தீர்வு காணுதல், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைகளை மீட்டெடுப்பதிலும் இலங்கை தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த தூதுக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. அதன் போது சர்வதேச நாணய நிதியத்தின் பல நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த பிரதிநிதிகள் உள்ளூர் கடன் மறு சீரமைப்பின் முன்னேற்றம் தொடர்பில் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் இந்த வருட வருமான பற்றாக்குறை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது கவலையை வெளியிட்டுள்ளதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் நிதியத்தின் தலைமை செயலகத்துடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர்கள் அதன் போது குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT